நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்திருக்கிறது மத்திய பா.ஜ.க அரசு.

அமித் ஷா

அண்டை நாடுகளான வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து 2014, டிசம்பர் 31-க்கு முன்பாக இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிகள், கிறிஸ்துவர்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தச் சட்டம் வழிவகை செய்கிறது.

இந்த சட்ட மசோதா 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றது. குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த எந்தவொரு சட்டத்தையும் அமல்படுத்துவதற்கான விதிகள் ஆறு மாதங்களுக்குள் வெளியிடப்பட வேண்டும். ஆனால், இந்தச் சட்டத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. டெல்லியில் ஷாகீன்பாக் உட்பட நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.

CAA-NRC-NPR

அந்த நேரத்தில், இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று பரவியதைத் தொடர்ந்து போராட்டங்கள் முடிவுக்கு வந்தன. ஆனாலும், சி.ஏ.ஏ-வுக்கு நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பால், சி.ஏ.ஏ சட்டத்தை உடனடியாக அமல்படுத்தாமல் கிடப்பில் போட்டது மத்திய பா.ஜ.க அரசு. தற்போது, தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், சி.ஏ.ஏ-வை மத்திய அரசு நடைமுறைக்குக் கொண்டுவந்திருக்கிறது.

ஆனால், `இந்தச் சட்டத்தை எங்கள் மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம்’ என்று தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், பீகார், ராஜஸ்தான், ஆந்திரா, சத்தீஸ்கர், பஞ்சாப் உட்பட ஒன்பது மாநிலங்கள் ஏற்கெனவே அறிவித்தன.

‘சி.ஏ.ஏ-வை நடைமுறைக்குக் கொண்டுவர உரிய விதிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக சி.ஏ.ஏ அமல்படுத்தப்படும்’ என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவ்வப்போது சொல்லிவந்தார். இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம், ‘நாடு முழுவதும் ஏழு நாள்களில் சி.ஏ.ஏ அமலுக்கு வரும்’ என்று அறிவித்தார் மத்திய இணை அமைச்சர் சந்தானு தாக்கூர்.

முதல்வர் ஸ்டாலின்

அப்போது, ‘முஸ்லிம்களுக்கும், இலங்கை தமிழர்களுக்கும் சி.ஏ.ஏ எதிராக இருக்கிறது. எனவே, தமிழ்நாட்டில் ஒருபோதும் சி.ஏ.ஏ-வை அமல்படுத்த மாட்டோம்’ என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். மேலும், ‘சி.ஏ.ஏ சட்டத்தைத் தமிழ்நாட்டு மண்ணில் கால்வைக்க விட மாட்டோம் என்று மக்களுக்கு உறுதியளிக்கிறேன். தமிழ்நாட்டில் சி.ஏ.ஏ-வுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்கள் நடைபெற்றன. 2021-ம் ஆண்டு தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன், சி.ஏ.ஏ-வை வாபஸ் பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம்’ என்றார் ஸ்டாலின்.

இதேபோல, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ‘நான் உயிருடன் இருக்கும்வரை, மேற்கு வங்கத்தில் சி.ஏ.ஏ-வை நடைமுறைப்படுத்த அனுமதிக்க மாட்டேன்’ என்று உறுதியாகத் தெரிவித்திருக்கிறார். தற்போது, `சி.ஏ.ஏ நடைமுறைக்கு வருகிறது’ என்று மத்திய அரசு அறிவித்திருக்கும் நிலையில், ‘தமிழ்நாட்டில் சி.ஏ.ஏ அமல்படுத்தப்பட மாட்டாது’ என்று முதல்வர் ஸ்டாலின் மீண்டும் அறிவித்திருக்கிறார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன்

அதேபோல, கேரளாவின் முதல்வர் பினராயி விஜயனும், `எங்கள் மாநிலத்தில் சி.ஏ.ஏ-வை அமல்படுத்த மாட்டோம்’ என்று அறிவித்திருக்கிறார்.

“முஸ்லிம் சிறுபான்மையினரை இரண்டாம் தரக் குடிமக்களாகக் கருதும் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை, கேரளாவில் அமல்படுத்த மாட்டோம் என்று அரசு தொடர்ந்து கூறிவருகிறது. அதைத்தான் இப்போதும் அடிக்கோடிட்டுக் கூறுகிறோம். இந்த வகுப்புவாதச் சட்டத்தை எதிர்ப்பதில் கேரளா முழுவதும் ஒன்றுபட்டு நிற்கும்” என்கிறார் பினராயி விஜயன்.

அதேநேரத்தில், ‘மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை அமல்படுத்த முடியாது என்று ஒரு மாநில அரசு மறுத்தால், அது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. அரசியலமைப்புச் சட்டம் வகுத்திருக்கும் கூட்டாட்சித் தத்துவத்தின்படி, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்களை நிறைவேற்றவேண்டிய கடமை மாநில அரசுகளுக்கு இருக்கிறது’ என்ற சட்டரீதியான வாதம் மத்திய அரசின் தரப்பில் முன்வைக்கப்படுகிறது.

ஷாகீன்பாக் போராட்டம்

மேலும், ‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 7-வது அட்டவணைப்படி, ‘குடியுரிமை’ என்கிற அம்சம் மத்திய அரசின் அதிகாரத்தின்கீழ் வருகிறது. எனவே, குடியுரிமை தொடர்பான விவகாரங்களில் சட்டம் இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே இருக்கிறது. குடியுரிமை தொடர்பான விவகாரங்களில் மத்திய அரசால் நிறைவேற்றப்படும் சட்டங்களை நீர்த்துப்போகச் செய்வதற்கான அதிகாரம் மாநிலங்களுக்கு இல்லை’ என்று பா.ஜ.க தரப்பு கூறுகிறது.

பல விவகாரங்களில் பா.ஜ.க-வுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட மூத்த வழக்கறிஞரான கபில் சிபிலும், அதே கருத்தைத் தெரிவித்திருக்கிறார். அதாவது, ‘சி.ஏ.ஏ-வை அமல்படுத்த முடியாது என்று மாநில அரசு மறுக்க முடியாது. அது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது’ என்று 2020-ம் ஆண்டு கபில் சிபல் கூறியிருக்கிறார்.

மோடி

மேலும், ‘சி.ஏ.ஏ-வை மாநில அரசு எதிர்க்கலாம். அந்தச் சட்டத்தை வாபஸ் பெறுமாறு மத்திய அரசை வலியுறுத்திச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றலாம். ஆனால், அந்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று சொல்வது பெரும் சிக்கலை ஏற்படுத்துவதுடன், பல பிரச்னைகளை உண்டாக்கும்’ என்றும் கபில் சிபில் கூறியிருக்கிறார்.

‘மத்திய அரசு நிறைவேற்றிய சட்டம் என்பதால், அதை மாநிலங்கள் அமல்படுத்துவதைத் தவிர வேறு வழியே இல்லை’ என்பது சட்டரீதியாக யதார்த்தம். ஆனால், `சி.ஏ.ஏ-வை அமல்படுத்த மாட்டோம்’ என்று கூறும் மாநிலங்கள், சமூக நல்லிணக்கம் சார்ந்தும், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக்கூறுகளில் ஒன்றான மதச்சார்பின்மைக்கு பங்கம் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற அக்கறையில் இருந்தும் இப்படியொரு நிலைப்பாட்டை எடுத்திருப்பதாகக் கூறுகிறார்கள்.

முதல்வர் ஸ்டாலின்

ஆகையால்தான், சட்ட ரீதியான வாதங்களுக்குள் போகாத முதல்வர் ஸ்டாலின், ‘இந்திய மக்களிடையே பேதங்களைத் தோற்றுவிக்க வழிவகுக்கும் சி.ஏ.ஏ-வால் எந்தவிதமான நன்மையோ, பயனோ கிடைக்கப்போவதில்லை. மத்திய அரசு நிறைவேற்றியிருக்கும் இந்தச் சட்டத்தை மாநிலத்தில் நிறைவேற்ற தமிழ்நாடு அரசு எந்த வகையிலும் இடமளிக்காது’ என்று கூறியிருக்கிறார்.

சட்டரீதியிலான இந்தச் சிக்கல் குறித்து அரசியல் திறனாய்வாளரும், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான பாலசந்திரனிடம் பேசினோம். “தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உட்பட எதிர்க்கட்சிகள் ஆளுகிற மாநிலங்களின் முதல்வர்கள் தங்கள் மாநிலங்களில் சி.ஏ.ஏ-வை அமல்படுத்த மாட்டோம் என்று அறிவித்திருக்கிறார்கள். ஆனால், மத்திய அரசு ஒரு சட்டம் இயற்றினால், அதை அனைத்து மாநிலங்களும் அமல்படுத்தித்தான் ஆக வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தின்படி, இதுதான் நடைமுறை. இப்படியான நிலையில், மத்திய அரசு நிறைவேற்றிய சி.ஏ.ஏ-வை மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று சொல்வது ஒருவித மோதல் போக்கை உருவாக்கும்.

பாலசந்திரன்

சி.ஏ.ஏ., அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது, இதைத்தான் அதை எதிர்க்கும் மாநில முதல்வர்கள் கூறுகிறார்கள், ‘இது மதச்சார்பின்மை கொண்ட நாடு. எனவே, இங்கு மதப் பாகுபாடு கூடாது. இஸ்லாமியர்களை மட்டும் அனுமதிக்க மாட்டோம் என்று சொல்வது தவறு. ஏனெனில், முஸ்லிம்களிலேயே ஷியா, சன்னி என்று இரு பிரிவுகள் இருக்கின்றன. ஷியா பிரிவினர் பெரும்பான்மையாக இருக்கும் இடங்களில், சன்னி பிரிவினர் ஒடுக்கப்படுகிறார்கள். அதேபோல, சன்னி பிரிவினர் பெரும்பான்மையாக இருக்கும் இடங்களில் ஷியா பிரிவினர் ஒடுக்கப்படுகிறார்கள். எனவே, முஸ்லிம்களும் மதரீதியாக ஒடுக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது, அவர்களை மட்டும் அனுமதிக்க முடியாது என்று எப்படிச் சொல்ல முடியும்?’ என்பது சி.ஏ.ஏ-வை எதிர்க்கும் மாநிலங்களின் கருத்தாக இருக்கிறது. எனவே, சி.ஏ.ஏ அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று இந்த மாநிலங்கள் நீதிமன்றத்தை அணுகலாம். ஏன் அணுகவில்லை என்று தெரியவில்லை. இதில், அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்கிறார் பாலசந்திரன் ஐ.ஏ.எஸ்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.