மும்பையில் புறநகர் ரயில்களில் அடிபட்டு தினமும் ஐந்து பேராவது உயிரிழந்து கொண்டிருக்கின்றனர். அவர்களில் பலர் அடையாளம் காணப்படுவதில்லை. கடந்த சில நாள்களுக்கு முன்பு மும்பை சி.எஸ்.டி.எம் ரயில் நிலையத்திலிருந்து கோரேகாவ் வந்த ரயிலின் லக்கேஜ் பெட்டியில் பயணி ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். இது குறித்து மற்ற பயணிகள் ரயில்வே போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். ரயில்வே போலீஸார் மயங்கிக்கிடந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை சோதித்து பார்த்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அதையடுத்து அவர் உடலை பிரேத பரிசோதனை செய்து பார்த்ததில், அவர் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு இறந்திருந்தார் என்பது தெரியவந்தது. எப்படி லக்கேஜ் பெட்டிக்கு இறந்து கிடந்தவர் வந்தார் என்பது குறித்து விசாரிக்க போலீஸார் தனிப்படை அமைத்தனர்.

சி.எஸ்.டி.எம் ரயில் நிலையத்தில் இருந்து கோரேகாவ் வரையுள்ள ரயில் நிலையங்கலில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அவரிடம் ஆதார் கார்டு இருந்ததால் அவர் யார் என்பது அடையாளம் காணப்பட்டு, அவரது உறவினரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. போலீஸாரின் விசாரணையில் பிப்ரவரி 15-ம் தேதி அலாவுதின் என்பவர் சிவ்ரி ரயில் நிலையத்தில் இருந்து சி.எஸ்.டி.எம் ரயில் நிலையம் செல்லும் ரயிலில் ஏறியுள்ளார்.

அவர் ரே ரோடு ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தார். அவர் திடீரென இருக்கையில் இருந்து மயங்கி கீழே விழுந்தார். அங்கிருந்த காவலர்கள் விஜய் மற்றும் மகேஷ் ஆகியோர் மயங்கி விழுந்த நபருக்கு மருத்துவ உதவி கொடுக்காமல், மற்றொரு நபரின் துணையோடு அந்த வழியாக வந்த புறநகர் ரயில் ஒன்றின் சரக்கு பெட்டியில் மயங்கி விழுந்த நபரை தூக்கி போட்டு அனுப்பிவிட்டனர்.

அந்த ரயில் மறுநாள் காலை 8:15 மணிக்கு கோரேகாவ் ரயில் நிலையத்திற்கு வந்தபோதும், அந்த நபர் ரயிலில் மயங்கிய நிலையில் கிடந்தார். அதன் பிறகே பயணிகள் இது குறித்து ரயில்வே போலீஸாரை உஷார்படுத்தினர்.

மயங்கி விழுந்த நோயாளிக்கு சிகிச்சை கொடுக்காமல் சரக்கு பெட்டியில் தூக்கிப்போட்டு அனுப்பிய இரண்டு கான்ஸ்டபிள்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மரணம்

அதோடு இருவரும் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரித்த போது மயங்கிக் கிடந்தவர் அளவுக்கு அதிகமான மது அல்லது போதைப்பொருள் மயக்கத்தில் இருக்கலாம் என்று நினைத்துவிட்டதாகத் தெரிவித்தனர். மயங்கி விழுந்த நபருக்கு சரியான நேரத்தில் சிகிச்சை கொடுத்திருந்தால், அவர் உயிர் பிழைத்திருக்கலாம். ஆனால் போலீஸாரின் கவனக்குறைவால் இறந்துவிட்டார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.