அனைவருக்கும் பசுமை வணக்கம்!

வேளாண் விளைபொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாயிகளின் போராட்டம் தலைநகர் டெல்லியை, இரண்டாவது முறையாக அதிர வைத்துக்கொண்டுள்ளது.

‘‘தற்போதைய போராட்டம், நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்தே தொடங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ்தான் விவசாயிகளைத் தூண்டி விட்டுள்ளது’’ என்று மத்திய வேளாண் அமைச்சர் அர்ஜுன் முண்டா குற்றம்சாட்டி தப்பிக்கப் பார்க்கிறார். ஆனால், இந்தப் போராட்டத்தைத் தூண்டிவிட்டதே ஆளும் பா.ஜ.க என்பதுதான் உண்மை.

விவசாயிகள் விஷயத்தில் அரசியல் செய்வதே… அரசியல்வாதிகள்தான். காங்கிரஸ் காலம்தொட்டே இதுதான் இங்கே வரலாறு. இந்திரா காந்தி தொடங்கி அடுத்தடுத்து அறுதிப்பெரும்பான்மையோடு ஆட்சியைப் பிடித்த காலங்களில் எல்லாம்… சர்வாதிகாரிகளாகவே நடைபோட்டார்கள் காங்கிரஸ் ஆட்சியாளர்கள். கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சேவகம் செய்வதற்காக, விவசாயிகளை வதைப்பதைத்தான் முதன்மையாகக் கொண்டு செயல்பட்டார்கள்.

இடையில் கூட்டணி ஆட்சிகள் மலர்ந்தபோதுதான்… ஓரளவுக்கு விவசாயிகளால் நிம்மதி பெருமூச்சுவிட முடிந்தது. குறைந்தபட்சம் அவர்களுடைய குரலுக்கு காதுகொடுக்கவாவது செய்தார்கள்.

எடுத்துக்காட்டாக… விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்தும்போது, ‘ஜப்தி ரேட்’கூட கொடுக்காத சூழலில்… சந்தை விலைக்கும் மேலான விலையைக் கொடுக்க வேண்டும் என்றொரு சட்டத்தையே அமல்படுத்தினார் பிரதமராக இருந்த மன்மோகன் சிங். காரணம்… கூட்டணிக் கட்சிகள் கொடுத்த அழுத்தமே!

அடுத்து, அறுதிப்பெரும்பான்மை என்கிற தெம்புடன் பா.ஜ.க ஆட்சியைப் பிடிக்க… மீண்டும் சர்வாதிகாரம் தலைத்தூக்க ஆரம்பித்துவிட்டது. கடந்த முறை விவசாயிகள் போராடியபோது, கடைசிவரை பிடிவாதம் பிடித்தார் பிரதமர் நரேந்திர மோடி. விவசாயிகளை மனிதர்களாகக்கூட மதிக்கவில்லை. ஆனால், ஐந்து மாநில தேர்தல் நெருங்கியதால், விவசாயிகளால் கடுமையாக எதிர்ப்புக்கு ஆளான மூன்று சட்டங்களை அப்போது திரும்பப் பெற்றார். கூடவே, ‘குறைந்தபட்ச ஆதரவு விலைச் சட்டம் நிறைவேற்றப்படும்’ என்ற உத்தரவாதத்தையும் கொடுத்தார். ஆனால், தேர்தல் முடிந்தபிறகு, பழையபடி ‘கார்ப்பரேட் கரசேவை’யை ஆரம்பித்துவிட்டார்.

ஆக, விவசாயிகளை மீண்டும் போராடும் நிலைக்குத் தள்ளியதே ஆளும் பா.ஜ.க-தான். விவசாய விளைபொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயரும்போது, ‘கட்டுப்படுத்துகிறேன்’ என்று சொல்லி, ஏற்றுமதிக்குத் தடை விதிக்கிறது மத்திய அரசு. அதேசமயம், விளைச்சல் அதிகரித்து விலை குறையும்போது ஆதரவு கொடுத்து விவசாயிகளைத் தூக்கிவிட மட்டும் மறுக்கிறது.

ரேடியோ, டிவி, இணையதளம் என்று எதைத் தட்டினாலும்… ‘மோதி சர்க்கார்… கியாரன்ட்டி’ என ஓங்கி ஒலிக்கும் விளம்பரங்களில் மட்டும்தான் வாழ்கிறார்கள் விவசாயிகள். நிஜத்தில் உலக வர்த்தக நிறுவனத்தையும் கார்ப்பரேட் நிறுவனங்களையும்தான் வாழ வைக்கிறது மோதி சர்க்கார்.

விவசாயிகளின் வாழ்க்கையோடு மோதிப் பார்க்க வேண்டாமே மோதி. அது, நாட்டின் அஸ்திவாரத்தையே ஆட்டிப்பார்த்துவிடும் ஜாக்கிரதை!

– ஆசிரியர்

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.