பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் 72 வயதான முதியவர் ஒருவர் தனது வீட்டையே நூலகமாக மாற்றியமைத்திருக்கிறார்.

பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள மணிலாவில் ‘ஹெர்னாண்டோ குவான்லாவோவின்’ என்ற 72 வயதான முதியவர், தனது இரண்டு அடுக்குமாடி வீட்டை அனைவரும் பயன்பெறும் வகையில் பொது நூலகமாக மாற்றியுள்ளார். அங்கு யார் வேண்டுமானாலும் புத்தகங்களை இலவசமாகக் கடன் வாங்கலாம் என்றும் ‘இங்கு மிகச்சிறந்த புத்தகங்கள் நிறைந்து கிடக்கின்றன. அதனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்’ என்ற வாசகத்தையும் நூலகத்தின் முகப்பில் தொங்கவிட்டுள்ளார்.

ஹெர்னாண்டோ குவான்லாவ் | நூலகம்

‘வாசிப்பு குழு 2000’ என்று அழைக்கப்படும், குவான்லாவின்  நூலகத்தில் பல்வேறு வகையான புத்தகங்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, “பிலிப்பைன்ஸ் மாணவர்களிடையே வாசிப்புத் திறன் குறைவாக இருப்பதாகவும், மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த வேண்டுமென்றும், மக்கள் தங்களின் சுக-துக்கங்களில் புத்தகங்களைப் படிப்பதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்க முடியும்” என்கிறார். குறிப்பாக, ஆர்வமுள்ள இளம் வாசகர்களுக்கும், படைப்பாளர்களுக்கும் இந்த நூலகம் பெரிதும் பயன்படுவதோடு அவர்களின் வாசிப்பு ஆர்வத்தை மேம்படுத்தும்” என்கிறார்.

அவரது இந்நூலகத்தில் அடிப்படை நிலையிலிருந்து புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கென்று அனிமேஷன், பாடல் மற்றும் குறுங்கதை புத்தங்கள் இங்கு வரிசை படுத்தப்பட்டுள்ளது.  அதேபோல் புத்தக ஆர்வலர்கள் மற்றும் மாணவர்களைக் கவரும் விதமாக நாவல்கள், அரசியல் சார்ந்த புத்தகங்கள், நெடுங்கதைகள், வரலாற்று நூல்கள் என அனைவரின் விருப்பத்திற்கும், அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில் 72 வயதான குவான்லாவ் தன் வீட்டில் ஆயிரக்கணக்கானப் புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கிறார்.

இது குறித்து கூறும் அவர், “மதம் சார்ந்து ஆய்வு செய்பவர்கள் மற்றும் அதுசார்ந்து உண்மையான தேடல் உள்ளவர்களுக்கு ஆன்மிகப் புத்தகங்கள், சுயசரிதைகள், உலக அளவில் பேசப்படும் பல்வேறு எழுத்தாளர்களின் பல வகையான புத்தகங்கள், அறிவியல், பொருளாதார, பொது அறிவு நூல்கள் என அனைத்தும் இலவசமாக அனைவரும் பயன்படுத்தும் வகையில் இந்த நூலகம் அமைந்திருக்கிறது” என்கிறார்.

ஹெர்னாண்டோ குவான்லாவ் | நூலகம்

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தனது வீட்டிற்கு அருகில் உள்ள நடைபாதையில் 50 புத்தகங்களை வைத்து ஒரு சிறிய நூலகத்தை ஆரம்பித்துள்ளார் புத்தக வாசிப்பாளரும், புத்தக சேகரிப்பாளருமான குவான்லாவ். அதன்பிறகு, பல ஆண்டுகளாக தான் சேகரித்த, தனக்கு பரிசளித்த, நன்கொடையாக பெறப்பட்ட புத்தகங்களைக் கொண்டு தனது வீட்டையே தற்போது நூலகமாக்கியுள்ளார்.

மாணவர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்துவதே தனது நோக்கம் என்பவர், “சர்வதேச அளவில் பிலிப்பைன்ஸில் உள்ள மாணவர்கள் கணிதம், அறிவியல் மற்றும் வாசிப்பு மதிப்பெண்களுடன் கற்றல் பின்னடைவை எதிர்கொள்கிறார்கள்.  வறுமை காரணமாக பெரும்பாலான மாணவர்கள் புத்தகம் வாங்கிப் படிக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள். பயன்படுத்தப்பட்ட மற்றும் நன்கொடையாகப் பெற்ற புத்தகங்களை மற்றவர்களுக்கு எந்தச் செலவின்றி வழங்குகிறார். இலக்கியத்தின் மூலம் கல்வியையும், வாசிப்பையும் மேம்படுத்துவதே தனது நோக்கம்” என்று பெருமிதத்துடன் கூறுகிறார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.