தமிழகத்தில், நாடாளுமன்ற தேர்தல் பரபரப்பு, அரசியல் கட்சிகளுக்குள் கடும் அனலை கிளப்பியிருக்கிறது. தி.மு.க., அ.தி.மு.க. உள்பட ஏனைய பிற கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையை ஒருபக்கம் தீவிரமாக நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு எனும் பெயரில் மற்றொரு பக்கமாக மீண்டுமொரு தன் தர்மயுத்த போரை நடத்த தொடங்கியிருகிறார். இன்னும் சற்று கூடுதலாக, வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வேட்பாளர்களுக்கு எதிராக, தனது சார்பில் வேட்பாளர்களை களம் இறக்கும் முனைப்பிலும் அவர் செயல்பட்டு வருகிறார். இதற்காக வலுவான கூட்டணி நோக்கி காய் நகர்த்தும் ஓ.பன்னீர் செல்வம், சசிகலா ஆதரவுடன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், ஆகியோருடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திப்போம் என ஏற்கெனவே அறிவித்தார்.

ஓ.பன்னீர்செல்வம்

இந்நிலையில், பிணைப்பை மேலும் வலுவாக்க பா.ஜ.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வரும் தகவல்களும் தடதடக்கின்றன. நாடாளுமன்ற தேர்தலில் மட்டுமல்ல, சட்டமன்ற தேர்தலிலும் இனி பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கும் நிலையில், பா.ஜ.க.கூட்டணியில் அ.தி.மு.க. இல்லாத இடத்தை நிரப்பிட ஓ.பன்னீர்செல்வம் தரப்பு முயற்சித்து வருகிறது. ஆனால் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வை எதிர்பார்க்கும் பாஜக, ஓ.பன்னீர்செல்வத்துடனான தனிப்பட்ட கூட்டணியை விரும்பாமல் கூட்டணி பேச்சுவார்த்தையை தள்ளிபோடுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தனது குலதெய்வம் கோயிலுக்கு குடும்பத்துடன் வந்து பூஜை செய்திருக்கிறார்.

முதல்வர் பதவியை இழந்த சமயத்திலும், அ.தி.மு.க. பிளவுபட்ட நேரத்திலும், இரட்டை இலை சின்னத்துக்காக உச்ச நீதிமன்றத்தில் வழக்காடும் போதிலும் தனது குலதெய்வ கோயிலுக்கு தனியே வந்து பூஜைகள் செய்துவிட்டு காரியத்தை தொடங்கி ஓ.பன்னீர்செல்வம், இம்முறை மகன்கள், மருமகள்கள், பேரன், பேத்தி என ஒட்டுமொத்த குடும்பத்துடனும் குலதெய்வ கோயிலுக்கு வந்து சென்றிருக்கிறார்.

ஓ.பன்னீர்செல்வம்

இதுகுறித்து, ஓ.பன்னீர்செல்வம் அணி தொண்டர்களிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள செண்பகத்தோப்பு வனப்பகுதியில் இருக்கும் பேச்சியம்மன்- ராக்காச்சி அம்மன் கோவில் தான் ஓ.பன்னீர்செல்வத்தின் குலதெய்வ கோயில். இம்முறை குலதெய்வ கோயில் வழிபாட்டுக்கு முன்பாக, ராஜபாளையம் அருகே நீர்காத்த அய்யனார் கோயிலில் ஓட்டக்காரன் சாமியை தரிசனம் செய்தபின்பே குலதெய்வமான பேச்சியம்மன் கோயிலுக்கு வந்து சாமிதரிசனம் செய்தார்.

அதற்கு காரணம், புராண வரலாறுபடி ராக்காச்சி அம்மன் பேச்சி அம்மனின் சகோதரர்கள்தான் ராஜபாளையம் நீர்காத்த அய்யனார் கோயிலில் அருள்பாலிக்கும் சாமிகள். அதில் ஓட்டக்காரன் சாமியின் பெயர்தான் ஓ.பன்னீர்செல்வத்தின் தந்தையின் பெயர்.

ஓ.பன்னீர்செல்வம்

ஆகவே தனது தந்தையின் பெயர் காரண சாமியான ஓட்டக்காரனையும், நீர்காத்த அய்யனாரையும் முதலில் வணங்குவதுதான்‌ எடுத்தக்காரியங்களின் வெற்றிக்கு சித்தமாயிருக்கும் என நெருங்கியவர்கள் சொன்ன அறிவுரையின்படி குடும்பத்தினரை குலதெய்வக்கோயிலில் அமரவைத்துவிட்டு ஓ‌.பி.எஸ்.-ம், அவரின் தம்பி ஓ.ராஜாவும் மட்டும் தனியே அங்கு சென்று முதலில் சாமி தரிசனம் செய்தார்.

அதன்பின் தனது குலதெய்வமான பேச்சியம்மன் – ராக்காச்சி அம்மன் ஆகியோரை தரிசனம் செய்தனர். ஓ.ராஜாவின் பேத்திக்கு முடிக்காணிக்கை செலுத்தி வேண்டுதலையும் நிறைவேற்றியிருக்கிறார். குலதெய்வ அருள் மட்டுமல்லாமல், குலதெய்வ சாமிகளின் முன்னோர் மற்றும் மூத்தோர் அருளையும் சேர்த்து வேண்டியிருப்பதால் இனி எல்லாம் சுமுகமாக முடியும் என ஓ.பி.எஸ் நம்புகிறாராம்.

ஓ.பி.ஆர்.

அதுமட்டுமல்ல மஹா சிவராத்திரியை முன்னிட்டு முன்னிட்டு ஓ.பி.ரவீந்திரநாத் மட்டும் தனியே நேற்று மாலை திடீரென ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்திறங்கினார். தொடர்ந்து அவர் ஆன்மீக பயணமாக சதுரகிரி மலை மீது உள்ள சுந்தரமகாலிங்கம் சாமி கோயிலுக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக மலையடிவாரத்தில் உள்ள விஸ்வேஸ்வரர் தியான நிலையத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட அவர், சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகமும், திருநீறு அபிஷேகமும் செய்து மனமுருக வேண்டிக் கொண்டார்.

அபிஷேகம்

வழக்கமாக ஜெயபிரதீப்தான் ஆன்மிக பணிகளில் அதிக ஈடுபாட்டுடன் இருப்பவர். ஆனால் அவரை மிஞ்சும் அளவுக்கு ஓ.பி.ஆர்.நேற்று பயபக்தியுடன் பூஜையில் கலந்துக்கொண்டது‌ எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில், ஓ.பி.எஸ்.அணி சார்பில் அவரின் மகன்களில் யாரேனும் ஒருவர் விருதுநகரில் போட்டியிடலாம் என கணிப்புகள் இருக்கும்‌ நிலையில் ஓ.பி.ஆரின் தனிப்பட்ட விஜயம், ஆன்மிக ஈடுபாடு ஆகியவை, அவர் வேட்பாளராக களமிறங்குவதற்கான நகர்தலாக இருக்குமோ என சந்தேகிக்கிறோம்” என எதிர்பார்ப்பை கிளப்பினர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.