ஜனவரி மாதம் 2-ம் தேதி திருச்சிக்கும், ஜனவரி 19 முதல் 21-ம் தேதிவரை சென்னை, ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் ஆகிய இடங்களுக்கும் பிப்ரவரி 27, 28 திருப்பூர், தூத்துக்குடி, திருநெல்வேலிக்கும் வந்து சென்றார் பிரதமர் மோடி. ராமர் கோயில் பூஜை, மத்திய அரசின் திட்டங்களை தொடங்கிவைத்ததோடு பா.ஜ.க-வின் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்றிருந்தார்.

பிரதமர் மோடி

இந்நிலையில் 5வது முறையாக மார்ச் 4-ம் தேதி சென்னை YMCA மைதானத்தில் நடந்த ’தாமரை மாநாடு பொதுக்கூட்டத்தில்’ பங்கேற்று பேசினார். நிகழ்வில் தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட தமிழ்நாடு பா.ஜ.க நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டணிக் கட்சித் தலைவர்கள் த.மா.க வாசன், ஐ.ஜே.கே தலைவர்கள் பாரிவேந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுவதற்கு முன் பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், `நம் குடும்பம், மோடியின் குடும்பம்’ என கோஷம் எழுப்ப செய்தார். பின்னர் பேசிய அண்ணாமலை, `நம் குடும்பம் எனச் சொல்ல `மோடி குடும்பம்` என முழக்கமிட்டனர் தொண்டர்கள். மோடி பேசும்போதும் அதே சொல்லாடலை பயன்படுத்தினார். `நம் குடும்பம், மோடி குடும்பம்’ என்ற சொல்லாடலை தேர்தல் பிரசார யுக்தியாக கையாள்கிறது பா.ஜ.க.

பொதுக்கூட்ட மேடை

2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு `செளகிதார் மோடி’ என்ற சொல்லை தேர்தல் முழுக்க பயன்படுத்தி பிரசாரம் செய்தனர். 2024 பொறுத்தவரை காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட ’இந்தியா’ கூட்டணிக் கட்சிகளை வாரிசு அரசியலை கொண்டு தாக்கும் விதமாக அவர்களுக்கு முதன்மை குடும்பம், மோடிக்கு முதன்மை தேசம் என்கிற ரீதியில் எடுத்துச் செல்கின்றது பா.ஜ.க.

நந்தனம் YMCA மைதானம்

பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி “மத்திய அரசு தமிழ்நாட்டின் எதிர்காலத்துக்காக பணியாற்றி வருகிறது. ஆனால் மாநில அரசு மக்களின் தேவைகளை கண்டுகொள்ளவே இல்லை. மத்திய அரசு பல திட்டங்களின் தொகை நேரடியாக பயனாளிகளுக்கே அனுப்பப்படுகிறது. அதுதான் தி.மு.க-வுக்கு மிகப்பெரிய வருத்தம். இந்த வளர்ச்சித் திட்டங்களின் பணத்தை கொள்ளையடிக்க முடியவில்லை என்பதுதான் ஒரு குடும்பத்தின் எரிச்சல். பணம்தான் கிடைக்கவில்லை. ஸ்டிக்கராவது ஒட்டிக்கொள்ளலாம் என நினைக்கிறார்கள். அதிலும் அவர்களுக்கு தோல்விதான் கிடைத்திருக்கிறது.

பிரதமர் மோடி

தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கானப் பணத்தை கொள்ளையடிக்க விடமாட்டேன். அந்த பணத்தின் ஒவ்வொரு பைசாவையும் மீட்டு மக்களுக்கு வழங்காமல் விடமாட்டேன். இதுதான் மோடியின் உத்தரவாதம். குடும்ப அரசியல் செய்யும் கட்சிகள், தங்கள் குடும்பம் பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள். ஆனால், தேசத்தின் நலனில் அக்கறைக் கொண்ட நான் தேசத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறேன்” என தி.மு.க-வை கடுமையாக சாடினார் பிரதமர்.

அரசியல் பார்வையாளர்கள் சிலர், “தி.மு.க மீதான விமர்சனம் மற்றும் மோடி குடும்பம் என்கிற பிரசாரம் முழுமையாக பயனளிக்காது எனச் சொல்ல முடியாது. தி.மு.க மீதான மோடியின் விமர்சனம் மக்கள் மத்தியில் கவனம்பெறும் என்பதால்தான் பிரதமரின் அனைத்து குற்றசாட்டுகளுக்கும் எதிர்வினையாற்றுகிறது தி.மு.க. அதேசமயம் மோடியின் தொடர் வருகை அனைத்தும் ஏன் தேர்தலையொட்டியே இருக்கிறது இயல்பான சந்தேகங்களும் மக்கள் மத்தியில் கிளம்பியுள்ளது.

அண்ணாமலை

எது எப்படி இருந்தாலும் தேர்தல் என வரும்போது தமிழ்நாட்டில் பா.ஜ.க-வுக்கு வலுவான கூட்டணி இல்லை. பிரபல வேட்பாளர் சொற்பமாகவுள்ளனர். பா.ஜ.க-வுடன் நிற்கும் எந்த கட்சிக்கும் தனிப்பட்ட செல்வாக்கு பெருமளவில் இல்லை. பிரசாரங்கள் தேர்தலின் ஒரு அங்கம்தானே தவிர பிரசாரம் மட்டுமே தேர்தல் வெற்றியை தராது” என்றனர்.

நம்மிடம் பேசிய தி.மு.க செய்தி தொடர்பாளர்கள் சிலர், “பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகை அணுவை கூட அசைக்கப் போவதில்லை. 5 முறையல்ல, பிரதமர் தமிழ்நாட்டிலேயே தங்கிவிட்டாலும் பா.ஜ.க-வுக்கு வாக்கு விழப்போவதில்லை. மெட்ரோ திட்டம் குறித்து பேசுகிறார் மோடி. மொத்த செலவையும் செய்வது தமிழக அரசு, எனவே அதிக நிதி கொடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசுதான் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறது. மழை வெள்ளத்தில் வராமலும் நிதி தராமலும் இருந்த மோடி தேர்தல் வந்ததும் ஒட்டோடி வருகிறார் என்றால் மக்கள் நலனைவிட தேர்தல் வெற்றியும் பதவி மட்டுமே குறிக்கோள் என்ற எண்ணம் தமிழ்நாடு மக்களுக்கு உண்டு. தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏமாற மாட்டார்கள். மோடி குடும்பம் என புதியதொரு நாடகத்தை தொடங்கியிருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின் – உதயநிதி

குடும்பம் என்றால் மணிப்பூர் மக்களை குடும்பமாக பார்த்தால், கலவரத்தால் பற்றி எரிந்தபோது இப்படித்தான் வேடிக்கை பார்த்திருப்பாரா.. மல்யூத்த வீராங்களை பாலியல் குற்றசாட்டை முன்வைத்து போராடியபோதும் வேடிக்கை பார்த்தாரே.. இதுதான் அவர்களை குடும்பமாக பார்க்கும் லட்சணமா?. பா.ஜ.க மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுவிட்டது.” என்றனர்

நம்மிடம் பேசிய பா.ஜ.க-வின் மாநில பொருளாளர் எஸ்.ஆர் சேகர் “பா.ஜ.க-வின் சென்னை பொதுக்கூட்டம் பெரு வெற்றியடைந்துவிட்டது என்பதற்கு சான்று தி.மு.க-வின் குமுறல்தான். மோடி தமிழ்நாட்டில் கால்வைப்பதற்கு முன்பே பதறிப்போய் அறிக்கை கொடுக்கிறார் ஸ்டாலின். தி.மு.க-வின் குடும்ப அரசியலையும் ஊழலையும் பிரதமர் மோடி தோலுரித்த காட்டியதால் தி.மு.க மிரண்டு போய் மோடியின் வருகையையே எதிர்க்கிறார்கள்.

பி.ஜே.பி எஸ்.ஆர் சேகர்

அவர் ஒவ்வொருமுறை வரும்போதும் மத்திய அரசின் திட்டங்களை திறந்து வைக்கவே வருகிறார். அதன்பிறகு அருகிலுள்ள பகுதியில் பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

ஸ்டாலின் – மோடி

மக்களுக்கு நல்ல திட்டங்களை தொடங்கிவைப்பதால் தி.மு.க-வால் அதனை ஜீரணிக்க முடியவில்லை. மோடியின் வருகை தேர்தலில் எதிரொலிக்குமா எனக் கேட்கிறீர்கள்.. மழை வருவதற்கு முன் மண்வாசன் வருவதுபோல், தேர்தல் வருவதற்குமுன்பே பா.ஜ.க-வுக்கான வெற்றியை `என் மண், என் மக்கள்` யாத்திரையும் பிரதமர் மோடியின் வருகையும் உறுதி செய்துவிட்டன. மேலும் வாரிசு அரசியல் செய்வர்கள் `மோடி குடும்பம்’ என்ற பதற்றத்தை தந்திருப்பதையும் பார்க்க முடிகிறது” என்றார்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.