கடந்த பிப்ரவரி 16ம் தேதி ராஜ்கோட்டில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் குறைந்த போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது வீரர் என்ற பெருமையை அடைந்தார் அஷ்வின்.

இதற்கு முன் இலங்கை அணியின் முத்தையா முரளிதரன் 87 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 500 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இவருக்கு அடுத்தபடியாக இந்திய அணியின் அனில் கும்ப்ளே 105 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 500 விக்கெட்டுகளை கடந்த 2006-ம் ஆண்டு கைப்பற்றினார். இந்த மைல்கல்லை அஷ்வின் 98 போட்டிகளிலேயே எட்டினார். இந்தச் சாதனையை படைத்த அஷ்வினுக்குப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர்.

அஷ்வின் | Ashwin

ஆனால் அன்றே அஷ்வின், தனது தாயின் உடல் நிலை சரியில்லாத செய்தி கேட்டு டெஸ்ட்டிலிருந்து பாதியோடு விலகி அங்கிருந்து சென்னை திரும்பினார். பின்னர், டெஸ்ட்டின் 4 வது நாளில் இந்திய அணியுடன் அஷ்வின் மீண்டும் இணைந்தார்.

இது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழின் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள அஸ்வினின் மனைவி பிரீத்தி நாராயணன், “எல்லோரும் நினைப்பதைப் போல மகிழ்ச்சியால் மட்டுமே நிறைந்ததல்ல கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை. அன்று குழந்தைகள் பள்ளி முடித்து வீட்டிற்கு வந்த ஐந்து நிமிடத்தில் அஷ்வின் 500வது விக்கெட்டை எடுத்தார். நாங்கள் எல்லோரும் அமர்ந்து அதை மகிழ்ச்சியாகப் பார்க்க, பலரும் தொலைபேசியில் அழைத்து வாழ்த்து கூறினர்.

அஷ்வின் அம்மாவின் உடல் நிலை திடீரென மோசமாக அடுத்த சில மணி நேரத்தில் எல்லோரும் குடும்பத்துடன் மருத்துவமனையில் இருந்தோம். இதுகுறித்து அஷ்வினிடம் சொல்ல வேண்டாம் என்று நினைத்தோம். சொன்னாலும், அவர் ராஜ்கோட்டிலிருந்து – சென்னை வருவதற்கான விமான சேவைகள் அப்போது இல்லை.

அதன்பின், நான் புஜாரா மற்றும் அவரின் மனைவியிடம் உதவி கேட்டேன். அவர்கள் அதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். அதன்பிறகுதான் நான் அஷ்வினை செல்போனில் அழைத்துப் பேசினேன். ஏனென்றால், மருத்துவர்கள் அஷ்வினை இங்கு வரவழைப்பது நல்லது என்று கூறினார்கள். நான் அவரிடம் இந்த விஷயத்தைக் கூற, அஷ்வின் மொத்தமாக உடைந்துவிட்டார்.

அஷ்வின், பிரீத்தி

அந்த நேரத்தில் ரோகித் சர்மா, ராகுல் டிராவிட், பிசிசிஐ தலைமை என அனைவரும் எங்களுக்கு உறுதுணையாக இருந்து உதவினார்கள். சென்னை வந்த அஷ்வின், ஐசியூ-வில் அவரின் அம்மாவைப் பார்த்து உடைந்துவிட்டார். அங்கு இருந்த இரண்டு நாள்களும் மிகுந்த மன வருத்தத்துடன் இருந்தார். அந்த நேரத்தில் அவர் அம்மாவுடன் இருக்க வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்தேன்.

இரண்டு நாளில் அம்மாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அதன்பிறகு, நாங்கள் அஷ்வினை மீண்டும் விளையாட செல்லுமாறு அறிவுறுத்தினோம். ஏனென்றால், எந்தச் சூழலிலும் ஆட்டத்தில் இருந்து அஷ்வின், பாதியோடு வந்ததே கிடையாது. அதுமட்டுமின்றி, இந்திய அணி அந்தப் போட்டியில் தோல்வியடைந்தால் அது அவருக்கு இன்னும் அதிக சோகத்தை ஏற்படுத்திவிடும். அதனால் அவரை விளையாட அனுப்பினோம்” என்று கூறியிருக்கிறார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.