Doctor Vikatan:அல்சருக்கு அம்மான் பச்சரிசி பொடியைப் பயன்படுத்தலாமா… அப்படியானால் எத்தனை நாள்களுக்கு எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்?

– Sathyamoorthi Palanisamy, விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த யோகா மற்றும் இயற்கை மருத்துவர் யோ. தீபா

இயற்கை மருத்துவர் யோ. தீபா

அம்மான் பச்சரிசி செடிக்கு `ஆஸ்துமா செடி’ என இன்னொரு பெயரும் உண்டு. அற்புதமான மருத்துவ குணங்கள் கொண்ட இந்தத் தாவரம், மூச்சிரைப்புக்கு மருந்தாகக் கொடுக்கப்படுகிறது.

முகப்பரு, மரு, காயங்கள் என சருமப் பிரச்னைகளுக்கு அம்மான் பச்சரிசியை அதிக அளவில் பயன்படுத்தும் வழக்கம் தமிழ்நாட்டில் இருக்கிறது. அம்மான் பச்சரிசி என்ற பெயரை வைத்து இது ஒருவகையான அரிசிபோல என பலரும் நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால், இது அரிசி அல்ல, ஒருவகை மூலிகைச் செடி. இந்தச் செடியின் விதைகள், நெல்போல காட்சியளிப்பதால் இப்படியொரு பெயர் வந்ததாகச் சொல்லப்படுகிறது.

இது சாதாரணமாக எல்லா இடங்களிலும் வளரக்கூடியது.  இதன் ஒவ்வொரு பகுதிக்கும் மருத்துவ குணங்கள் உண்டு. உடைத்தால் அதிலிருந்து பால் போல வடியும். வாயில் வரக்கூடிய புண்களுக்கு ( Mouth ulcer )  இந்த மூலிகை ரொம்பவே நல்லது. இந்தக் கீரையுடன் பருப்பு சேர்த்துக் கடைந்து சாப்பிட்டால் வாய்ப் புண்கள் காணாமல் போகும்.  வயிற்றில் புண்கள் இருந்தால்தான், அது வாய்ப் புண்களாக வெளிப்படும் என்ற யோகா, இயற்கை மருத்துவத்தில் சொல்வதுண்டு. வைட்டமின் பி குறைபாடு உள்ளவர்களுக்கும் வாயில் புண்கள் வரும். 

Mouth ulcers (Representational Image)

அம்மான் பச்சரிசியில் ஏராளமான ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. முன்னோர்கள் காலத்தில் எல்லாம், வாய்ப் புண்ணோ, வயிற்றுப் புண்ணோ வந்தால், சட்டென இந்த இலைகளைப் பறித்துக் கசக்கி, சாற்றைக் குடிப்பார்கள். இந்தச் செடியின் பாலை, மரு உள்ள இடத்தில் தொடர்ந்து தடவிக் கொண்டே வந்தால், அந்த மருவானது நாளடைவில் உதிர்ந்து விழுந்துவிடும்.  சருமத்தில் ஏற்படும் காயங்களுக்கும் இந்த மூலிகை மருந்தாகப் பயன்படும். சமைத்தும் சாப்பிடலாம்.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், இந்தக் கீரையை வாரத்தில் இரண்டு நாள்கள் எடுத்துவந்தால், பால் சுரப்பு அதிகரிக்கும். குழந்தைகளுக்குத் தொற்று பாதிப்பு ஏற்படுவதும் தடுக்கப்படும்.  இந்தக் கீரையில் ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி மைக்ரோபியல் குணங்கள் இருப்பதால், ஆஸ்துமா நோயாளிகளுக்கும் மிகச் சிறந்த மருந்தாக உதவும். வயிறு ஆரோக்கியம் சரியாக இல்லாத நிலையில், வாய் துர்நாற்றம் ஏற்படும்.  வாரத்தில் ஒருநாள் இந்தக் கீரையை உணவில் சேர்த்துக்கொண்டால் வாய் துர்நாற்றம் விலகும், மலச்சிக்கல் குணமாகும். 

மரு..

ஆஸ்துமா, அலர்ஜி பாதிப்புகளின்போது நம் சுவாசக்குழாய்கள் சுருங்கும். அந்த நிலையில், இந்தக் கீரையைச் சேர்த்துக்கொள்ளும்போது, சுவாசக்குழாய்கள் விரிவடையும்.  ஆஸ்துமா, வீஸிங் பாதிப்புகளின் தீவிரம் குறையும். இந்த மூலிகை வலி நிவாரணியாகவும் பயன்படுகிறது. நீரிழிவு பாதிக்கப்பட்டோருக்கும் ரத்தச் சர்க்கரை அளவைக் குறைக்க உதவும்.  இத்தனை நல்ல குணங்கள் கொண்ட அம்மான் பச்சரிசி, அல்சர் பாதிப்புக்கும் உதவக்கூடியதுதான். குறிப்பாக, புண்கள் ஆறுவதற்குப் பெரிதும் உதவும். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.