`நல்லா போய்க்கிட்டு இருக்குற வாழ்க்கைய, ஒரு விபத்து ஒரு நொடியில புரட்டிப்போட்டுடும்… எனக்கும் அந்த மாதிரிதான் நடந்துச்சு. ஆனா, அதை விபத்துன்னு சொல்ல முடியாது. பல வருஷ அலட்சியம், இயலாமையோட `கொடும்’ விளைவு. என்னன்னு கேட்குறீங்களா… என்னால இப்போ எதையும் பார்க்க முடியாது. ஆமா… எனக்குப் பார்வை சுத்தமா போயிடுச்சு. ஊருக்கே பொதுவா சாய்ந்த `பொழுது’, இனி நமக்கு மட்டும் விடியப்போறதில்லைன்னு தெரியவந்த அந்த நிமிஷம்… என்னோட வாழ்க்கையே அஸ்தமனமாகிடுச்சு. சின்ன வயசுல இருந்து பார்த்து பழகின மனுஷங்க, காடு, கழனினு அத்தனையும் மொத்தமா இருளடைஞ்சுபோச்சு… `காரிருள்…’ அது மட்டும்தான் என்னோட வாழ்க்கையில. அந்த இருள் என்னோட போயிட்டா பரவாயில்லையே… என்னோட மனைவி, பிள்ளைங்களையும் சேர்த்து சித்ரவதை செய்யுதேங்கிற குற்றவுணர்வு என்ன கூனிக்குறுகி நிக்கவெச்சுக்கிட்டிருக்கு…’ என, பார்வை பாதிக்கப்பட்டதால் ஏற்பட்ட வேதனையையும், தன்னுடைய ஆற்றாமையையும் ஒருசேர கொட்டித் தீர்க்கிறார் ராஜா.

ராஜா

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை அருகேயுள்ள தீபாம்பாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவருக்குத் தற்போது 44 வயதாகிறது. கையில் பினாயில் பாட்டில்களையும், ஊதுவத்திச் சுருள்களையும் தூக்கிக்கொண்டு தட்டுத் தடுமாறியபடி, கடை கடையாய் ஏறி இறங்கும் ராஜாவை, தஞ்சாவூர் சுற்றுவட்டாரத்தில் அறிந்திருப்போர் அநேகம் பேர் எனச் சொல்லலாம். ராஜாவுக்குத் திருமணமாகி மனைவி, பிள்ளைகள் இருக்கின்றனர். மனைவி ஜனோவா, மகன் வர்சன், மகள் வர்சிகா. ராஜா ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, அவருக்குப் பார்வைக் குறைபாடு ஏற்பட்டிருக்கிறது. பகல் நேரத்தில் பார்வை தெளிவாக இருக்கும்… ஆனால், இரவாகிவிட்டால் பார்வை குறைந்துவிடும். அப்போதே இந்தப் பிரச்னையை ராஜாவின் பெற்றோர் கவனிக்கத் தவறிவிட்டதால், இன்று மிகுந்த சிரமங்களை அவர் சந்தித்துக்கொண்டிருக்கிறார். 2003-ல் ராஜா ஒரு தனியார் வங்கியில் லோன் பிரிவில் வேலைக்குச் சேர்ந்தார். அந்த நேரத்தில் அவருக்குப் பார்வை நன்றாகவே இருந்திருக்கிறது.

சதா கம்ப்யூட்டரில் பணி, டூ வீலர் ஓட்டிச் செல்வது என அவரின் அன்றாடம் எல்லோரையும்போலவே இருந்திருக்கிறது. ஆனால், 2009-ம் ஆண்டு 75 சதவிகிதம் அளவுக்கு ராஜாவின் பார்வை பறிபோயிருக்கிறது. இருள் அவர் வாழ்வை இறுக்கிப் பிடிக்கத் தொடங்கிய காலகட்டம் அது. பார்வையில் பிரச்னை ஏற்பட்டதும், அவர் பணிபுரிந்து வந்த வங்கி நிர்வாகம், அவரைப் பணியிலிருந்து அனுப்பிவிட்டது. பார்வைக் குறைபாடும் 100 சதவிகிதத்தை நோக்கி வீரியத்துடன் ஓடிக்கொண்டிருந்தது. ராஜாவும் தன்னம்பிக்கையை இழக்காமல், வங்கிப் பணிகள் தனக்குப் பரிச்சயமானவை என்பதால், தன்னைப் போன்ற விழிச்சவால் மாற்றுத்திறனாளிகளுக்கென வங்கிகளில் ஏதாவது வேலை கிடைக்குமா என விசாரித்தார். ம்ஹ்ம்… கிடைத்தது ஒரு தற்காலிக `நிம்மதி.’ தனியார் வங்கி ஒன்றில், `சேல்ஸ்’ பிரிவில் வேலை. முன்புபோல கம்ப்யூட்டரில் தட்டச்சு செய்து, வேலை பார்க்க முடியாவிட்டாலும், பேக் எண்டில் தனக்கு வழங்கப்பட்ட பணிகளைச் செய்துவந்தார்.

வருடங்கள் ஓடின… 2011-ல் ஜனோவா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். ராஜாவின் நிலைமையை உணர்ந்து, அவருக்குத் தோள் கொடுத்து ஒத்துழைத்து வாழ்க்கையைத் தொடங்கினார் ஜனோவா. அந்தத் தனியார் வங்கியில் ராஜாவுக்கு வழங்கப்பட்ட சம்பளம் குறைவே என்றாலும், அதை வைத்துக்கொண்டு பேச்சுக்காகவாது `நிறைவான வாழ்க்கை’ எனச் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வாழ்க்கைக் கடிகாரம் சுற்றிச் சுழன்றுகொண்டிருந்தது. ஆனால், ஒருகட்டத்தில் அந்த கடிகாரம் தன் இயக்கத்தை நிறுத்திக்கொண்டு ஆட்டம் காட்டவே, தலைகீழாக மாறிப்போனது ராஜாவின் வாழ்க்கை.  
2013-ல் ராஜாவுக்கு 100 சதவிகித பார்வை இழப்பு ஏற்பட்டது. வாழ்க்கையோடு கொஞ்சமேனும் ஒட்டிக்கொண்டிருந்த வெளிச்சம், வெடுக்கென விலகியது… இருள் சூழ்ந்துகொண்டது. இனி இந்த வங்கியிலும் தன்னால் எந்த வேலையும் செய்ய முடியாது என்பதை உணர்ந்த ராஜா, அந்த வேலையிலிருந்து தாமாக விலகினார். பார்வை இழப்பு பாதிப்பு, அவருடைய குடும்பத்தின் நிலைமையைப் பரிதாபகரமானதாக மாற்றிப்போட்டது.

வாழ்க்கை இனி முன்புபோல் இருக்கப்போவதில்லை… அது, தன் பிடியை இன்னும் இறுக்கிக்கொண்டேதான் இருக்கப்போகிறது என்பதை உணர்ந்தார். வறுமை வாசற்கதவைத் தட்டியது. இந்த முறை சரணடைவதைத் தவிர ராஜாவுக்கு வேறு வழியில்லை.

ஒருவர் துணை இல்லாமல் தன்னால் ஓர் அடிகூட எடுத்துவைக்க முடியாது என்பதை ராஜா உணர்ந்த அந்தத் தருணத்தில், விரக்தியின், ஆற்றாமையின் கொடுஞ்சுவர்களுக்குள் முடங்கிப் போனார். உணவு, மருத்துவச் செலவு என அன்றாடத் தேவைகள் ஆயிரம் கிடக்க, இரு கண்களும் இயக்கத்தை நிறுத்திவிட, மூன்றாவது கண்ணாக இருந்து ராஜாவுக்குத் தோள் கொடுத்துத் தாங்கினார் அவரின் தாரம் ஜனோவா. வாழ்க்கை இனி முன்புபோல் இருக்கப்போவதில்லை… அது, தன் பிடியை இன்னும் இறுக்கிக்கொண்டேதான் இருக்கப்போகிறது என்பதை உணர்ந்தார். வறுமை வாசற்கதவைத் தட்டியது. இந்த முறை சரணடைவதைத் தவிர ராஜாவுக்கு வேறு வழியில்லை. இத்தகைய இக்கட்டான சூழலில், முன்பு ஆறு ஆண்டுகள் தனியார் வங்கியில் பணியாற்றியபோது மிச்சம்வைத்திருந்த தொழிலாளர் வைப்புத்தொகை, ராஜாவுக்குக் கைகொடுத்தது. அதைவைத்து சீரிய சிக்கனத்தில் சில வருடங்கள் கழிந்தோடின. பின்னர், கையில் பென்சில், பேனாக்களைத் தூக்கிக்கொண்டு வீதியில் இறங்கினார் ராஜா.

பள்ளிகளுக்குச் சென்று பேனா, பென்சில்களை மாணவர்களுக்கு கூவிக்கூவி விற்பனை செய்தார். கைத்தடி மட்டுமே வாழ்க்கைத்துணை என்றாகிவிட்ட நிலையில், அதை வைத்துக்கொண்டு தன் வீட்டு அடுப்பை அணையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். பின்னர் பேனா, பென்சில்களுக்கு டிமாண்டும் இல்லை, அதில் பெரிய லாபமும் இல்லையென்பதை அறிந்தவர், தன் மனைவி உதவியுடன் பினாயில் தயாரித்து விற்பதென முடிவுசெய்தார். தஞ்சை வட்டத்தில் பினாயில் விற்கத் தொடங்கிய ராஜா, இன்று ஊதுவத்தி வாங்கி திருச்சி, மதுரை, சென்னை என இருளை எதிர்த்து நடமாடிக்கொண்டிருக்கிறார்.
 
“நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது, திடீரென இரவில் பார்வைக் குறைபாடு ஏற்பட்டது. பகலில் பார்வை நன்றாக இருந்ததால், அப்பா உள்ளிட்ட யாரும் இதை பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. 2009-ல் பார்வைக் குறைபாடு மோசமாகவே, வங்கிப் பணியிலிருந்து நீக்கப்பட்டேன். என்னுடைய உடல்நிலையைக் காரணம்காட்டி வேலையைவிட்டு நீக்கினார்கள். அப்போது அவர்கள் சொன்ன காரணம் `Termination Due To Absconding.’ ஆனால், பார்வை பறிபோன பிறகும்கூட, விடுப்பு எடுக்காமல் பணிக்குச் சென்றுகொண்டிருந்தேன். அவர்களே நிறுத்திவிட்டு, இத்தகைய காரணத்தையும் சொன்னார்கள்.

ராஜா

பி.எஃப் தவிர அந்த வங்கியிலிருந்து எனக்கு கிடைக்கப்பெற்ற பணப் பலன் எனச் சொல்லிக்கொள்ள எதுவுமில்லை. அந்தப் பணத்தை வைத்து சில மாதங்கள் தள்ளினேன். பின்னர் வேறு வங்கியில் பணிக்குச் சேர்ந்தேன். திருமணமும் முடிந்தது. அடுத்த இரண்டாண்டுகள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தது. 2013-ல் என்னுடைய பார்வைத்திறன் முற்றிலும் பறிபோய்விட்டது. பதறிப்போன நான், கண் மருத்துவரிடம் காட்டினேன். `மூளையிலிருந்து கண்ணுக்கு வரும் நரம்பு சேதமடைந்துவிட்டது. இதை குணப்படுத்த முடியாது’ என்றார். இனி குடும்பத்தை எப்படிக் காப்பாற்றப்போகிறோம் என்ற கவலை, என்னை வீட்டுக்குள்ளேயே முடக்கியது. குழந்தைகள் முகத்தைப் பார்க்க முடியவில்லை என்ற ஏக்கம், துயரத்தில் தள்ளியது. கையிருப்பு இருந்த பணம் கரைந்த பிறகு வீட்டில் அடுப்பெரிக்க முடியாத நிலை. என் மனைவி, பிள்ளைகளுடன் சேர்த்து என்னையும் சுமந்தாள்.

தற்போது ஊதுவத்தி வாங்கி திருச்சி, மதுரை, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு ரயிலில் சென்று விற்பனை செய்து வருகிறேன். வாரத்தில் மூன்று தினங்கள் வியாபாரத்துக்குச் செல்வதே பெரிய விஷயம். அப்படிச் செல்லும் நாள்களில் மட்டும், விற்பனை லாபத்தில் என்னுடன் வருபவருக்குக் கொடுத்துவிட்டு, கையில் 300-லிருந்து 500 ரூபாய் நிற்கும். பல நேரங்களில் அதை வைத்துத்தான் ஒரு வார காலத்துக்கு குடும்பம் நடத்தவேண்டியிருக்கும். போதிய வருமானமின்மையால் குழந்தைகளின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்திசெய்ய முடியாமல், பரிதவித்துக்கொண்டிருக்கிறேன். குடும்பத்தின் வறுமை, குழந்தைகளின் கல்வியை காவு வாங்கிவிடக் கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறேன். அரசுப் பள்ளியில் என் பிள்ளைகளைச் சேர்த்துவிட்டிருக்கிறேன். அவர்களும் குடும்பச் சூழலை உணர்ந்து படித்துக்கொண்டிருக்கிறார்கள். எனக்கு எல்லாமுமாய் இருந்து நான் இயங்குவதற்கு உந்துதலாய் இருப்பது என்னுடைய மனைவி.

ராஜா

துவண்டு விழுந்தபோது தோள் கொடுத்து என்னைத் தூக்கி, தைரியமூட்டினார். இப்போது அவருக்கும் உடல்நலம் சரியில்லை. அண்மையில், எங்கள் ஊரில் நடைபெற்ற கண் சிகிச்சை முகாமில் கலந்துகொண்டு, பரிசோதனை செய்தேன். `இனி பார்வை கிடைப்பதற்கு வழியே இல்லை’ என்ற மருத்துவர், `மைக்ரோ கிளாஸ்’ குறித்துச் சொன்னார். அவர் சொன்னதைக் கேட்டு எனக்கு மீண்டும் பார்வை கிடைத்த உணர்வு. ஆண்டிராய்டு போனில் ஆப் ஒன்றை டவுன்லோடு செய்து, மைக்ரோ கிளாஸில் கனெக்ட் செய்து பயன்படுத்த வேண்டும்.

கிளாஸில் கேமரா, ஸ்கேனிங் உள்ளிட்ட வசதிகள் இருக்கின்றன. நான் கிளாஸை அணிந்துகொண்டு மொபைலையும், கிளாஸையும் புளூடூத்தில் இணைத்துவிட்டால், கிளாஸிலிருந்து மொபைல் மூலம் ஒலியாக வழிகாட்டுதல் வரும். கிளாஸிலுள்ள கேமராவில் அறிமுகமானவர்களை போட்டோ எடுத்து ரிஜிஸ்டர் செய்துகொள்ளும் வசதியும் இருக்கிறது.

மைக்ரோ கிளாஸ்

அடுத்த முறை அவர்களைப் பார்த்தால் நினைவூட்டல் செய்யும். இதுபோல் இன்னும் பல வசதிகள் இருக்கின்றன. எனக்கு மட்டுமல்ல, என்னைப் போன்ற பார்வை இல்லாத அனைவருக்கும் இந்த தொழில்நுட்பம் பெரும் வரப்பிரசாதம். பார்வை அற்றவர் மைக்ரோ கிளாஸை அணிந்து கொண்டால், வழிகாட்ட யார் உதவியும் இல்லாமல் தனி ஆளாக இமயமலையிலும் ஏறலாம்.

என்னிடம் ஆண்ட்ராய்டு போனும் இல்லை, மைக்ரோ கிளாஸ் வாங்குவதற்கான பொருளாதார வசதியும் இல்லை. கண்ணாடி மற்றும் ஆண்ட்ராய்டு போனையும் சேர்த்து 50,000 ரூபாய்க்கு மேல் செலவாகும்.

உதவி ஏதாவது கேட்டுவிடுவேன் என்றே உறவினர்கள் உள்ளிட்ட பலர் என்னிடம் பேசுவதையே தவிர்க்கின்றனர். வீட்டுக்குள் இருந்தாலும் அடுத்தவர் உதவி இல்லாமல் என்னால் ஓர் அடிகூட எடுத்து வைக்க முடியாது. என்னிடம் தன்னம்பிக்கை நிரம்பியிருக்கிறது, ஆனால் உதவி செய்வதற்குத்தான் ஆளில்லை. இந்தக் கண்ணாடி மட்டும் எனக்குக் கிடைத்துவிட்டால், கண்களுக்கு மட்டுமல்ல, என் குடும்பத்துக்கும் வெளிச்சம் கிடைக்கும்” என்கிறார் ராஜா.

இருளை விரட்ட சூரியன் வேண்டும் என்று அவர் கேட்கவில்லை; சிறு விளக்கு இருந்தால்போதும் என்று நினைக்கிறார். இருள் விலக வழி பிறக்கட்டும்! 

இது தொடர்பாக உதவ முன்வரும் வாசகர்கள், `help@vikatan.com’ என்ற மெயில் ஐ.டி-க்கு தொடர்புகொண்டு, தாங்கள் செய்ய விரும்பும் உதவிகள் குறித்துத் தெரிவிக்கலாம். இவர் குறித்த விவரங்கள் உடனடியாகத் தரப்படும்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.