மேற்கு வங்கத்துக்கு இரண்டு நாள் பயணமாகச் சென்ற பிரதமர் மோடி, சந்தேஷ்காளி விவகாரத்தை வைத்து முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை கடுமையாக விமர்சித்தார்.

மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் கொல்கத்தாவிலிருந்து 75 கி.மீ தொலைவிலுள்ள சந்தேஷ்காளி என்ற பகுதியில் திரிணாமுல் காங்கிரஸின் முக்கிய நிர்வாகியான ஷாஜஹான் ஷேக் என்பவர், பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக கிளம்பிய விவகாரம், மேற்கு வங்க அரசுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தது.

முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் ஷாஜஹான் ஷேக் 50 நாள்களுக்கு மேல் தலைமறைவாக இருந்துவந்த நிலையில், சமீபத்தில் கைதுசெய்யப்பட்டார். ஏற்கெனவே, மேற்கு வங்க மாநில பா.ஜ.க-வினரும், தேசிய மகளிர் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளும் சந்தேஷ்காளிக்குச் சென்று பரபரப்பைக் கிளப்பிவந்த நிலையில், பிரதமர் மோடி அங்கு சென்றிருக்கிறார்.

பிரதமர் மோடி

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘சந்தேஷ்காளியில் சகோதரிகளுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் இழைத்த கொடுமைகளை நாடே பார்த்துக்கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த தேசமும் கோபத்தில் இருக்கிறது. சந்தேஷ்காளியில் நடந்த கொடுமையால் ராஜாராம் மோகன் ராயின் ஆன்மா வேதனைப்படுகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அந்த நிர்வாகியை கட்சி பாதுகாக்கிறது. மாநில அரசுக்கு பா.ஜ.க தலைவர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாகவே அந்த நபரை போலீஸ் கைது செய்திருக்கிறது’ என்றார்.

மேலும், தாய், மண், மக்கள் என்ற திரிணாமுல் காங்கிரஸின் முழக்கத்தைக் குறிப்பிட்டு விமர்சித்த பிரதமர் மோடி, ‘வங்கத்தில் பெண்கள் படும் துயரங்களைக் கண்டு ராஜாராம் மோகன் ராயின் ஆன்மா கதறி அழும். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி அனைத்து எல்லைகளையும் மீறியிருக்கிறார்.

பிரதமர் மோடி – மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

சந்தேஷ்காளியில் தாய்மார்களும், சகோதரிகளும் முதல்வர் மம்தா பானர்ஜியிடம் உதவி கேட்டு போராடினார்கள். ஆனால், அவர்களுக்கு என்ன பதிலாகக் கிடைத்தது. அந்த திரிணாமுல் நிர்வாகியைப் பாதுகாப்பதற்கான அனைத்து வேலைகளையும் மம்தா அரசு செய்தது’ என்று விமர்சித்தார். பின்னர், மேடையில் இருந்த பா.ஜ.க தலைவர்களைப் பார்த்து, ‘பா.ஜ.க தலைவர்கள் கொடுத்த அழுத்தத்துக்கு மேற்கு வங்க போலீஸ் அடிபணிந்தது. அந்த நபர் நேற்று கைதுசெய்யப்பட்டார்’ என்றார் மோடி.

மேலும், “இந்த திரிணாமுல் காங்கிரஸ் கிரிமினல், இரண்டு மாதங்களாக தலைமறைவாக இருந்தார். யாரோ ஒருவர் அவருக்கு அடைக்கலம் கொடுத்திருக்க வேண்டும். இதை நீங்கள் மன்னிப்பீர்களா? தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் இப்படி நடந்ததற்காக, நீங்கள் பழிவாங்க மாட்டீர்களா? காந்தியின் மூன்று குரங்குகளைப்போல, இந்தியா கூட்டணி தலைவர்கள் கண்களையும், காதுகளையும், வாயையும் மூடிக்கொண்டிருக்கிறார்கள்’ என்று விமர்சித்தார் பிரதமர் மோடி.

மணிப்பூர் பழங்குடி பெண்கள் நிர்வாணக் கொடுமை

இந்த விவகாரத்தில் மோடியின் குற்றச்சாட்டுகளுக்கு எதிர்வினையாற்றிய திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர் சாஷி பஞ்சா, “பிரதமர் மோடி பெண்களுக்கு எதிரான அட்டூழியங்கள் குறித்துப் பேசுகிறார். ஆனால், பெண்களுக்கு எதிராக கொடுங்குற்றங்கள் அரங்கேறிய கலவர பூமியாகக் காட்சியளித்த மணிப்பூர் பற்றி அவர் கவலைப்பட்டாரா… அங்கு சென்று பார்த்தாரா?” எனக் கேள்வியெழுப்பியிருக்கிறார்.

திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சாந்தனு சென், “லட்சத்தீவில் ஸ்நோர்கெலிங் செய்ய பிரதமர் செல்கிறார், ஆனால் மணிப்பூருக்குச் செல்ல அவருக்கு நேரம் கிடைக்கவில்லை” என விமர்சித்திருக்கிறார்.

சந்தேஷ்காளியில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையைக் கண்டு கொந்தளித்துதான் போனார் பிரதமர் மோடி. நியாயம்தான். ஆனால், மணிப்பூரில் பழங்குடியினப் பெண்களை நிர்வாணப்படுத்தி ஒரு கயவர் கூட்டம் வீதியில் இழுத்துச்சென்றபோது, பிரதமர் மோடிக்கு இவ்வளவு கோபமும் ஆத்திரமும் ஏன் வரவில்லை என்ற கேள்வி எழுகிறது!

திரிணாமுல் காங்கிரஸை விளாசித்தள்ளும் பிரதமர் மோடி, மணிப்பூரிலுள்ள பா.ஜ.க அரசை ஏன் விமர்சிக்கவில்லை. இன்றுவரையிலும் மணிப்பூரில் அமைதி திரும்பவில்லையே. ஆயிரக்கணக்கான வீடுகளும், கடைகளும் எரிக்கப்பட்ட பிறகு, பலர் இனமோதலில் படுகொலை செய்யப்பட்ட பிறகு, ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக முகாம்களில் தங்கும் கொடுமை ஏற்பட்ட பிறகு, இன்னும் ஏன் மணிப்பூருக்கு பிரதமர் மோடி வரவில்லை என்று பாதிக்கப்பட்ட மணிப்பூர் மக்கள் கேட்கிறார்கள்.

மணிப்பூர்

‘மணிப்பூர் பற்றியெரிந்தபோது காந்தியின் மூன்று குரங்குகளைப்போல கண்களையும், காதுகளையும், வாயையும் இழுத்து மூடிக்கொண்டிருந்தவர்கள் யார்’ என்று மணிப்பூர் மக்கள் எழுப்பும் கேள்விக்கு பிரதமர் மோடி பதில் சொல்வாரா?

மணிப்பூர் மாநிலம், இனக்கலவரத்தால் பல நாள்களாகப் பற்றியெரிந்துகொண்டிருந்தபோதும்கூட, மணிப்பூர் என்ற பெயரைக்கூட பிரதமர் மோடி உச்சரிக்கவில்லை. எனவே, பிரதமரின் வாயிலிருந்து மணிப்பூர் என்ற பெயரை வரவழைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக, எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்றத்தில் பா.ஜ.க அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவந்தன.

பிரதமர் மோடி

மணிப்பூரும் இந்தியாவில்தானே இருக்கிறது. மணிப்பூருக்கும் மோடி தானே பிரதமர். பாதிக்கப்படும் மக்களுக்கு நீதி கேட்பதிலும், நீதி வழங்குவதிலும் ஏன் இந்த பாரபட்சம்? பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால், அதை கண்டுகொள்ள மாட்டேன்… எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் பொங்குவேன் என்பது என்ன மாதிரியான அணுகுமுறை என்று பிரதமர் மோடியை நோக்கி ஆவேசத்துடன் கேள்விகள் எழுகின்றன. இந்த கேள்விக்கெல்லாம் பிரதமரிடமிருந்து பதில் கிடைக்குமா?

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.