கடந்த வருடம் புனேரி பல்தான்ஸ் கேப்டன் அஸ்லாம் இனாம்தார் பி.கே.எல் பைனலில் ஜெய்ப்பூரிடம் தோற்றபோது கண்களில் கண்ணீருடன், “சின்ன வயசுல இருந்து கபடி ஆடுகிறேன். எனக்கு நிறைய கனவுகள் இருக்கு. ஆனா கடைசி 10 வருஷமா என்னோட ஒரே கனவு இந்த பி.கே.எல் டிராபி… அடுத்த வருஷம் தவற விடமாட்டோம், வி வில் பைட் பேக்!” என்று தெரிவித்திருந்தார். அன்று தான் கூறிய வார்த்தையை இன்று நிறைவேற்றிவிட்டார். அவர் கூறியதுபோலவே ஃபைட் பேக்கைச் செய்து பி.கே.எல் சீசன் 10 சாம்பியனாக புனேரி பல்தான்ஸ் அணி முடி சூடியிருக்கிறது.

Pro Kabaddi League Final

இரு முறை தான் பயிற்சியாளராக இருந்த ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி பைனலுக்குச் சென்று தோற்றபோதே பயிற்சியாளர் மன்ப்ரீத் சிங்கிடம் எப்போதும் இருக்கும் ஆக்ரோஷம் மிஸ்ஸானது நமது நினைவில் இருக்கும். இதனாலேயே அந்த அணி, இந்த முறை கோப்பையை வென்றுவிட மாட்டோமா என்று இறுதிப்போட்டிக்குக் காத்திருந்தது.

‘வெயிலோ மழையோ எது அடித்தாலும் எங்கள் மன உறுதியை உடைக்க முடியாது’ என புனேரி பல்தான்ஸ் அணி ஒரு புறம், அனைத்து ரக கபடி ரசிகர்களின் கவனத்தையும் தங்களின் ஆட்டத்தால் ஈர்த்த ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி மறுபுறம் என்பதாக பி.கே.எல் சீசன் 10-ன் இறுதிப் போட்டி தொடங்கியது. சிறுவயதில் ‘டாம் அண்டு ஜெர்ரி’ பார்த்திருப்போம். அச்சு அசலாக அதேபோல தொடக்கம் முதலே புனேரி பல்தான்ஸ், ஜெர்ரியாக மாறி ஒவ்வொரு புள்ளியையும் முன்கூட்டியே எடுக்க, அதை டாம் போல துரத்திச் சென்றது ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி.

Pro Kabaddi League Final

17 நிமிடம் வரை இரு அணிகளும் சமநிலையிலேயே இருந்தன. 18-வது நிமிடம் ‘டூ ஆர் டை’ ரைடுக்கு உள்ளே வந்த புனேயின் பங்கஜ் மோஹிதே, நெல்லிக்காய் பறிப்பது போல கொத்தாக 4 புள்ளிகளைத் தட்டிச் செல்ல, இத்தருணம் ஆட்டத்தையே மாற்றியது. பின் இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய மூன்றாவது நிமிடத்திலேயே ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி ஆல் அவுட்டாக, இரு அணிகளுக்கிடையேயான புள்ளி வித்தியாசம் ஆறாக உயர்ந்தது. இந்த வித்தியாசம் கடைசி இரண்டு நிமிடங்கள்வரை குறையவே இல்லை. ஜெர்ரி ஓட, டாம் துரத்த, 15 நிமிடங்கள் கழிந்தன. ‘கடைசியாகத்தான் உள்ளே வந்தார் விநாயக்’ என்பதாக சப்ஸ்டிட்யூட்டாக உள்ளே வந்தார் ஹரியானாவின் ‘பாகுபலி’ சித்தார்த் தேசாய். கடகடவென மூன்று புள்ளிகள் எடுத்து அந்த அணி ரசிகர்களுக்கு அவர் நம்பிக்கையை கொடுக்க, போட்டி கடைசி நிமிடத்திற்குச் சென்றது.

இந்த நிமிடத்தை கடத்திவிட்டால் தாங்கள் கடந்து வந்த பாதைக்கேற்ற பலன் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையோடு புனேரி பல்தான்ஸ் அணியும், தங்கள் கண்களிலிருந்து வியர்வைச் சிந்தக்கூடாது என்றால் இந்த நிமிடத்தில் எவ்வளவு வியர்வை வேண்டுமானாலும் சிந்தலாம் என்ற எண்ணத்துடன் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியும் களத்தில் நின்றன. கண்ணை மூடி திறப்பதற்குள் 60 நொடிகள் கடந்தன. இவ்வளவு நேரம் துரத்திக் கொண்டிருந்த டாம், எவ்வளவுதான் துரத்தினாலும் எட்டிப் பிடிக்க முடியாத நிலைக்கு ஜெர்ரி சென்றுவிட்டது என்பதை உணர்ந்தது. மூன்று மாத ஓட்டம் முடிவுக்கு வந்தது, கோப்பையை தன் வசப்படுத்தி அசத்தியது புனேரி பல்தான்ஸ்.

Pro Kabaddi League Final

மன்ப்ரீத் சிங்கின் வழக்கமான ஆக்ரோஷம் இங்கே மௌனமாக, அஸ்லாம் இனாம்தாரின் வார்த்தைகள் செயலாக, பி.சி.ரமேஷ் தான் வழிநடத்தும் அணியை மற்றொரு முறை கோப்பையை ஜெயிக்க வைக்க, வெற்றியோடு இளம் வீரர்களின் கண்கள் ஜொலிக்க, சாம்பியனாக முடி சூடியது புனேரி பல்தான்ஸ் அணி. குறிப்பாக பங்கஜ் மோஹிதே மற்றும் மோஹித் கோயதின் ஆட்டங்கள்தான் புனேரி பல்தான்ஸ் ஜெயிக்க முக்கிய காரணமாக இருந்தன.

தொடரின் சிறந்த ரைடர் விருது பெற்றார் தபாங் டெல்லியின் கேப்டன் ஆஷு மாலிக். நவீன் குமாரின் காயம் காரணமாக அணியின் கேப்டனாகவும், அவர்களின் முன்னணி ரைடராகவும் அடியெடுத்து வைத்த ஆஷு மாலிக், 23 போட்டிகளில் 276 ரெய்டு புள்ளிகளைப் பெற்று, தனது அணி, மொத்தப் புள்ளிப் பட்டியலில் 3வது இடத்தைப் பிடிக்க உதவினார்.

அடுத்து சிறந்த டிஃபென்டர் விருது, 24 போட்டிகளில் 99 டிஃபென்ஸ் புள்ளிகளைப் பெற்று, சீசன் முழுவதும் அவரது அணியின் முழுமையான ஆதிக்கத்திற்குப் பெரிதும் காரணமாக இருந்த புனேரி பல்தான்ஸின் முகமதுரேசா ஷட்லூவுக்கு வழங்கப்பட்டது.

Pro Kabaddi League Final

அடுத்து இந்த சீசனின் புதிய யங் பிளேயர் (NYP) விருதைப் பெற்றார் டெல்லியின் யோகேஷ் தஹியா. அவரது அணி நிர்வாகம் இந்த இளைஞரின் தோள்களில் மகத்தான நம்பிக்கையை வைத்தது. அந்த நம்பிக்கையை அவர் காப்பாற்றியிருக்கிறார். கிட்டத்தட்ட ஒவ்வொரு போட்டியிலும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி 23 போட்டிகளில் 74 டிஃபென்ஸ் புள்ளிகளுடன் 3-வது அதிக புள்ளிகள் பெற்ற டிஃபெண்டராக இந்த சீசனை முடித்தார்.

கடைசியாக, சீசனின் மிகவும் மதிப்புமிக்க வீரர் (MVP) விருதை வென்றார் புனேரி பல்தான்ஸின் கேப்டன் அஸ்லாம் இனாம்தார். நெருக்கடியான தருணங்களில் சிறப்பாகச் செயல்பட்ட அஸ்லாம், 139 ரெய்டு புள்ளிகள் மற்றும் 25 டிஃபென்ஸ் புள்ளிகளைப் பெற்றார்.

Pro Kabaddi League Final

பி.கே.எல் கோப்பை கனவுக்கு மேலும் ஓர் ஆண்டு காத்திருக்கவேண்டும் என்ற கட்டாயத்துடன் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி வீரர்கள் நிற்க, சாம்பியன்ஸ் என்ற பட்டத்தோடு இந்த சீசனை இனிதே முடித்தனர் புனேரி பல்தான்ஸ் அணி வீரர்கள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.