“இந்திய தொல்லியல் துறையிடம் உள்ள 5,765 அகழாய்வு பொருட்களை மத்திய அரசு, தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும், அதனை மாநில அரசு பாதுகாக்க வேண்டும்” என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மதுரை உயர் நீதிமன்றம்

வழக்கறிஞர் கனிமொழி மதி எனவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கடந்த 2016 -ம் ஆண்டு தாக்கல் செய்த பொதுநல மனுவில், “சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2013- ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை மத்திய அரசு சார்பில் அகழாய்வு பணியை தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மேற்கொண்டார். இந்த அகழாய்வின் போது 5000-க்கும் மேற்பட்ட பழைமை வாய்ந்த பொருள்கள் கிடைத்தன. இந்நிலையில் திடீரென அமர்நாத் ராமகிருஷ்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து ஸ்ரீராம் என்பவர் கீழடி தொல்லியல் ஆய்வு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு 3 ஆம் கட்ட அகழாய்வில் குறிப்பிடும் படியான கண்டுபிடிப்புகள் இல்லை என தெரிவித்தார்.

அமர்நாத் ராமகிருஷ்ணா

இரண்டு கட்ட கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசிடம் தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ளார். இந்த அறிக்கையில் கீழடியில் நிலவிய கலாசாரம், விவசாயம் செய்த பயிர்கள், விலங்குகள், நகர நாகரீகத்தை நோக்கி நகர்ந்த தன்மை குறித்து விரிவாக தெரிவித்துள்ளார்.

எனவே கீழடி அகழாய்வு பணிகளை கண்காணிக்கும் அதிகாரியாக அமர்நாத் ராமகிருஷ்ணனை மீண்டும் நியமனம் செய்ய வேண்டும், மேலும் கீழடியில் நடைபெற்ற 2 ஆம் கட்ட அகழாய்வில் 2,200 ஆண்டு பழைமையான 5000-த்துக்கும் அதிகமான பழங்கால பொருட்கள் மத்திய அரசிடம் உள்ளது. அதனை மீண்டும் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும், மேலும் கீழடியிலேயே ஒரு அருங்காட்சியகம் அமைத்து கண்டெடுக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்த வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

வழக்கறிஞர் கனிமொழி மதி

நீண்ட காலமாக நடந்து வந்த இந்த வழக்கு தலைமை நீதிபதி  சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலா மற்றும் தனபால் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் கனிமொழி மதி ஆஜராகி, “கீழடியில் மத்திய அரசு அகழய்வு செய்தபோது கிடைத்த 5000-க்கும் மேற்பட்ட பொருள்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும், கீழடி அகழாய்வு பணிகளை கண்காணித்து மேற்கொள்ள அதிகாரியாக அமர்நாத் ராமகிருஷ்ணனை நியமனம் செய்யவேண்டும்” என வாதிட்டார்.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “அமர்நாத் ராமகிருஷ்ணன் கடந்த 2017-ஆம் ஆண்டு கவுகாத்திக்கு மாற்றம் செய்யப்பட்டு, அதன்பின்பு கோவா, பிறகு சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது தென்னிந்திய கோயில்களின் தொல்லியல் கண்காணிப்பாளராக உள்ளார்.

கீழடி தொல்லியல் ஆய்வுப்பணி

மேலும், கீழடி அகழாய்வு குறித்த அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. கீழடி 2 ஆம் கட்ட அகழாய்வில் மொத்தம் 5,765 பொருட்கள் கிடைத்தன. அவை அனைத்தும் இந்திய தொல்லியல் கண்காணிப்பாளர் சென்னை அலுவலகத்தில் உள்ளது. விரைவில் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்படும்” என தெரிவிக்கபட்டது.

இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் சென்னையில் பணியமர்த்தப்பட்டு உள்ளார். அதில் எந்த முடிவும் எடுக்க முடியாது. மேலும் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுவிட்டது. மத்திய அரசு 9 மாதங்களில் கீழடியில் நடத்திய 2 ஆம் கட்ட அகழாய்வு குறித்த அறிக்கையை வெளியிட உள்ளது. 9 மாதங்களில் கீழடி அகழாய்வு அறிக்கை வெளியிட்ட பின்பு இந்திய தொல்லியல் துறையிடம் உள்ள 5765 அகழாய்வு பொருட்களை மத்திய அரசு, தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும், அதனை மாநில அரசு பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.