‘சந்திரயான் – 3’ திட்டத்தை வெற்றிகரமாகச் சாத்தியப்படுத்திய இஸ்ரோ தற்போது, மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்’ எனப்படும் திட்டத்தில் களமிறங்கியுள்ளது.

இதற்காக 2022-ம் ஆண்டிலிருந்து பல கட்ட சோதனைகளை நடத்திவரும் இஸ்ரோ, 2025-ம் ஆண்டிற்குள் இதைச் சாத்தியப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. விண்வெளிக்குச் செல்லும் இந்தக் குழுவில் இந்தியர்கள் மட்டுமே இடம்பெற்றிருக்க வேண்டும் என பெங்களூரில் நிறுவப்பட்ட விண்வெளி வீரர் பயிற்சி வகுப்பறையில் கடந்த ஆறுமாதங்களாக இந்திய விண்வெளி வீரர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டுவந்தன. ககன்யான் ஃப்ளைட் சிஸ்டம்ஸ், மைக்ரோ-கிராவிட்டி அறிமுகம், ஏரோ-மருத்துவப் பயிற்சி, மீட்பு மற்றும் உயிர்வாழும் பயிற்சி, விமான நடைமுறைகளில் மாஸ்டரிங் மற்றும் குழுப் பயிற்சி சிமுலேட்டர்கள் உள்ளிட்ட பல பயிற்சிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டன.

பிரசாந்த், கிருஷ்ணன், அங்கத் பிரதாப், அஜித் கிருஷ்ணன், சுபான்சு சுக்லா

இந்நிலையில் இன்று கேரளா, திருவனந்தபுரத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி, விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தைப் பார்வையிட்டு, ககன்யான் திட்டப்பணிகள் குறித்துக் கேட்டறிந்து சிறப்புரையாற்றினார். இதையடுத்து ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்குச் செல்லுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் வீரர்களின் பெயர்களை அறிவித்தார்.

அதன்படி பிரசாந்த் கிருஷ்ணன் நாயர் (குரூப் கேப்டன்), அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப், சுபான்சு சுக்லா ஆகியோர் விண்வெளிக்குச் செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மிஷன் லோகோ பேட்ஜ்களையும் அணிவித்துப் பெருமைப்படுத்தினார் மோடி.

இவர்கள் ஏற்கெனவே இந்திய விமானப் படையில் (IAF) விங் கமாண்டர்கள் மற்றும் சோதனை விமானிகளாகப் பணிகளில் அனுபவமிக்கவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விண்வெளிக்குச் செல்லும் குழுவில் இந்தியர்கள் மட்டுமே இடம்பெற்றிருப்பது இதுவே முதல் முறையாகும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.