`வெற்றிகரமான மனிதனாக மாறுவதற்கு முயற்சி செய்யாதீர்கள். மதிப்புமிக்க மனிதனாக மாறுவதற்கு முயற்சி செய்யுங்கள்.’ – ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

இன்றைய தேதியில் `உலகின் டாப் 10 காமெடியன்கள்’ என்று ஒரு பட்டியலை எடுத்தால், நிச்சயம் கெவின் ஹார்ட் (Kevin Hart) என்ற பெயர் இருக்கும். ஷூ விற்பனையாளராகத் தன் கரியரைத் தொடங்கி, ஸ்டாண்ட்-அப் காமெடியனாக மாறி, இன்றைக்குப் பல தொலைக்காட்சி சேனல்களிலும், திரைப்படங்களிலும் கொடிகட்டிப் பறந்துகொண்டிருக்கும் அவருடைய வளர்ச்சி அபரிமிதமானது. எப்படி இந்த உயரத்தை அடைந்தார் கெவின் ஹார்ட்?

Kevin Hart

அமெரிக்காவின் பிலடெல்பியா… லாஃப்ட் ஹவுஸ். அங்கேதான் தன் முதல் ஸ்டாண்ட்-அப் காமெடி நிகழ்வை அரங்கேற்றினார் கெவின் ஹார்ட். என்ன காரணமோ அந்த இளைஞனின் காமெடி, கூட்டத்தைக் கவரவில்லை. அவர் பேச்சு, யாரிடமும் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. சிலர் கொட்டாவி விட்டார்கள். சிலர் அருகிலிருந்தவர்களிடம் பேச ஆரம்பித்தார்கள். சிலர் முணுமுணுத்தபடி எழுந்துபோனார்கள். ஹார்ட்டின் முதல் பர்ஃபாமென்ஸ் படு சொதப்பல். இத்தனைக்கும் பிலடெல்பியா அவருடைய சொந்த மண்.

அன்றைய நிகழ்வு மட்டுமல்ல… அதற்கடுத்து அவர் மேடையேறி காமெடி செய்த நிகழ்வுகள் அத்தனையுமே `காமெடி’யாகின. ஒன்று, கூட்டத்தில் மயான அமைதி நிலவும். இல்லையென்றால், எரிச்சலில் சத்தம் போடுவார்கள். `ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்தில் ஒரு காட்சி… காஜல் அகர்வால் ஒரு திருமண ரிசப்ஷனில் இசைக்குழுவில் பாடுவதற்காக மேடை ஏறுவார். `அழகாக இருக்கிறாரே… நன்றாகப் பாடுவார்போல’ என நினைத்து கார்த்தி முன்வரிசையில் அமர்ந்திருப்பார். காஜல் பாட ஆரம்பித்ததும், அவர் குரல் நாராசமாக ஒலிக்கும்.

உடனே கார்த்தி… `ஏ… ஏ… ஏ…’ என்று சத்தம் போடுவார் இல்லையா… அதுபோல ஹார்ட்டின் நிகழ்ச்சியிலும் நடந்தது. சிலர் சத்தமாக அவரைத் திட்டிவிட்டுப் போனார்கள். நம் ஊர் கூட்டத்தில் பிடிக்காத பேச்சாளர்மீது தக்காளி, முட்டையையெல்லாம் வீசுவார்கள் அல்லவா… அதுபோல ஒருமுறை அவர் பேசிக்கொண்டிருக்கும்போது, ஒருவர் கோழிக்கறித்துண்டை எடுத்து வீசினார். ஆக, கெவின் ஹார்ட் ஒரு காமெடியனாக ஒளிவீசுவதற்கான எந்தச் சுவடும் அப்போது தெரியவில்லை. ஆனால், அவரின் அபார வளர்ச்சிக்கு ஹார்ட்டினின் ஆரம்பகால வாழ்க்கைதான் அடித்தளம்போட்டது.

Kevin Hart

`முன்தயாரிப்பும் வாய்ப்பும் சந்திக்கும் இடத்தில் வெற்றி இருக்கும்.’ – அமெரிக்க கார் பந்தய வீரர் பாபி அன்சர் (Bobby Unser).

1979-ல் பிலடெல்பியாவில் பிறந்தார் கெவின் ஹார்ட். பல சாதனையாளர்களுக்கு வாய்த்ததுபோலவே கஷ்டங்கள் நிறைந்த, சவாலான, சபிக்கப்பட்ட வாழ்க்கை. அப்பா நான்சி ஹார்ட் குடிகாரர், போதைக்கு அடிமையானவர். அம்மா ஹென்றி ராபர்ட் வைத்தர்ஸ்பூன், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் சிஸ்டம் அனலிஸ்ட்டாக வேலை பார்த்தார். ஹார்ட்டுக்கு, ராபர்ட் என்ற ஓர் அண்ணனும் உண்டு. வீட்டில் அப்பா அடித்த லூட்டிக்கு அளவேயில்லை. பாதி நாள் போதைப்பொருளை எடுத்துக்கொண்டதற்காகவும், சின்னச் சின்ன குற்றங்களுக்காகவும் சிறையில் இருப்பதும், வெளியே வருவதுமாக இருந்தார். அம்மாவின் சம்பாத்தியத்தில்தான் தத்தித் தத்தி நடந்துகொண்டிருந்தது குடும்பம். அப்பா உயிரோடு இருந்தாலும், சிங்கிள் பேரன்ட்டாக அம்மாதான் குழந்தைகளை வளர்த்தார்.

அம்மா, முடிந்தவரை ராபர்ட்டையும் ஹார்ட்டையும் அவர்களின் அப்பாவை நெருங்காமல் பார்த்துக்கொண்டார். அப்பாவுக்கு வீட்டிலுள்ள பணத்தை, பொருள்களைத் திருடும் பழக்கம் இருந்தது. அது போன்ற தீய பழக்கங்கள் பிள்ளைகளுக்கும் வந்துவிடுமோ என்று பயந்தார். அம்மாவுக்குக் கடவுள் நம்பிக்கை அதிகம். பிள்ளைகளுக்கு நல்ல பழக்கங்களைச் சொல்லிக்கொடுத்து வளர்த்தார். பெரும் கனவுகளை வளர்க்கக் கற்றுக்கொடுத்தார். அது ராபர்ட்டுக்குக் கைகொடுத்ததோ இல்லையோ… ஹார்ட்டுக்குக் கைகொடுத்தது.

Kevin Hart

அப்பாவின் நடவடிக்கைகளால் வீட்டில் துன்பம் என்னும் கருமேகங்கள் சூழ்ந்த நிலையில், கெவின் ஹார்ட் அதிலிருந்து தப்பிக்கக் கையில் எடுத்த ஆயுதம்தான் நகைச்சுவை. சதா சிரித்த முகம், பள்ளிக்காலத்திலேயே மிமிக்ரி செய்வார். அச்சு அசலாக ஆசிரியரைப்போலவே பேசிக்காட்டி நண்பர்களை அதிரவைப்பார். ஜார்ஜ் வாஷிங்டன் ஹைஸ்கூல் படிப்பை முடித்துவிட்டு, கம்யூனிட்டி காலேஜ் ஆஃப் பிலடெல்பியாவில் சேர்ந்தார். படிப்பு ஏறவே இல்லை. மனசு முழுக்க ஸ்டாண்ட்-அப் காமெடியனாக வேண்டும் என்கிற தாகம்தான் ஓடிக்கொண்டிருந்தது. படிப்பை விட்டார். நியூயார்க்குக்குப் போனார். பிறகு ஷூக்களை விற்கும் சேல்ஸ்மேனாக சிறிது காலம் வேலை பார்த்தார். அந்த வருமானத்தில் அவரால் தங்கியிருந்த வீட்டுக்கு வாடகைகூட கொடுக்க முடியவில்லை. ஒருநாள் வீட்டு உரிமையாளர் வந்து சத்தம் போட்டார்… “சீக்கிரமா வாடகை குடுக்குற வழியைப் பாரு. இல்லைன்னா, வீட்டுல இருக்குற பொருளையெல்லாம் தூக்கி வெளியே வீசி, வீட்டுக்குப் பூட்டுப் போட்டுடுவேன்.’’

நிலைமையை அறிந்த அம்மாதான் உதவிக்கு ஓடிவந்தார். வாடகைப் பணத்தைக் கொடுத்தார்.  எப்படியாவது ஹார்ட் தன் லட்சியத்தை அடைந்துவிடுவார் என்கிற நம்பிக்கை அவருக்கு இருந்தது. ஒரு வருட காலம் அந்த வீட்டுக்கான வாடகையைக் கொடுத்தது ஹார்ட்டின் அம்மாதான். அந்த வருடம் அம்மா சொன்ன சில வார்த்தைகள் ஹார்ட்டின் மனதில் அழுத்தமாக நின்றுபோயின. “உனக்குப் பிடிச்சதை மனசார நம்பு ஹார்ட். நீ நிச்சயம் நல்ல காமெடியனா வருவே…’’

Kevin Hart

`ஒன்றை உருவாக்கும்போதான த்ரில்லிலும், ஒன்றை அடையும்போதான களிப்பிலும்தான் உறைந்துகிடக்கிறது மகிழ்ச்சி.’ – முன்னாள் அமெரிக்க அதிபர் ஃப்ராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட்.

தனக்கென ஒரு பெயரை, ஓர் அடையாளத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என முடிவெடுத்தார் கெவின் ஹார்ட். அதற்காகக் கடுமையாக உழைத்தார். பிலடெல்பியாவில் முதல் பர்ஃபாமென்ஸிலும், அதற்கடுத்த நிகழ்வுகளிலும் விழுந்த அடி அவரை யோசிக்கவைத்தது. அதற்காக அவர் ஸ்டாண்ட்-அப் காமெடியை விடுவதாக இல்லை. எங்கெல்லாம் மேடை கிடைக்கிறதோ அங்கெல்லாம் போனார். நிகழ்வின்போது எது நடந்தாலும் அவருடைய கவனம் சிதறவில்லை. பார்வையாளர்கள் கொஞ்சம்கூட சிரிக்காமல் வாயில் பிளாஸ்திரி ஒட்டப்பட்டதைப்போல அமைதியாக இருக்கிறார்களா… இருக்கட்டும்.

யாரோ ஓரிருவர் எழுந்து, `ஸ்டேஜைவிட்டு இறங்கு… எங்களுக்கு சிரிப்பே வர மாட்டேங்குது’ எனச் சத்தம் போடுகிறார்களா… போடட்டும். அரங்கத்தில் இருக்கும் கடைசி மனிதரும் எழுந்து நடையைக்கட்டுகிறாரா… கட்டட்டும். அசராமல் தன் காமெடியைத் தொடர்ந்துகொண்டிருந்தார் ஹார்ட். அதேநேரம் தன் காமெடி நிகழ்வுக்கான கிராஃப்ட்டை மெல்ல மெல்ல மாற்றி, வேறு மாதிரி வளர்த்துக்கொண்டிருந்தார். `மறந்தும்கூட இன்னொரு காமெடியனைப்போல எதையும் செய்யக் கூடாது. தனக்கென ஒரு பாணியை உருவாக்க வேண்டும்’ என்று முடிவெடுத்துக்கொண்டார். உலகம் அவரை கவனிக்க ஆரம்பித்தது. உலகம் அவரைப் பற்றிப் பேச ஆரம்பித்தது. உலகம் அவருடைய ஸ்டாண்ட்-அப் நிகழ்ச்சி இன்று எங்கு நடக்கிறது என்று தேட ஆரம்பித்தது. உலகம் அவரைக் கொண்டாட ஆரம்பித்தது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படம் என அவர் கலைப்பயணம் சக்கைபோடு போட்டது.

Kevin Hart

கீழே விழும்போதெல்லாம் உடலில் ஒட்டிய மண்ணைத் தட்டிவிட்டுத் திரும்ப ஓடுவதுபோல, வாழ்க்கையில் சறுக்கல்கள் ஏற்படும்போதெல்லாம் அவற்றை எதிர்கொள்ளப் பழகினார் ஹார்ட்டி. 2009-ம் ஆண்டிலிருந்து அவருக்கு ஏறுமுகம். 2011-ல் அவர் நிகழ்த்திய `Laugh at My Pain’, 2013-ல் நிகழ்த்திய `Let Me Explain’ இரண்டும் திரைப்படங்களாக எடுக்கப்பட்டு, தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டன. 2002-ல் அவருடைய முழு நடிப்பில் உருவான முதல் படம் `Paper Soldiers.’ ஸ்டாண்ட்-அப் காமெடியை விடாமல் நிகழ்த்தியபடி திரைப்படங்களில் கிடைக்கும் ரோல்களிலெல்லாம் நடிக்க ஆரம்பித்தார். `Scary Movie 3 and 4′, `The 40 Year Old Virgin’, `Barbershop’, `Little Fockers’, `Jumanji: Welcome to The Jungle’, `Jumanji: The Next Level’ ஆகிய படங்கள் அவருக்குப் பெரும் புகழைச் சம்பாதித்துக்கொடுத்தன.

ஊர் ஊராகச் சென்று நிகழ்த்தும் அவருடைய காமெடி டூர்கள் வெகு பிரபலம். `What Now’ என்ற காமெடி டூரை அவர் நடத்தினார். 2015, ஜூன் 16 அன்று நிகழ்ந்த அந்த நிகழ்வை யூனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனம், லைவாக படம் பிடிக்கப்போவதாக அறிவித்தது. அன்றைக்கு கெவின் ஹார்ட்டுக்கு முன்னால் கூடிய பார்வையாளர்களின் எண்ணிக்கை 53,000. கெவின் ஹார்ட்டின் இணையதளத்தைப் பார்த்தால் அவருடைய ஷெட்யூல் மலைக்கவைக்கிறது. வாரத்துக்கு மூன்று அல்லது நான்கு நாள்களாவது ஊருக்கு ஊர் பறந்துகொண்டிருக்கிறார் மனிதர்.

Kevin Hart

அவர்மேல் விமர்சனங்கள் எழாமல் இல்லை. அதையெல்லாம் அவர் கண்டுகொள்வதும் இல்லை. “நான் எவ்வளவு பிஸியாக இருக்கிறேன் என்பது குறித்து நான் கவலைப்படுவதில்லை. எனக்கு மிகவும் முக்கியம் என்று படுகிற விஷயங்களுக்கு நான் என் நேரத்தை ஒதுக்கிக்கொண்டுதான் இருக்கிறேன்’’ என்கிறார் கெவின் ஹார்ட். அதனால்தான், மனிதர் இன்னும் இன்னும் என்று உயரே உயரே பறந்துகொண்டேயிருக்கிறார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.