Doctor Vikatan: 35 வயதான எனக்கு அடிக்கடி சளி பிடித்துக்கொள்கிறது, மூச்சுவிடுவதில் தொந்தரவு, அலுவலகத்தில் அசௌகர்யமாக உணர்கிறேன். இந்தப் பிரச்னைக்கு என்ன காரணமாக இருக்கும்…. இதிலிருந்து விடுபட நிரந்தர தீர்வுதான் என்ன?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் திருப்பதி

நுரையீரல் மருத்துவர் திருப்பதி

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அறிகுறிகளை வைத்துப் பார்க்கும்போது இது  ‘சைனசைட்டிஸ்’ பாதிப்பாகவே தெரிகிறது. இது போன்ற அறிகுறிகள், தொடர்ச்சியாக இல்லாமல், விட்டு விட்டு வருகின்றன, பனிக்காலத்தில் அதிகரிக்கின்றன, தூசு நிறைந்த சூழலில் அதிகரிக்கின்றன, வாசனைப் பொருள்களால் வருகின்றன என்றால் அது தொற்றுநோயாக இருக்க வாய்ப்பில்லை. அலர்ஜியின் காரணமாக ஏற்பட்டதாகவே இருக்கும். 

இந்த அலர்ஜியானது மேல் சுவாசப்பாதையில் இருந்தால் மூக்கிலிருந்து நீர் வடிதல், மூக்கு அடைத்துக்கொள்வது,  தொண்டையைச் செருமியபடி இருப்பது, தும்மல், தலைவலி போன்ற அறிகுறிகள் இருக்கும். இதையே நாம் சைனசைட்டிஸ் (sinusitis ) அல்லது அலர்ஜிக் ரைனிட்டிஸ் ( Allergic rhinitis ) என்று சொல்கிறோம். 

அதுவே, அந்த அலர்ஜியானது நுரையீரலுக்கு வந்துவிட்டால் அதை  ஆஸ்துமா என்று சொல்கிறோம். இதற்கான அறிகுறிகள் தொடர்ச்சியாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஒவ்வாத சூழல், பொருள்கள் போன்றவை பாதிப்பை ஏற்படுத்தலாம். சிகிச்சை எடுக்கும்போது பிரச்னைகளே இருக்காது.

ஆஸ்துமா

மருத்துவப் பரிசோதனையில் சம்பந்தப்பட்ட நபருக்கு வீஸிங் இருப்பது தெரியவரும். ஆஸ்துமாவை உறுதிசெய்ய இன்று நவீன பரிசோதனைகள் பல உள்ளன. அதைக் கண்டறிய சம்பந்தப்பட்ட நபர் முதலில் நுரையீரல் மருத்துவரையோ, இன்டர்னல் மெடிசின் நிபுணரையோ அணுக வேண்டும்.

அடிக்கடி பாதிப்பு வருவதற்கான காரணங்களைக் கண்டுபிடித்து அதற்கேற்ற சிகிச்சைகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். அலர்ஜி என்பது  குணப்படுத்தக்கூடியதா என்று கேட்டால், அலர்ஜிக்கு காரணமான விஷயங்களில் இருந்து விலகி இருக்கும்போது அது சாத்தியம்தான்.

உதாரணத்துக்கு, ஒருவர் ஸ்பிரே பெயின்ட்டிங் செய்கிற வேலையில் இருக்கிறார் என வைத்துக்கொள்வோம்.  அவருக்கு பெயின்ட் மூலம் அலர்ஜி தூண்டப்படுகிறது என்ற நிலையில் வேலையை மாற்றிக் கொள்ளும்போது பாதிப்பு சரியாகிவிடும். பெரும்பாலான நேரங்களில் ஒரு நபருக்கு எது அலர்ஜியை உருவாக்குகிறது என்பதைக் கண்டுபிடிக்க முடிவதில்லை. 

அலர்ஜி

தூசு ஏற்படுத்தும் ஒவ்வாமைதான் நம்மூரில் மிக அதிகம்.  தூசு இல்லாத சூழலில் வாழ்வதென்பது சாத்தியமும் இல்லை.  முடிந்தவரை அதிலிருந்து விலகி இருப்பதன் மூலம்  அலர்ஜி பாதிப்பிலிருந்தும் விலகி இருக்க முடியும்.  அலர்ஜியை பொறுத்தவரை நிரந்தர நிவாரணம் என்பதைவிட, கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என்பதுதான் சரியாக இருக்கும். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.