கிழக்குக் கடற்கரை சாலை. காதல் ததும்பத் தோதுவான இடமென்பது பைரவ் – மேகாவின் கணக்கு.

“ஏதோ நானும் உளற… கொஞ்சம் காதல் வளர… உள்ள வெட்கம் வளர… அவ வந்தா தேடியே…’’ –

லேட்டஸ்ட் ஹிட் பாடல் ஒன்று ஒலிக்க சிறிய நடன அசைவுகள் காட்டிக் கொண்டே காரில் பயணித்துக் கொண்டிருந்தார்கள்.

Lovers I Romance

மேகாவுக்கு அலுவலகத்தில் முக்கியமான பவர் பாயின்ட் ப்ரெசென்டேஷனை முடிக்க வேண்டி இருந்ததால் காதலர் தின கொண்டாட்டத்தை இரண்டு நாள்கள் தள்ளிப்போட வேண்டி இருந்தது. இருவரும் காதலிக்கத் தொடங்கி இது ஆறாவது மாதம். `முதல்ல பழகிப்போம். ரெண்டு, மூணு வருஷத்துக்கு ஜாலியா லவ் பண்ணிட்டு, அப்றமா வீட்ல சொல்லி கல்யாணம் பண்ணிக்கலாம்’ என்பதுதான் இருவரின் பரஸ்பர ஒப்பந்தம்.

“ஹே பேபி… ஐ வான்னா கிஸ் நவ்’’ என ஹம்மிங் வாய்ஸில் ஆரம்பித்தாள் மேகா. அப்போது அவள்தான் காரை ஓட்டிக் கொண்டிருந்தாள்.

“என்னடி டிரைவிங்ல கிஸ் கேக்குற… பார்க் பண்ணிட்டு எங்காச்சும் ட்ரை பண்ணலாம்.’’

கியர் இல்லாத ஆட்டோமெட்டிக் கார் என்பதால் அவள் இடது கைக்கு பெரிய வேலை எதுவும் இல்லாமல், பைரவின் முள் குத்தும் தாடியையே வருடிக் கொண்டிருந்தாள்.

Lovers I Romance

“இந்த மூவிஸ்ல வர மாதிரி ஏதாச்சும் பேண்டஸியா பண்ண முடியுதா பாரேன்… கார்ல ரன்னிங்ல ரொமான்ஸ் பண்ண முடியல. நிறுத்திட்டுப் பண்ணலாம்னா… எங்க பாத்தாலும் சிசிடிவி கேமராஸ். கொஞ்சம் நேரம் வண்டிய நிறுத்துனாவே… பின்னாடியே போலீஸ் பேட்ரோல் வந்து என்கொயரி ஆரம்பிச்சிடுறாங்க. ஒரு காலத்துல எப்படி இருந்த ஈ.சி.ஆர்… இப்ப இப்டி செம ஸ்ட்ரிக்ட் ஆகிடுச்சுல்ல…’’

– ரொமான்ஸ் தடைபடும் வருத்தத்தில் புலம்ப ஆரம்பித்திருந்தாள் மேகா.

“காசு இருந்தா ஏதாச்சும் ரெசார்ட். இல்லாட்டி நம்ம வீடு. அவ்ளோ தாண்டி நம்ம ப்ரைவசி. ஓவரா பப்ளிக்ல ஃபீலிங்ஸ் காட்ட ஆரம்பிச்சா எவனாச்சும் வீடியோ எடுத்து கன்டென்ட் ஆக்கிருவான்…’’ – சத்தமாகச் சிரித்தான் பைரவ்.

மேகா ஆசை ஆசையாக ரொமான்ஸ் மூடில் கேட்டதை பைரவ் காமெடியாக்கியதை அவளால் அந்த நேரத்துக்கு ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதற்கு மேலும் அவனிடம் பேசினால் ஏதோ முத்தத்துக்கு அலைவதுபோல் ஆகிவிடும் என மௌனம் காத்தாள். காரின் வேகம் கூடியிருந்தது. இதமான இசையோடு இரவு நேரத்தில் வாய்த்த பயணத்தை அனுஅனுவாய் அனுபவிக்காத ஒரு மடையனைப் பற்றித்தான் அவள் அப்போதைக்குக் கவலை கொண்டிருந்தாள்.

நாலாப்புறமும் இருட்டு. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை முன்னும் பின்னும் வாகனங்கள் வரவில்லை என்பதை உறுதி செய்து கொண்டதும் காரை சட்டென ப்ரேக் போட்டு நிறுத்தினாள்.

Kiss (Representational Image

`அடிப்பாவி… ஒரு கிஸ்க்காக இப்டி ஆளில்லாத இடத்துல வண்டியை நிறுத்திட்டு பயங்காட்டுறாளே… சரி என்ன இப்ப… ஒரு ஹக்…ஒரு கிஸ் தானே…’ – மைண்ட் வாய்ஸில் பேசிக்கொண்டே தன் உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டு தயார் நிலையில் இருந்தான் பைரவ். ’புஷ்பா’ படத்தின் ஹீரோ அல்லு அர்ஜூன் போல தாடியை நீவி ஏதேதோ மேனரிசம் காட்டியபடி மேகாவின் இடது கையை இறுக்கமாகப் பிடித்தான்.

“ஹேய் பேபி சீக்கிரம்…’’ – அவள் தாடையைத் தன் பக்கமாகத் திருப்பினான். அவன் கையில் ஈரம் ஒட்டிக் கொண்டது. ஏற்கெனவே அவள் அழுதிருந்தாள். அவள் கன்னத்தை நனைத்திருந்தது கண்ணீர்.

“இப்ப என்னாச்சு…. எதுக்காக அழற?’’ – அமைதியாக இருந்தாள். தூரத்தில் ஏதோ வாகனம் வருவது ரியர்வியூ கண்ணாடியில் தெரிந்தது. அதைப் பற்றி இருவருமே அலட்டிக் கொள்ளவில்லை. முத்தம் கொடுக்கத் தயாராக ஈரப்படுத்திய அவன் எச்சில் உதடுகள் வறண்டு போக ஆரம்பித்தன. அவள் அழுது கொண்டே இருந்தாள். சிறிய அமைதி.

“உனக்கென்ன தெரியும்… நான் இப்ப ப்ரெக்னன்ட்டா இருக்கேனோனு டவுட்டா இருக்கு’’ – பகீரென வாரிப் போட்டது பைரவுக்கு.

“ஹேய்… இதை ஏன் நீ அப்பவே சொல்லல…? எல்லாமே சேஃப்டியான டேய்ஸ்லதானே பண்ணோம்…?’’

“ஓ… அப்ப நான் தான் மிஸ்டேக் பண்ணிட்டேன்னு சொல்ல வர்றீயா?’’

“ஏய்… இல்லடி… நீ சொல்ற கவுன்ட் வச்சுதானே நான் ஃபாலோ பண்றேன். இல்லாட்டி இது எப்டி?’’

பைரவ் குழப்பத்தில் கேட்கிற கேள்விகள்கூட மேகாவுக்கு அவன் வேண்டுமென்றே கேட்பது போல் இருந்தது.

Couple (Representational image)

மாதவிடாய் தள்ளிப்போய் ஒரு வாரம் ஆகியிருந்தது. அதைப் பற்றி அவனாகவே வந்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது ஓரளவுக்கு நியாயம் என்றாலும், இப்போது தள்ளிப் போனதைப் பற்றிச் சொல்லும்போது, இப்படி நடக்கவும் வாய்ப்பிருக்கலாம் என யோசிக்காமல், திரும்பத் திரும்ப மேகாவிடமே சந்தேகம் கேட்டுக் கொண்டிருக்கும் பைரவ் மீது அவளுக்கு இன்னும் கூடுதலாய் கோபம் கொப்பளித்தது.

எதுவும் பேசாமல் வண்டியைத் திருப்பினாள். பைரவ்வை டிராப் செய்துவிட்டு கிளம்பிப் போனாள். வரும் வழியெல்லாம் பைரவ் ஒரே கேள்வியையே கேட்டுக் கொண்டிருந்தான்.

“ ஓகே… இப்ப என் மேலயே மிஸ்டேக்னு கூட வச்சிக்க… அடுத்து என்ன பண்ணலாம்?’’

“அதை பத்தி நீ ஒண்ணும் பேச வேணாம். வில் யூ ப்ளீஸ் ஷட் அப்?’’

பைரவிடம் கத்திவிட்டு வந்ததை நினைத்துக் கொண்டே வீட்டுக்கு வந்து இறங்கினாள்.

“ஸாரி பேபி’’ என்றொரு மெசெஜ். நோட்டிஃபிகேஷனிலேயே மெசெஜைப் படித்துப் பார்த்துவிட்டதால் ஓபன் செய்யாமல்விட்டாள். அடுத்தடுத்த எதற்கும் ரிப்ளை இல்லை. பைரவ் போன் செய்துப் பார்த்தான். பலமுறை போனை எடுக்காமல் இரண்டு நாள்களுக்குப் பிறகே, கடமையே என்று போனை எடுத்தாள்.

“கோவமா?’’

“வேறென்ன… சொல்லு?’’

“மீட் பண்ணலாமா?’’

“ஒரு டேஷும் தேவையில்ல..’’

Lovers I Romance

பைரவ் எதைப் பற்றி பேசினாலும் பேச்சை வளர்க்காமல் துண்டித்துக் கொண்டே இருந்தாள். `திருமணம் வரைக்கும் அன்லிமிட்டட் ஜாலியாக இருப்போம். கல்யாணத்துக்குப் பிறகு தான் குழந்தையைப் பத்தியெல்லாம் யோசிக்கணும்… டீல் ஓ.கேவா?’ என்று கேட்டு இருவரும் டீலை ஓ.கே செய்த பிறகு கடந்து வந்த ஆறு மாதத்தில், இப்போதுதான் இப்படியொன்று நிகழ்ந்திருக்கிறது. ஒருவேளை அறிந்தோ அறியாமலோ, தெரிந்தோ தெரியாமலோ ஏதாவது நடந்துவிட்டாலும் கண்ணை மூடிக் கொண்டு குழந்தைக்கு `நோ’ சொல்லிவிட்டு மகப்பேறு மருத்துவரை அணுகுவதுதான் இருவரின் கையில் இருந்த இரண்டாவது சாய்ஸ்.

“இப்ப நாம என்ன தப்பு பண்ணிட்டோம்… இதெல்லாம் ஆல்ரெடி பேசி வச்சது தானே? இவ ஏன் இப்டி நம்மகிட்ட கோவிச்சிக்கிறா?’’ – சிகரெட்டைப் புகைத்தபடி பால்கனியில் நின்றவாறு யோசித்துக் கொண்டிருந்தான் பைரவ்.

`படவா… ராஸ்கல்… நான் எதுவும் சொல்லாட்டி இவன் எதுவுமே கேட்க மாட்டானா? ஒரு சின்ன கேர் கூடவா இருக்காது? ரெண்டு வாரம் தள்ளிப் போயிருக்குனு தெரிஞ்சும் பயமே இல்லாம எப்டி இவனால வேற டாபிக்ல ரொம்ப கூலா பேச முடியுது? அவனுக்கென்ன… என்ன இருந்தாலும் என்னோட ஹெல்த் தானே இங்க நாசமா போகப் போகுது… ப்ளடி ராஸ்கல்’ – தனக்குத் தானே புலம்பித் தீர்த்தாள். இரவெல்லாம் அவளுக்கு உறக்கமில்லை. சரியாக காலை 10 மணிக்கு அவன் வீட்டுக்கு வருவதாகச் சொல்லி காலை 6 மணிக்கெல்லாம் போன் செய்துவிட்டு குளிக்கப் போனாள். அலுவலகத்துக்கு அரைநாள் விடுப்பெடுத்துக் கொண்டு மேகாவுக்காக தன் வீட்டிலேயே காத்திருந்தான் பைரவ்.

மணி 10. வந்ததும் வராததுமாக பைரவின் கன்னத்தில் ஓங்கி ஓர் அறைவிட்டாள்.

Fight (Representational Image)

“எவ்ளோ செல்ஃபிஷ் தெரியுமா நீ?’’

அடி வாங்கினாலும் அவளைப் பேச விட்டான்.

“ரெண்டு வாரம் எக்ஸ்ட்ரா ஆகி இருக்கேனு ஒரு கவலை இருக்கா உனக்கு? அபார்ட் வரைக்கும் போனா என் ஹெல்த் ஸ்பாயில் ஆகும்னு தோணலைல உனக்கு? நடந்து முடிஞ்சதுல ரெண்டு பேர் மேலயும் மிஸ்டேக் இருக்கலாம். அதுக்காக, என்ன ஆச்சுனு கேட்கவே மாட்டியா? ஹாஸ்பிட்டல் போலாமானு கூடவா கேக்க மாட்டே?’’ – பேசி முடித்தாள்.

“நம்ம ரெண்டு பெரும் இந்த விஷயத்துல ரொம்ப மெச்சூர்டு தானே… இதுல என்ன ஈகோ வேண்டி இருக்கு. நீ ஓபனா சொன்னா நான் கூட்டிட்டுப் போக மாட்டேனா என்ன?’’ – பதிலுக்குப் பொரிந்தான்.

“நான் உன்னை அவாய்டு பண்ணலடி..’’

“யெஸ்… அதே போல நீ என்ன கேர் பண்ணவும் இல்ல. இந்த மாதிரி டைம்ல அவாய்டு பண்றது போலவே வலி, கேர் பண்ணாம இருக்குறதும் தான். இதுல உனக்கு பங்கிருக்குன்னா… நீயே இந்த டாபிக் ஓபன் பண்ணி கேட்டிருக்கணும்.’’ – மேகா கேட்கும் கேள்விகளுக்கு பைரவிடம் பதில் இல்லை. என்ன இருந்தாலும் அவள் சொல்வதில் நியாயம் இருப்பதாகவே உணர்ந்தான். அவளை சமாதானம் செய்கிற சூழலுக்கு அவளும் இடம் கொடுக்கவில்லை. இருவரும் வெவ்வேறு திசைகளில் உட்கார்ந்தபடி சுவரைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நேரம் போனது.

ஒரு கட்டத்தில், மேகாவின் பின்னங்கழுத்தில் தன் விரல்கள் பதித்தபடி, மெதுவான குரலில் `ஸாரி’ என்றான்.

உடைந்து அழுதாள். அவளை இறுக அணைத்தபடி கேட்டான்…

“ஆர் யூ ஓகே… ஹாஸ்பிட்டல் போலாமா?’’

“ஒண்ணும் தேவையில்ல… அப்டியெல்லாம் ஒண்ணும் ஆகலை’’ – கண்கள் துடைத்தாள் மேகா.

“ஆமா… காலைலயே செக் பண்ணிட்டேன். நெகட்டிவ் தான். ஹெல்த் வீக்னஸ்னால பீரியட்ஸ் தள்ளிப் போகுது போல. ஆனா, பயந்துட்டேன் தெரியுமா?’’ – குழந்தையைப் போல் உதட்டைப் பிதுக்கிச் சொன்னாள்.

பைரவ்வுக்கு அவள் மீது கொஞ்சம் கூட கோபம் வரவில்லை. எவ்வளவு தான் ஒத்திசை கருத்துகளும் முதிர்ச்சியான மனநிலை கொண்டவர்களாக இருந்தாலும் கூட, அன்பும் அக்கறையும் தேவைப்படும் இடங்களில் அதை அந்தந்த நேரத்துக்கு ஈகோ பார்க்காமல் தானாகவே முன் வந்து காட்டிவிடாமல் போனது தன் தவறு என்பதைப் புரிந்து கொண்டான்.

காதல் என்பது வெறும் உதட்டு முத்தங்களால் ஆனது மட்டுமல்ல. அது பரஸ்பரம் நம்பிக்கை, அக்கறை , பகிர்தல் என எல்லாவற்றிலும்தான் குவிந்திருக்கிறது. மேகா, ஒருவேளை தான் கர்ப்பமாகி இருந்தால் என்னவாவது என்கிற உடல் சார்ந்த அச்சத்தை உள்வைத்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்ததை பைரவ் உணராமல் போனதைத்தான் அவளால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

Lovers I Romance

காலங்காலமாகப் பெண்ணுடலை கொண்டாடும், அல்லது பெண்ணுடல் மீது அக்கறை செலுத்தும் ஆண்களையே தனக்கானவனாக நினைத்துப் பெருமை கொள்ளும் சராசரி பெண் நேகா. இன்னொரு பக்கம், பெண்ணாக வந்து சொல்லாத வரை தானாக சென்று விசாரித்து அறிந்து கொள்ளத் தேவையில்லை என்று நினைக்கிற சராசரி இளைஞன் பைரவ். சினிமாவில் பார்ப்பது போன்ற பேண்டஸி முத்தங்களையும், கிக்கான காதல் காட்சிகளையும் நிஜத்தில் அரங்கேற்றிவிட்டால் தங்க்ள் காதல் அழகாகிவிடும் என்று நினைத்துக் கொண்டிருந்த இருவருக்கும், பேண்டஸியை விட ரியாலிட்டி குறித்த புரிதல் ஏற்பட இந்த சம்பவம் பெரிதாய் உதவி இருந்தது.

இதில் இருவர் மீதுமே தவறு இல்லை என்றாலும் கொட்டித் தீர்க்கும் அன்பைத் தாண்டிய `அக்கறை’ காதலுக்கு அச்சாணியாய்த் தேவைப்படுகிறது.` லவ் யூ’- வைப் போலவே `டேக் கேர்’ என்கிற வாக்கியமும் காதலுக்கு இரடிப்பு பலம் தானே!

“ஸாரி பேபி…’’ – அவள் காதருகே சொன்னான்.

“இப்ப எதுக்கு நீ கிட்ட வர்றே… அடுத்தவாட்டி ப்ரெக்னென்ட் ஆனா கூட ஆறு மாசம் வரைக்கும் உன்கிட்ட சொல்லவே மாட்டேன் பாரு…’’ – பைரவ்வின் கழுத்தை நெட்டிப் பிடித்து தூர தள்ளினாள். மெதுவாய்ப் புன்னகைத்தவன், “வேணும்னா ட்ரை பண்ணி பாக்கலாமா?’’ என்றபடி அசட்டுச் சிரிப்போடு மேகாவை இறுக அணைத்தான். ’`பொறுக்கி’’ என்று சொல்ல நினைத்தவளுக்கு, கடைசியாக ஒலிக்க வேண்டிய `கி’ என்ற எழுத்து அவள் இதழ்களிலிருந்து வெளியேறி ஒலிப்பதற்கு முன்பாகவே அவன் அவள் இதழ்களைப் பற்றி முத்தமிட்டுக் கொண்டிருந்தான்.

வெளியில் உச்சி வெயில். அறையில் இருந்த ஈகோ வெளியில் வந்து தன்னைத் தானே சுட்டெரித்துக் கொண்டது.

ரகசியங்கள் தொடரும்!

– அர்ச்சனா

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.