இந்தியர்களின் தவிர்க்க முடியாத அடையாளமாக மத்திய அரசு அறிமுகப்படுத்திய ஆதார் கருதப்படுகிறது. வங்கிக் கணக்கு முதல் இறப்புச் சான்றிதழ் வரை அனைத்துக்கும் ஆதார் கட்டாயம் என மத்திய அரசு திட்டம் வகுத்திருக்கிறது. அதே நேரம் ஆதாரில் இருக்கும் தரவுகள் திருடப்படுவதாகவும், ஆதார் பாதுகாப்பற்று இருப்பதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், அமெரிக்காவைச் சேர்ந்த சைபர் செக்யூரிட்டி நிறுவனமான ரீ-செக்யூரிட்டி (resecurity) நிறுவனத்தின் அறிக்கையின்படி, சுமார் 81.5 கோடி இந்தியர்களின் ஆதார் உள்ளிட்ட தனிப்பட்ட அடையாளம் காணக்கூடிய தகவல்கள், டார்க் வெப்பில் கசிந்துள்ளதாகவும், அதை அடையாளம் தெரியாத நபர் $80,000 டாலருக்கு விற்கத் தயாராக இருப்பதாகவும் தகவல் தெரிவித்தது.

ஆதார்

இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் குறிப்பிட்ட சமூக மக்களின் ஆதார் அட்டைகள் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் முடக்கப்பட்டிருப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியிருக்கிறார். இது குறித்து பிர்பூமில் நடந்த பொது விநியோகத் திட்ட நிகழ்வில் பேசிய மம்தா பானர்ஜி, “நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில், பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு, எனது அரசின் பல்வேறு சமூக நலத் திட்டங்களின் பலன்கள், மக்களுக்குச் செல்வதைத் தடுக்கும் விதமாக, மக்களின் ஆதார் அட்டைகளை முடக்கியிருக்கிறது.

குறிப்பாக எஸ்.டி., எஸ்.சி., சிறுபான்மையினரில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களின் ஆதார் அட்டைகள் முடக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இது குறித்து மாநில அரசுக்கோ, மாவட்ட ஆட்சியருக்கோ எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை.

பண மதிப்பிழப்பு என்ற பெயரில் மக்களை பெரும் சிரமத்துக்குள்ளாக்கினார்கள். அதைத் தொடர்ந்து, ஆதார் அட்டை எடுக்க வேண்டும், அதை அனைத்து அரசு அலுவலக விவகாரங்களிலும் இணைக்க வேண்டும் எனச் சிரமப்படுத்தினார்கள். தற்போது அதையும் முடக்கிவருகிறார்கள். இது ஆளும் பா.ஜ.க-வின் பாசிச சதி என்றே சொல்ல வேண்டும். மேற்கு வங்க மக்களுக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன்…. நீங்கள் பயப்பட வேண்டாம். நான் இருக்கிறேன்.

மம்தா பானர்ஜி

இனி மேற்கு வங்கத்தில் எந்த அரசு திட்டத்தையும் ஆதார் அட்டையுடன் இணைக்க அனுமதிக்க மாட்டேன். இது மையத்தின் சதி… இனி ஆதார் இருக்கிறதோ இல்லையோ, மாநில அரசின் எந்தத் திட்டமும் பயனாளிகளுக்கு நிறுத்தப்படாது. மாநிலத்தில் பலரின் ஆதார் அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே, ஆதார் ரத்து தொடர்பான புகார்களை மக்கள் தெரிவிக்க போர்ட்டலைத் தொடங்குமாறு தலைமைச் செயலாளர் பி.பி.கோபாலிகாவுக்கு உத்தரவிட்டிருக்கிறேன். புகார்களைப் பெற்ற பிறகு, சரியான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், “ஆதார் முடக்கம் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான பாதிக்கப்பட்ட மக்கள், நிவாரணத்திற்காக மாநில அரசை அணுகி வருகின்றனர். மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் இது தொடர்பாக அச்சத்தில் உள்ளனர். ஆதார் கார்டுகளை திடீரென செயலிழக்கச் செய்ததற்கான காரணங்களை உங்களிடமிருந்து அறிய விரும்புகிறேன். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன், மாநில அரசின் நலத் திட்டங்கள் தகுதியான பயனாளிகளுக்குச் செல்வதை தடுக்கும் சதியா அல்லது,

மம்தா – மோடி

இந்த திடீர் செயலிழப்பு தேசிய குடிமக்கள் மீதான NRC கொண்டு வருவதற்கு முன்னோடியா என்ற சந்தேகம் வலுக்கிறது” எனக் குற்றம்சாட்டியிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து. செய்தியாளர்களைச் சந்தித்த மம்தா பானர்ஜி, “ஆதார் அட்டைகள் செயலிழக்கச் செய்யப்பட்டவர்களுக்கு, மாற்று அடையாள அட்டையை எனது அரசு வழங்கும். செவ்வாய்க்கிழமை முதல் ‘ஆதார் குறைகள் போர்டல்’ செயல்படுகிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.