சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 12-ம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவர்மீதான அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகளைப் பதிவுசெய்வதற்கு இன்று (16.02.2024) தேதி குறிக்கப்பட்டிருந்தது. இதற்காக செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட வேண்டும் எனவும், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இந்த நாளில் நடந்த 4 முக்கியமான அப்டேட்டுகளைப் பார்க்கலாம். 

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் தன்மீது அமலாக்கத்துறை பதிவுசெய்த வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க வேண்டுமென்ற செந்தில் பாலாஜியின் மனுவை, முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் நீதிமன்றத்தில் முறையிட்டார். மறு ஆய்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்காவிட்டால், குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டுவிடும் எனவும் முறையிடப்பட்டது. ஆனால், வழக்கமான பட்டியலில் பட்டியலிடப்படும் எனக் கூறி, அவசர வழக்காக இதனை விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. 

அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி (discharge pettition) செந்தில் பாலாஜி தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விடுவிக்கக் கோரிய மனுமீது உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, குற்றச்சாட்டுகள் பதிவை தள்ளிவைக்கவும் கோரப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்

செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவுசெய்ய செந்தில் பாலாஜி இன்று நேரில் ஆஜராக உத்தரவிட்ட நிலையில், போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் பதிவுசெய்யப்பட்ட 3 வழக்குகளின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரமில்லை எனவும், வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை குற்றச்சாட்டுகள் பதிவை தள்ளிவைக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு முதன்மை அமர்வு நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி வழக்கில் இன்று குற்றச்சாட்டு பதிவு இல்லை என்றும், அவரை நேரில் ஆஜர்படுத்த தேவையில்லை என்றும் நீதிபதி தெரிவித்தார்.
மேலும், நீதிமன்றக் காவல் நீட்டிப்புக்காக காணொலியில் ஆஜர்படுத்த செந்தில் பாலாஜி தரப்புக்கு உத்தரவிட்டார்.

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைவதால், புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை பிப்ரவரி 20-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன் மூலம் 21-வது முறையாக நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.