ரஷ்ய அதிபர் புதின் ஆட்சிக்கு எதிராகத் தீவிரமாகச் செயல்பட்டுவந்த, 47 வயது எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி (Alexei Navalny), சிறையில் இன்று உயிரிழந்த சம்பவம் ரஷ்யாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ரஷ்யாவின் மிக முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவல்னி ஒரு வழக்கறிஞருமாவார். அதிபர் புதினின் ஊழல் குறித்து தொடர்ச்சியாக வெளியில் பேசியதன் மூலம் மக்களிடையே இவர் பெரும் ஆதரவைப் பெற்றார்.

அலெக்ஸி நவல்னி

இதற்காகவென்று, `ஊழல் எதிர்ப்பு அறக்கட்டளை’ என்ற ஒன்றை இவர் நிறுவினார். X சமூக வலைதளத்தில் 2.9 மில்லியன் பேர் இவரை பின்தொடர்கின்றனர். ரஷ்யாவில் கடுமையான anti-protests சட்டங்கள் இருந்தபோதிலும், புதினின் ஊழல் தொடர்பாகத் தனது யூடியூப் சேனலில் அவர் வெளியிட்ட வீடியோக்கள் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களைக் கடந்து, அரசுக்கு எதிராக மக்களை வீதியில் இறங்கிப் போராட வைத்தது.

விளாடிமிர் புதின்

இதற்கிடையில், நஞ்சு கலந்த உணவைச் சாப்பிட்டு பாதிப்புக்குள்ளாகி, ஜெர்மனியில் அதற்குச் சிகிச்சை மேற்கொண்டுவிட்டு 2021-ல் நாடு திரும்பிய அலெக்ஸி நவல்னியை, புதின் அரசு பல்வேறு வழக்குகளில் சிறையில் அடைத்தது. மொத்தமாக 19 ஆண்டுகள் சிறைத் தண்டனைகள் விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு இறுதியில் வடக்கு சைபீரியாவில் ரஷ்யாவின் யமலோ-நெனெட்ஸ் (Yamalo-Nenets) பகுதியிலுள்ள ஆர்க்டிக் சிறைக்கு அவர் மாற்றப்பட்டார்.

இந்த நிலையில், சிறையில் அலெக்ஸி நவல்னி இன்று உயிரிழந்துவிட்டதாக ரஷ்யாவின் federal penitentiary service அறிவித்திருக்கிறது. மேலும், இந்த சம்பவம் குறித்து சிறைத்துறை நிர்வாகம், “அலெக்ஸி நவல்னி சிறையில் வாக்கிங் (Walking) சென்றுவந்த பிறகு உடல்நிலை சற்று மோசமாக உணர்ந்தார். பின்னர் உடனடியாக சுயநினைவிழந்து மயக்கமடைந்தார். மருத்துவ பணியாளர்கள் உடனடியாக வந்து ஆம்புலன்ஸ் குழுவை அழைத்தனர்.

அலெக்ஸி நவல்னி

பின்னர், அவரை விழிக்க வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அதில் எந்தப் பலனும் கிட்டவில்லை. அவர் உயிழந்துவிட்டதாக துணை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்” என்று தெரிவித்திருக்கிறது. அதோடு, அலெக்ஸி நவல்னி மரணம் குறித்து விசாரணையைத் தொடங்கியிருப்பதாக ரஷ்யாவின் விசாரணைக் குழு கூறியிருக்கிறது.

அலெக்ஸி நவல்னி

இருப்பினும், அலெக்ஸி நவல்னியின் செய்தித் தொடர்பாளர் கிரா யர்மிஷ் (Kira Yarmysh), மரணம் குறித்து தனது குழுவுக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும், சிறைச்சாலை இருக்கும் கார்ப் (Kharp) நகரத்துக்கு அலெக்ஸி நவல்னியின் வழக்கறிஞர் வந்துகொண்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். அதேசமயம், அலெக்ஸி நவல்னியின் மரணம் குறித்து புதினுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.