போராட்டக்காரர்களின் ஆதங்கத்தை நிர்வாகத்தின் அதிகார மையத்துக்கு எதிராக முழுமையாக வெளிப்படுத்த இயலவில்லை. அந்த விரக்தியானது அவர்களின் சக தொழிலாளர்களுக்கு எதிரான வன்மமாய் வெளிப்படத் துவங்கியது.

எஸ்டேட்டில் பக்கத்து வீடுகளில் இருந்து அரிசி, சோறு, குழம்பு, காய்கறி, சீனி, மண்ணெண்ணெய், கத்தி, கோடாலி, விறகு, டார்ச், சிரட்டையில் தீ கங்கு என அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட பலவற்றையும் இலவசமாகவோ, அவ்வப்போது கடனாகவோ, பண்ட மாற்றாகவோ பெற்றுக்கொள்வது சாதாரண நிகழ்வு. விடுமுறை நாட்களில் அந்த லயத்தில் உள்ள சிறுவர்கள் எல்லோரும் ஒரே வீட்டில் கூடி ஒன்றாக சாப்பிடுவதும் சகஜமாக நிகழும். 

முழுக்கமுழுக்க உடல் உழைப்பினை மட்டுமே சார்ந்திருப்பவர்கள் எஸ்டேட் தொழிலாளர்கள். வெகுசிலரைத் தவிர மீத எல்லோரும் அன்றாடங்காய்ச்சிகளே.  மாதந்தோறும் கம்பெனியில் கடனுக்கு அரிசி வாங்கும்போது, அதில் ஒரு பங்கினை தங்களைக்காட்டிலும் வறுமையின் கோரத்தை கூடுதலாக அனுபவித்துவரும்  குடும்பங்களுக்கு அங்கேயே ஒதுக்கி “பகுத்துண்டு” வாழ்வது பலரின் வழக்கம்.  

கூலி உயர்வு போராட்டத்திற்குப் பின்னர், ஒருவாரத்துக்கு முன்னால் வேலைக்கு இறங்கியவர்கள் “கம்பெனி ஆட்கள்” என்றும், மற்றவர்கள் போராட்டக்காரர்கள், எனவும் இருபிரிவாக பிரிந்தனர். அம்மா, அப்பா உள்ளிட்ட கம்பெனி ஆட்களின்  எண்ணிக்கை மொத்த எஸ்டேட்டிலும் சேர்த்து 500க்கும் குறைவே. போராட்டக்காரர்களின் எண்ணிக்கையோ 3500க்கும் மிகுதி. 

கரூரைச் சேர்ந்தவர் ஆனந்த் இராஜசேகர். மாஞ்சோலையில் எஸ்டேட் அலுவலக அதிகாரியாக 1991ல் பணிக்குச் சேர்ந்தார். 1998ஆம் ஆண்டில் நாலுமுக்கில் அதிகாரியாக வேலைபார்த்து வந்தபோது, எஸ்டேட்டில் நடந்த போராட்டம் விளைவித்த அச்சத்தின் காரணமாக, மற்ற பல அதிகாரிகளைப் போல, தனது குடும்பத்தை, சொந்த ஊருக்கு அனுப்பிவிட்டு, இதர அதிகாரிகளுடன் சேர்ந்து ஒரே வீட்டில் தங்கிக்கொண்டார்.

ஸ்டிரைக் தொடங்கி ஆறு மாதங்களுக்குப் பிறகும், தான் அனுபவித்த இயல்பு வாழ்க்கை திரும்பாததைக் கருத்தில்கொண்ட அவர், எஸ்டேட் நிர்வாகத்தை அணுகி, தனக்கு மாஞ்சோலை குரூப் தவிர்த்த வேறு ஏதாவது எஸ்டேட்டுக்கு பணியிடமாற்றம் வேண்டுமெனக் கோரினார். நிர்வாகம் மறுத்துவிடவே, பணியிலிருந்து விலகி சொந்த ஊருக்குத் திரும்பினார்.  

2000 மே மாத விடுமுறையில் ஒருநாள் நான் வீட்டில் இருந்தபோது, போராட்டக்காரர் ஒருவரின் மகளுக்கு சடங்கு விழா நடத்தினார்கள். எனது  பெற்றோர் உள்ளிட்ட அமைதிக்குழுவைச் சேர்ந்த சில தொழிலாளர்களையும் அழைத்திருந்தனர் சடங்கு வீட்டினர். சடங்கு வீட்டிற்குச்சென்று பெற்றோர் திரும்பிய கொஞ்ச நேரத்திலேயே, சடங்கு நடத்திய தொழிலாளி எங்கள் வீட்டிற்கு வந்தார். ஓடி வந்திருக்கிறார் என்பது அவர் மூச்சுவிட்ட வேகத்திலேயே தெரிந்தது. படபடப்பாக பேசிய அவர், எனது பெற்றோரிடம் “அண்ணே, அக்கா, என்ன மன்னிச்சிருங்க. தப்பா எடுத்துக்காதீக. நீங்க தந்த மொய்பணத்த தயவுசெஞ்சு திரும்பி வாங்கிக்கோங்க.

அமைதிக்குழு ஆட்களான ஒங்கள எப்படி சடங்கு வீட்டுக்குக் கூப்பிடலாம்னு அங்க பெரிய பிரச்சனை ஓடிட்டு இருக்கு. இப்பவே போய் ஒங்ககிட்ட நீங்க கொடுத்த  மொய்பணத்தை திருப்பிக்கொடுத்துட்டு வரணும்னு சொல்லி அனுப்பிருக்காங்க. நான் பணத்தை திருப்பிக் கொடுக்கிறேனான்னு பாக்கதுக்கு வீட்டுக்கு வெளில ரெண்டு பேர் நிக்காங்க” என்று அழாத குறையாகச் சொன்னார். வேறு வழியில்லாமல் அந்த மொய்பணத்தை திரும்பப் பெற்றுக்கொண்டார் அப்பா. அந்த போராட்டம் அங்குள்ள மக்கள் மனங்களுக்கு இடையே அவ்வளவு தூரத்தை ஏற்படுத்தியிருந்தது. 

எல்லோரும் வேலைக்குத் திரும்பிவிட்ட பிறகும், நடைமுறைக்கு வராத கோரிக்கைகளுக்காய் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தன. மாஞ்சோலை தொழிலாளி பாலகிருஷ்ணன். ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்கத்தில் துணைத்தலைவராக இருந்தார். சென்னையில் அனைத்து தேயிலைத்தோட்டத் தொழிலாளர்களிடையே நடக்கும் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதற்கு 03.05.2000 மாலையில் எஸ்டேட்டிலிருந்து கிளம்பியவர், 04.05.2000ல் காணாமல் போனார். சென்னையில் நடந்த பேச்சுவார்த்தையிலும் கலந்து கொள்ளவில்லை. அவரதம் குடும்பத்தினர் ஒரு வாரகாலம் தேடியும் கிடைத்தபாடில்லை. 

பத்து நாட்கள் கழித்து சங்கரன்கோவில் பகுதியிலுள்ள சின்னகோயிலான்குளம் பகுதியில் எரிந்த நிலையில் ஒரு பிணம் கிடைத்தது. அந்த உடலின் பாகங்களை சென்னைக்கு எடுத்துச்சென்று பரிசோதனை செய்து, அது காணாமல் போன பாலகிருஷ்ணனின் உடல்தான் என்று காவல்துறை அறிவித்தது. அவரைக் கொலைசெய்ததாக ஊத்து / மாஞ்சோலை எஸ்டேட்டுகளைச் சேர்ந்த தொழிலாளிகள் மற்றும் புதிய தமிழகம் கட்சி பொறுப்பாளர்கள் சிலர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். குற்றம் சுமத்தப்பட்ட அனைவரும் பின்னர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். சகஜ வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பிக்கொண்டிருந்த வேளையில் நடந்த இந்த கொலை, மீண்டும் பெரும் அதிர்வுகளை எஸ்டேட் பகுதியில் உண்டாக்கியது. 

2001ல் ஒருமுறை படித்துக்கொண்டிருந்த எங்களைப் பார்த்துவிட்டு எஸ்டேட்டுக்குத் திரும்பிட, கல்லிடைக்குறிச்சியில் பேருந்தில் ஏறினார் அம்மா. மூன்று பேர் அமரக்கூடிய இருக்கையில், போராட்டக்குழுவைச் சேர்ந்த நாலுமுக்கு பெண் தொழிலாளி ஒருவர் மட்டுமே இருந்தார். மீதமிரண்டு இருக்கைகள் காலியாக இருந்தது. அதில் உட்காரப்போன அம்மாவைத் தடுத்து, இந்த சீட்டிற்கு ஆள் வருகிறது என்று சொன்னதோடு, காலி சீட்டில் இடம் பிடிப்பதற்காக வைப்பதற்கு எதுவுமில்லா நிலையில், தனது காலில் கிடந்த செருப்பைக் கழற்றி வைத்துள்ளார்.

கொஞ்சநேரம் கழித்து, போராட்டக்குழுவைச் சேர்ந்த ஊத்து எஸ்டேட் தொழிலாளர்கள் இருவர் ஏறியபோது, அவர்களை வம்படியாக அழைத்து காலியான சீட்டில் இருக்க சொல்லியுள்ளார். பேருந்தில் இருக்க இடம் கிடைக்காமல் அந்த இரவில் மூன்று மணி நேரம் நின்றபடியே பயணித்து எஸ்டேட் வந்து சேர்ந்திருக்கிறார் அம்மா. கொஞ்ச காலத்துக்கு முன்பு வரையிலும், பேருந்தில் இடமில்லாதவர்களுக்கு, மனமுவந்து இருக்கையில் இடம் ஒதுக்கியும், தங்களது மடியில் அமர்த்தியும் பயணிக்கும் அளவுக்கு விசாலமாக இருந்த மக்களின் மனசு கெட்டிப்போனது.   

அதே காலகட்டத்தில் அம்மாவின் உறவினரின் மகனுக்கு திருமணம் ஏற்பாடானது. அப்போது நடப்பிலிருந்த தடையினைத் தொடர்ந்து, அந்த திருமணத்திற்கு கம்பெனி ஆட்களுக்கு அழைப்பு விடுக்கக்கூடாது என்று முடிவானது. “கம்பெனி ஆட்கள்” என்ற வரையறைக்குள், சக தொழிலாளிகள் மட்டுமே வந்தனர். கம்பெனியில் வேலைபார்க்கும் அதிகாரிகளுக்கு அழைப்பும், சிறப்பு உபசரிப்பும் உண்டு. நெருங்கிய உறவினரான அம்மா, அப்பாவை அழைக்கச்சொல்லி சிலர் ஆலோசனை சொன்னபோது, கம்பெனி ஆட்களான எங்களை அழைத்தால், “அப்புறம் போராட்டக்குழுவைச் சேர்ந்த யாரும் கல்யாணத்துக்கு வரமாட்டாங்க, நாங்க செஞ்சு வச்சிருக்க மொத்த பிரியாணியையும், மண்ணுக்குள்ள போட்டு பொதைக்க வேண்டியதுதான்” என்று சொல்லியிருக்கிறார் உறவினர். இரத்த உறவுகளையும் கோடுபோட்டு பிரித்தது போராட்டமுறை. 

மாஞ்சோலை

2000மாவது ஆண்டில் ஒருநாள், மாலை நாலு முப்பது மணி வரையிலும் வேலை பார்த்துக்கொண்டிருந்த தொழிலாளர்களுடன் வேலைக்கு வரத்துவங்கினார் நாலுமுக்கில் போராட்டக்காரர் குழுவில் இருந்த ஒரு பெண் தொழிலாளி. முந்தைய நாள் வரை அவர் மூன்று முப்பது வரை வேலைசெய்துவந்தவர். அந்த  தொழிலாளர்களுக்கு அரைநாள் சம்பளம் மட்டுமே கம்பெனி கொடுத்துவந்ததால், ஒவ்வொருவராக 4. 30 வரை வேலைபார்க்க  ஆரம்பித்த நேரம் அது. அவ்வாறு அவர் அணிமாறிய மறுநாள், அவரது கணவர் இறந்துபோனார். குழு மாறிவிட்டார் என்று இறுதிச்சடங்கில் பங்கேற்காமல் முழுமையாய் புறக்கணித்தனர் போராட்டக்காரர்கள். தங்களுடன் அன்று சேர்ந்த அந்த தொழிலாளிக்கு உறுதுணையாய் இருந்த அமைதிக்குழு தொழிலாளர்கள், கள்ளிக்காடு வரை சென்று இறந்தவரைப் புதைத்து இறுதிச்சடங்குகளை செய்தார்கள். உறவினரோ இல்லையோ இறப்பு நடந்தால் அன்று வேலைக்குப்போகாமல் தங்கள் வீட்டு இழப்பாகப் பார்த்த காலமும் அங்கு இருந்ததுண்டு.  

ஸ்ட்ரைக் சமயத்தில் போராட்டக்காரர்களுடன் ஒத்துப்போகாத தொழிலாளர்களுக்கு பல்வேறு வகையான இன்னல்கள் உருவாக்கப்பட்டது. எங்கெல்லாம் பொதுவெளியில் கூடுகிறோமோ அங்கெல்லாம் பிரச்சனை உருவாக்க தீர்மானித்தார்கள். பொதுவில் கூடுவதைத் தவிர்க்க முடியாத இடங்களில் ஒன்று, பொது குடிநீர் குழாய். எங்கள் லயனில் ஆறு வீடுகள். அதில் மூவர் கம்பெனி ஆட்கள். எஸ்டேட்டில் கணக்கு முடித்து, எங்கள் பக்கத்து வீட்டில் இருந்த தனது மகனுடன் குடியிருந்து வந்தார் போராட்டக்காரரான ஒரு பெண் தொழிலாளி.. அவரது வாளி நிரம்ப வழக்கத்துக்கு மாறாக கூடுதல் நேரம் பிடித்துக் கொண்டிருந்தது. தண்ணீர் தட்டுப்பாடு இருந்த கோடை காலமது. கூர்ந்து கவனித்த பிறகுதான் புலனாகியது, அடியில் உடைந்த வாளி அதுவென. அடுத்து பிடிக்கவேண்டிய எங்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் போகவேண்டுமெனும் “நல்ல” நோக்கத்தில் விளைந்த செயலது. 

மாஞ்சோலை

அந்த பாட்டியிடம் சொன்னபோது, அப்போதுதான் கவனிப்பதைப்போல பாசாங்கு செய்தபோதிலும், அதேநிலையே தொடர்ந்தது. சில தொழிலாளர்கள் அவருக்குத் தூண்டுதலாக இருந்தார்கள். பொறுத்துப்பொறுத்து பார்த்த அம்மா ஒரு கட்டத்தில், விறகுக் கட்டையால் அந்த வாளியை ஓங்கி அடித்து உடைத்துவிட்டு, தனது பாத்திரத்தில் தண்ணீர் பிடிக்க ஆரம்பித்தார். பயந்துபோன அவர்,  சொந்த பந்தங்களை படைதிரட்டி வீட்டுமுன் சண்டைக்கு வந்துவிட்டார். அடிக்க வந்தவர்களிடம் நடந்ததைச் சொன்னபோது, அந்தப் பெண்மணியை திட்டிவிட்டு சென்று விட்டார்கள். தொடர் பிரச்சனைகளை தவிர்க்கவேண்டி, காலையில் மூன்று பேர், மாலையில் 3 பேரென எங்கள் லயத்தில் தண்ணீர் பிடிப்பது என்று அப்போது முடிவானது.

தனிக்காடு வாங்கி வேலைசெய்ய ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2001ஆம் ஆண்டு முதல் எஸ்டேட்டில் எல்லா தொழிலாளர்களும் மீண்டும் ஒரே தேயிலைக்காட்டில் ஒன்றாக வேலைசெய்ய ஆரம்பித்தனர். ஆனால் அதற்குள் அனுபவித்த கசப்பான அனுபவங்களின் காரணமாக, சக தொழிலாளர்களின் மீதான நேசம் வெம்பிப்போய், எஸ்டேட் வாழ்க்கையின் மீது பிடிப்பு இல்லாமல் போக ஆரம்பித்திருந்தது. 

கால் நூற்றாண்டு கடந்தும் தொடர்கிறது ஆறாத வடுக்களின் இரணம். எஸ்டேட்டிலிருந்து தாக்குப்பிடிக்க முடியாமல் எங்களைப்போல பலர் வெளியேறிய போதிலும், போக்கிடம் இல்லாத சிலரும், மாறிய சூழலுக்கு தங்களை பழக்கப்படுத்திக் கொண்ட உறவினர்கள் சிலரும் இன்றளவும் எஸ்டேட்டிலேயே தங்கள் வாழ்க்கையை நீட்டித்துக் கொண்டிருக்கின்றனர். அப்படிப்பட்டவர்களால்தான் இன்னமும் இயங்குகிறது எஸ்டேட்.

படங்கள்: மாஞ்சோலை செல்வகுமார்

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.