புதுச்சேரியில் அமலில் இருக்கும் அனைத்து சட்டங்களும் பொதுமக்களை மட்டும்தான் கட்டுப்படுத்துகிறதே தவிர, அரசியல் தலைவர்களையோ அல்லது அவர்களது அடிபொடிகளையோ சிறிதும் கட்டுப்படுத்தாது. அந்த சட்டங்களை காப்பாற்ற வேண்டிய அதிகாரிகளே, அதை மீறுவதற்காக துணை நிற்கும் அவலம் புதுச்சேரியில் அரங்கேறி வருகிறது. அதில் முக்கியமானது பொது இடங்களில் வைக்கப்படும் பேனர்கள். புதுச்சேரியில் கடந்த 2000-ம் ஆண்டிலிருந்து பேனர் தடை சட்டம் அமலில் இருக்கிறது. இந்த சட்டத்தின்படி,  பொது இடங்களில் அனுமதியின்றி பேனர்கள் வைப்பது தடை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அதையும் மீறி முதலமைச்சர் தொடங்கி, அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களுக்காக விதிகளை மீறி, அதுவும் சாலைக்கு நடுவில் தாறுமாறாக வைக்கப்படும் பேனர்களால், பொதுமக்கள் நாள்தோறும் விபத்தை சந்தித்து வருகின்றனர்.

பேனர் கலாசாரம்

சிக்னல்களிலும், சாலைகளின் ஓரத்திலும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் `மெகா’ சைஸ் பேனர்களை வைக்கின்றனர். அதைவிட ஒரு படி மேலே சென்று, பிரதான சாலைகளை மறித்து அலங்கார வளைவுகளையும் வைக்கின்றனர். அதை தடுக்க வேண்டிய மாவட்ட நிர்வாகம், கண்டும் காணாமல் கடந்து செல்கிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரியில் தற்போது சாலைகள் போடப்பட்டு வருகின்றன. ஆனால் புதிதாக போடப்பட்ட அந்த சாலைகளில், பள்ளம் தோண்டி ஆட்சியாளர்களின் பிறந்தநாளுக்காக ராட்சத பேனர்களையும், அலங்கார வளைவுகளையும் அமைக்கிறார்கள் அவர்களது ஆதரவாளர்கள். அடுத்த சில நாள்களில் அந்த பள்ளம் பெரிதாகி சாலைகள் மீண்டும் பழைய நிலைமைக்கே செல்லும் என்பது தெரிந்தும் மாவட்ட நிர்வாகமும், சாலை அமைத்த பொதுப்பணித்துறையும், நகராட்சியும் மௌனம் காத்து வருகின்றன.

தங்களின் சுய விளம்பரத்துக்காக தங்கள் புகைப்படங்களை போட்டு, முதல்வர், அமைச்சர்களுக்கு முதலில் பேனர் வைப்பவர்கள், அதன் பிறகு `எதிர்காலமே.. வருங்காலமே.. வருங்கால சட்டமன்றமே’ என்று தங்களையே தாங்களே புகழ்ந்து கொண்டு புதுச்சேரி முழுவதும் பேனர்களால் நிரப்பி விடுகிறார்கள். இப்படி பேனர் வைக்கும் பலர் குற்றப் பின்னணி உடையவர்கள் என்பதுதான் அதிர்ச்சியான விஷயம். அதேபோல பல பேனர்களில் கொலை வழக்குகளில் தண்டனை பெற்று, தற்போது சிறையில் உள்ளவர்களின் படங்கள் இடம்பெறுவதும் வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. முக்கிய வீதிகளின் நடைபாதைகள் முழுவதும் வணிகர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டதால், பொதுமக்கள் சாலைகளில் நடந்து செல்கின்றனர். இதனால் நாள் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆக்கிரமிப்பு இடங்களை தவிர்த்து இருக்கும் குறுகலான வழியில்தான் வாகன ஓட்டிகள் ஊர்ந்து செல்கின்றனர். அதிலும் பேனர்களும், அதை கட்டி வைத்திருக்கும் கம்புகளும், கம்பிகளும் நீட்டிக் கொண்டிருக்கின்றன.

புதிதாக போடப்பட்ட சாலையை உடைத்து வைக்கப்பட்ட பேனர்

கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 100 பேர்களாவது, பேனர்கள் சாய்ந்து படுங்காயங்களுடன் உயிர் தப்பியிருக்கிறார்கள். ஆனால் அது குறித்து அவர்கள் எங்கும் புகாரளிக்க முடியாது. ஏனென்றால் அந்த பேனர்கள் அரசியல்வாதிகளுக்கும், அமைச்சர்களும், அவர்களின் ஆதவரளர்களுக்கும் வைக்கப்பட்ட பேனர்கள். அதனால் எந்த காவல் நிலையத்திலும், அது குறித்த புகார்களை ஏற்பதில்லை. சில மாதங்களுக்கு முன்பு காரைக்காலில் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமுருகன் வீட்டின் அருகே, முதலமைச்சர் ரங்கசாமியின் பிறந்தநாளுக்காக பேனர் வைத்தனர் முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்காவின் ஆதரவாளர்கள். அதில் ஏற்பட்ட மோதலால் இரு தரப்பிலும் 16 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட, அங்கு பதற்றம் ஏற்பட்டது. விளைவு விதிகளை மீறி வைக்கப்பட்ட அந்த பேனர்களை அகற்றாமல், இரவு பகலாக அதற்கு காவலுக்கு நின்றனர் போலீஸார்.

“புதுச்சேரியில் ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் சட்டத்தை மீறி தொடர்ச்சியாக பேனர்களை வைத்து வருகின்றனர். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நான் வழக்கு தொடுத்தபோது, சட்டவிரோத பேனர்களை புதுச்சேரி முழுவதும் அப்புறப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது நீதிமன்றம். ஆனால் அவற்றை அகற்றாமல், அகற்றிவிட்டதாக நீதிமன்றத்தில் பொய்யான அறிக்கையை தாக்கல் செய்தனர் தலைமைச் செயலரும், மாவட்ட ஆட்சியரும். அதை எதிர்த்து கடந்த ஆண்டு மீண்டும் நான் நீதிமன்றம் சென்றேன். அப்போதும் பேனர்களை அகற்றி விட்டதாக பொய்யான பதில் மனுவை தாக்கல் செய்கிறது புதுச்சேரி அரசு. தற்போது ஆதாரங்களுடன் மீண்டும் நீதிமன்றம் சென்றிருக்கிறேன்” என்கிறார் மக்கள் உரிமை இயக்கத்தின் செயலாளர் ஜெகன்நாதன். இந்த நிலையில்தான் புதுச்சேரி நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான சந்திரமோகன், புதுச்சேரி மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.

புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் வல்லவன்

 அதில், “சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 01.10.2021 மற்றும் 28.04.2022 அன்று பிறப்பித்த உத்தரவில், பொதுமக்கள் நடந்து செல்லும் சாலைகள், நடைபாதைகள் மற்றும் பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருக்கும் பேனர்கள், ஃபிளக்ஸ் போர்டுகள், அலங்கார வளைவுகள், ஹோர்டிங்ஸ், கட்-அவுட்கள், தட்டிகளை அகற்றுவதற்கு உத்தரவிட்டிருக்கிறது. ஆனால் புதுச்சேரியின் முக்கிய சந்திப்புகளிலும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளிலும், பேனர்கள், ஃபிளக்ஸ் போர்டுகள், அலங்கார வளைவுகள், ஹோர்டிங்ஸ், கட்-அவுட்கள், தட்டிகள் இருக்கின்றன. இது உயர் நீதிமன்ற உத்தரவை மீறும் செயல். எனவே உயர் நீதிமன்ற உத்தரவுப்படி பேனர்கள், ஃபிளக்ஸ் போர்டுகள், அலங்கார வளைவுகள், ஹோர்டிங்ஸ், கட்-அவுட்கள், தட்டிகளை உடனே அகற்ற வேண்டும். இதை மீறி பேனர் வைப்பதில் விதிமுறை மீறல்கள் கண்டறியப்பட்டால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க, உயர் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.