திருநெல்வேலியில் பொருநை நெல்லை புத்தகத் திருவிழா பிப்ரவரி 13ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. ஐந்தாவது நாளான நேற்று (பிப்ரவரி 7) கருத்தரங்கம் மாலை 6 மணிக்குத் தொடங்கியது. இதில் சிறப்புரை ஆற்றுவதற்காக எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டார்.  

வெயிலோடு போய், எசப்பாட்டு, வாளின் தனிமை போன்ற பல்வேறு படைப்புகளை எழுதியுள்ள ச.தமிழ்ச்செல்வன், ‘புத்தக கதவு திறந்து’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.  

அதில், “புத்தகங்களையும் அறிவையும் பரவலாக்கும் செயலை இந்த மண்ணில் செய்தவர்கள் சமணர்கள் என்று அறிஞர் தொ.பரமசிவம் அவர்கள் ஒரு கட்டுரையில் குறிப்பிடுவார். பள்ளி என்றாலே சமணத்திலிருந்து வந்ததுதான். அதைப்போல் ‘கல்லூரி’ என்ற சொல்லும் அவர்களிடம் இருந்துதான் வந்தது. சமணர்கள் ஆண்டு தோறும் ஞானபூசை ஒன்று நடத்துவார்கள்.‌ அன்றைய காலத்தில் புத்தகங்கள் கிடையாது. எழுதப்பட்ட ஓலைச்சுவடிகள் எல்லாவற்றையும் பிரதி எடுப்பார்கள்.

அப்போது அச்சு இயந்திரம் கிடையாது. அந்த ஓலைச்சுவடியில் உள்ளதை ஒருவர் சொல்லச் சொல்ல எல்லோரும் பிரதி எடுப்பார்கள். இதுதான் ஞானபூசையாக இருந்தது. சமணத்தையும் பெளத்தத்தையும் அழித்த பக்தி இயக்கம் காலம் 7ம் நூற்றாண்டில் தொடங்கி, 12ம் நூற்றாண்டு வரை இருந்தது. இது சைவ, வைணவர்களின் எழுச்சியாக ஒருபகுதி மக்களால் வரலாற்றிலே கொண்டாடப்படுகிறது.

நெல்லை புத்தகத் திருவிழாவில் ச.தமிழ்ச்செல்வன்

ஆனால், சமணம், பௌத்தத்தை அழித்து 8000 சமணர்களைக் கழுவேற்றிய பின் தான் அன்பே சிவம் என்று நிலைநிறுத்தப்பட்டது வரலாற்றில். அப்போது, சமண பௌத்த அடையாளங்களை சிறுகல்லில் இருந்து அழித்தார்கள். ஞானபூசையை அழிக்க நினைத்த வைதீக அரசு அதற்குப் போட்டியாகச் சரஸ்வதி பூஜை என்ற ஒன்றை‌ வைக்கிறார்கள். ஞானபூசைக்கு மாற்றாகச் சரஸ்வதி பூஜையை உருவாக்கினார்கள். ஞானபூசையில் புத்தகங்களைப் பரவலாக்க வேண்டும். சரஸ்வதி பூசையில் புத்தகங்களைப் படிக்க கூடாது ஓரீடத்தில் மூட்டைக்கட்டி வைக்கச் சொல்கிறது சரஸ்வதி பூஜை.

சரஸ்வதிக்கு திருவாரூர் மாவட்டத்தில் மட்டும்தான் கோவில் இருக்கிறதே தவிர வேறு எங்கும் கிடையாது. ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ எனச் சொன்னாலும், அறிவு சார்ந்த பின்னடைவு பக்தி இலக்கிய காலகட்டத்தில்தான் ஏற்பட்டது. சங்க காலத்திலேயே 44 பெண் புலவர்கள் இருந்திருக்கிறார்கள். சங்ககாலத்தில் பெண் கல்வி என்பது இயல்பாக இருந்திருக்கிறது. அதற்குப் பிறகு பெண்கல்வி வீழ்ச்சி அடைந்தது. பெண் புலவர்கள் உருவாகவில்லை. அதற்குக் காரணம்‌ பக்தி இலக்கிய காலகட்டம். இந்தக் காலகட்டத்தில் பெண்கள் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இந்தக் காலத்தில் பக்தியோடு சேர்ந்த காரைக்கால் அம்மையார், ஆண்டாள் போன்றார் இருந்தார்களே தவிர வேறு எந்த பெண் புலவர்களும் இல்லை. இப்போதுதான் பெண் புலவர்கள் வருகிறார்கள். இது சாதாரண விஷயம் கிடையாது. பக்தி இலக்கிய காலம் முழுவதுமே பெண்களுடைய அறிவு மதிக்கப்படாமல் ஆண்களுக்கு அடக்கமானவளாக மாற்றப்பட்டார்கள். பெண் எல்லா காலத்திலும் ஆணுக்கு அடக்கமானவராக இருந்ததாக வரலாறு சொல்லவில்லை.

ச.தமிழ்ச்செல்வன்

மனிதக்குல வரலாற்றை எடுத்துப் படித்துப் பார்த்தால் தெரியும் மனிதக்குலமானது தாய் வழிச் சமூகமாக இருந்தது. புத்தகத்தின் கதவு திறந்தால் நாம் எதைத் தேடுகிறோமோ அது கிடைக்கும் அதுதான் முக்கியமானது. மனிதக்குலம் அனைத்தும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள். இதைத்தான் அறிவியலும் சொல்லிக் கொண்டிருக்கிறது. சாதி, மதம், கடவுள் எல்லாமே இடையில் வந்தது. இடையில் வந்ததைத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு சண்டை போட்டுக்கொண்டிருக்கிறோம்.

வேட்டைச் சமூகத்தில் பெண்கள் 7 நாட்களும் வேட்டைக்குச் சென்றார்கள். ஆண்கள் 2, 3 நாட்கள் வேட்டைக்குச் செல்வார்கள். தாய் வேட்டைக்குப் போன காலத்தில் மொழியே உருவாகவில்லை. பாட்டு, கதை எதுவுமே கிடையாது. குழந்தைக்குத் தாயின் இதயத்துடிப்பு கேட்கும்படி குழந்தையைத் தாய் இடது கையினால் அணைத்துக் கொண்டாள். “லப்…டப்…” என்பதுதான் உலகின் முதல் தாலாட்டு. பெண்கள் எல்லாம்‌ இடது கையில் பிள்ளைகளை வைத்துப் பிடித்துக்கொண்டு வலது கையால் பழங்கள் பறித்து உண்டார்கள். இவ்வாறு நமக்கு வலது கை பழக்கம் உருவாக்கியவர்கள்‌ பெண்கள்.

பெண்களுக்கு வரலாறு தெரியாது. புத்தங்களின் கதவுகளைத் திறப்பதற்குப் பெண்களுக்கு நாம் பயிற்சியளிக்க வேண்டும். ஆண்களுக்கும் பயிற்றுவிக்க வேண்டும். பெண்ணை வெறும் உடம்பாகப் பார்க்கின்ற பார்வையை ஆணுக்குக் காலங்காலமாக இந்தச் சமூகம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஆண்கள் சமத்துவத்தைப் பேசக்கூடிய புத்தகங்களைத் தேடி வாசிக்க வேண்டும். அந்தப் புத்தகங்களைத் திறந்தால்தான் நாம் புதிய பார்வைகளுடன் புதிய உலகுக்குள் போக முடியும்.

ச.தமிழ்ச்செல்வன்

உலகில் உள்ள ஜீவராசிகள் தங்களுக்கான உணவைத் தானே தான் சேகரிக்கின்றன. உலகத்திலே தன்னுடைய உணவுக்காக மற்றவர்களைச் சார்ந்திருக்கும் ஒரே‌‌ உயிரினம் ஆண்தான். இதைக் கேவலம் என்று உணர்ந்து கொண்டால் எல்லா ஆண்களும் சமையலறைக்குப் போய்விடுவார்கள். பெண்கள் படிக்க வந்துவிடுவார்கள். பெண்கள் படிக்க வந்தார்கள் என்றால் சமூகத்தில் மாற்றம் ஏற்படும் இதைச் சொல்வதற்குப் புத்தகங்கள் தேவைப்படுகிறது” என்று எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் பேசியுள்ளார்.

– மு.இந்துமதி.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.