டிவிஎஸ் நிறுவனத்தை உங்களுக்கு எப்படித் தெரியும்? ‘நம்ம ஊரு வண்டி எக்ஸ்எல்’ மொபெட்டைத் தயாரிக்கும் ஒரு ஆட்டோமொபைல் நிறுவனமாக… ஸ்டார் சிட்டி, ரெய்டர், ஜூபிட்டர், ஸ்கூட்டி போன்ற கம்யூட்டர் டூவீலர்களைத் தயாரிக்கும் பைக் தயாரிப்பு நிறுவனமாக… அப்பாச்சி RTR200, RR310 போன்ற ஸ்போர்ட்ஸ் பைக்குகளில் அல்ட்ரா மாடர்ன் தொழில்நுட்பங்களைப் புகுத்தும் டெக்னாலஜி நிறுவனமாக…. இப்படித்தானே தெரியும்!

TVS

ஆனால், டிவிஎஸ்–க்கு இன்னொரு முகம் இருக்கிறது. அது – கொஞ்சம் வித்தியாசமான, கூலான, பண்பான, அன்பான முகம். உங்களுக்கு CSR (Corporate Social Responsibility) என்றொரு நடைமுறை பற்றித் தெரிந்திருக்கும். கார்ப்பரேட் நிறுவனங்கள், தங்களுக்கு சமூக அக்கறையில் அக்கறை உண்டு என்பதைச் சொல்வதற்காக இந்த CSR ஆக்டிவிட்டிகளில் ஈடுபடுவது வழக்கம். டிவிஎஸ்–ம் அப்படித்தான் என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால், நேரில் சென்று பார்க்கும்போது ஒரு புல்லரிப்பான அனுபவம் கிடைத்தது. 

வெள்ளம், புயல், பஞ்சம் போன்ற இயற்கைப் பேரிடர்களின்போது மட்டுமில்லை; சாதாரண நாட்களிலேயே டிவிஎஸ் அந்த முகத்தைக் காட்டுகிறது என்பதுதான் ஸ்பெஷல். திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவண்ணாமலை, தர்மபுரி போன்ற இடங்களில் டிவிஎஸ் என்றால் தெரிந்திருப்பதைவிட SST என்றால், பட்டென அடையாளம் கண்டுகொள்கிறார்கள். SST (Srinivasan Services Trust) என்பதுதான் SST. 

அண்மையில் வரலாறு காணாத வெள்ளம் ஒன்று வந்து மொத்தத் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களையே புரட்டிப் போட்ட சம்பவம் உங்களுக்கு நினைவிருக்கும். 100 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படிப்பட்ட ஒரு வெள்ளத்தைப் பார்த்திருக்கிறது இந்தத் தென்மாவட்டங்கள். அதாவது, இந்தத் தலைமுறையைச் சேர்ந்த அனைவருக்குமே இது புதுசுதான்! வெள்ளம் வடிவதற்கும் சரி; வடிந்த பிறகும் சரி – அரசோடு சேர்ந்து டிவிஎஸ் நிறுவனத்தின் ட்ரஸ்ட்டி  நிறுவனமான SST–யும் அப்போது களத்தில் குதித்ததும், அந்த மாவட்டங்கள் ஓரளவு மீண்டுவரக் காரணம் என்றே சொல்லலாம். 

கிட்டத்தட்ட பல கோடிகளை அந்தந்த ஊர் மக்களுக்குப் பொருட்கள் வாயிலாகச் செலுத்தியிருக்கிறது SST. இந்த வெள்ளப் பாதிப்புக்கு மட்டும் சுமார் 10 கோடிக்கு மேல் செலவழித்திருக்கிறதாம் டிவிஎஸ் SST. அண்மையில் திருநெல்வேலி, தூத்துக்குடி வரை ஒரு விசிட் அடித்தபோது – SST என்றால் பட்டென உற்சாகமாகிறார்கள் மக்கள். 

பழைய காயல் என்றோர் இடத்தில், நார்மலான நேரங்களிலேயே காயல் நீரும் திருச்செந்தூர் கடலும் கலந்து ஒரு மாதிரி கிர்ரென இருக்கும். ‘‘வெள்ளம் வந்தப்போ காயத் தண்ணி எது; கடல் தண்ணி எது; மழைத் தண்ணி எதுன்னே தெரியலை பார்த்துக்கிடுங்க! மொட்டை மாடி வரைக்கும் தண்ணினு சொன்னா நம்புவீங்க மக்கா… அந்தால வீடே முங்கிப் போயிட்டு. வீட்ல இருக்கிற எல்லா சாமான்லாம் எப்படித் தங்கும்? சர்ச்ல போய் தங்கிக்கிட்டோம்! கவர்ன்மென்ட்டுல இருந்து வந்து ஹெல்ப் பண்ணாங்க. ஆனாலும் அதெல்லாம் பத்தலை. SST டீம்ல இருந்துதான் வீட்டுக்குத் தேவையான அடுப்புல இருந்து பாய் வரைக்கும் எல்லாமே கொடுத்து யெல்ப் பண்ணாங்க!’’ என்றார் பழைய காயல் மீனவ நண்பர் ஒருவர். 

தூத்துக்குடியில் பல இடங்களில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் பள்ளிப் புத்தகங்கள், சீருடைகள் என்று எல்லாமே மழை நீரில் போய் விட, அங்கேயும் SST உதவிக்கரம் நீட்டியிருக்கிறது. கக்கன் புதூர் என்றோர் இடத்தில், பல வாரங்களாகியும் தேங்கிக் கிடந்த மழை நீரில்தான் நடந்து கொண்டிருந்தார்கள். ‘‘இது நேத்து பேஞ்ச மழைங்க; அதுக்கே இந்தப் பாடு. அந்த நாளை மறக்கவே முடியாது பார்த்துக்கிடுங்க. நைட் 12 மணி இருக்கும். திடீர்னு தண்ணி மடமடனு உள்ள வந்துட்டு. அடிச்சுப் புடிச்சுக் குழந்தைகளைக் கூட்டிட்டு வெளியே போறதுக்குள்ளாற… தோள் பட்டை அளவு தண்ணி ஏறிட்டு! 13 நாள் மண்டபத்துலதான் தங்கியிருந்தோம். அப்போ சாப்பாடு, டிரெஸ், பக்கெட், பாய்னு SST டீம் கொடுத்தாங்க. ரொம்ப தேங்க்ஸ் சார்!’’ என்றார் ஒரு பெண்மணி. 

SST பற்றித் தெரியாதவர்களுக்கு ஒரு சின்ன முன்னுரை: 1996–ல்தான் முதன் முறையாக, திருவண்ணாமலையில் உள்ள படைவீடு எனும் இடத்தில்தான் SST அறக்கட்டளை தொடங்கப்பட்டது. அதாவது SST–க்கு இப்போது வயது சுமார் 26. தமிழ்நாட்டில் மட்டுமில்லை; கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் சேர்த்து மொத்தமாக SST, சுமார் 2,500 கிராமங்களைத் தத்தெடுத்து வளர்த்துக் கொண்டிருக்கிறது. இதில் தூத்துக்குடியில் மட்டும் சுமார் 389 கிராமங்களைத் தத்தெடுத்திருக்கிறது டிவிஎஸ் SST. 

‘‘நாட்டார்குளத்துல 1000 குடும்பத்துக்குத் தேவையான சாப்பாட்டு ஐட்டம்லாம் டெலிவரி ஆகிடுச்சா…? ஏரல் பக்கத்துல அந்த விவசாயிக்கு மாடு வாங்குறது சம்பந்தமா லோன் என்னாச்சு? ஸ்ரீவைகுண்டத்தில் ஸ்கூலோட கண்டிஷன் ஓகேதானே!’’ என்று பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் தூத்துக்குடி SST குழுவினர். ஆரம்பத்தில் சொற்ப அளவிலேயே பணியாளர்கள் இருந்த நிலையில், இப்போது 350 ஸ்டாஃப்களுக்கு மேல் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதில் தூத்துக்குடி, திருநெல்வேலியில் மட்டும் சுமார் 75 பேருக்கு மேல் இருக்கிறார்கள். இவர்களின் வேலையே கிராமங்களுக்கு நலத் திட்டங்கள் ஒழுங்காகப் போய்க் கொண்டிருக்கிறதா என்பதைச் சோதனை செய்வதுதான். 

கிராமங்களைத் தத்தெடுப்பது என்றால் சும்மா இல்லை. இது மாதிரி CSR நடைமுறையில் ஈடுபடுவதற்குச் சில விஷயங்கள் ஒத்துழைக்க வேண்டும். ‘‘கம்யூனிட்டி, கவர்ன்மென்ட், NGO – இம்மூன்றும் சேர்ந்தால்தான் இதுபோன்ற விஷயங்களைச் செய்ய முடியும். SST –க்கு இவை எல்லாமே வாய்த்திருக்கிறது. அதனால்தான் எங்களால் தங்குதடையில்லாமல் இயங்க முடிகிறது. எங்கள் பாஸ் வேணு ஸ்ரீனிவாசன் சார், CEO ராதாகிருஷ்ணன் சார் – இவங்களுக்கு கிராமத்து மக்கள் சார்பாக நன்றிகள்!’’ என்றார் நந்தகோபால். இவர்தான் தூத்துக்குடி மாவட்ட SST அலுவலகத்தை நிர்வகித்துக் கவனித்துக் கொண்டிருக்கிறார். 

ஏதாவது ஒரு கிராமத்தில் உடல்நிலை சரியில்லாதவர்கள் இருந்தால் – சட்டென்று மருத்துவர்களையும் நர்ஸ்களையும் வைத்து நடமாடும் மெடிக்கல் கேம்ப் ஏற்பாடு செய்வது… பள்ளிகளில் போதுமான வசதி இல்லையென்றால், புரொஜெக்டர் வைத்து வகுப்புப் பாடங்கள் எடுக்க வைத்து, அரசுப் பள்ளிகளையே ரெனோவேட் செய்வது….அந்தந்த ஏரியா பெண்களை ஒன்றுதிரட்டி சுயகுழுக்கள் ஆரம்பித்து ஜூட் பைகள், பனை நாரை வைத்து வீட்டு உபயோகப் பொருட்கள் செய்ய வைத்துப் பயிற்சியும் கொடுத்து வருமானம் ஈட்ட வைப்பது…

ஆண்களுக்குப் பானை போன்ற பொருட்கள் செய்ய வைத்து சம்பாதிக்க வைப்பது… விவசாயிகளுக்கு லோன் வாங்க உதவுவது… ஏதாவது கிராமங்களில் சுற்றுப்புறச் சூழலும் சாலையும் சரியில்லை என்றால் சட்டெனக் களத்தில் இறங்கி அதைச் சரி செய்வது… இப்படி டிவிஎஸ் செய்யும் களப்பணிகள் பெரியது! இன்டர்நலாக `விழுதுகள்’ என்றொரு இதழும் வெளியிட்டு, நலப்பணிகளை அதில் அப்டேட் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இது மட்டுமல்லாமல், உங்களுக்கு சர்வீஸ் செய்ய ஆசை இருக்கிறது; ஆனால் அதற்கான வழிமுறைகள் தெரியாது என்றால், SST–யை அணுகலாம். உதாரணத்துக்கு, நான் ஒரு முறை போனபோது தூத்துக்குடியில் ஏதோ ஒரு கிராமத்துக்கு பாய்/தலைகாணி/சமையல் பொருட்கள் வழங்கிக் கொண்டிருந்தார்கள். அது ஃபோர்டு நிறுவனத்தின் உதவிப் பொருட்கள். அந்தப் பொருட்கள், பாதிக்கப்பட்டவர்களுக்குச் சரியாகப் போகும்படி தேடிப்பிடித்து உதவி செய்வதிலும் SST கெத்து காட்டுகிறது. 

சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின்போதுகூட, ‘‘வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வண்டியை ஸ்டார்ட் செய்யாமல் வருபவர்களுக்கு, ஷோரூமில் இலவச சர்வீஸ்’’ என்று தனது வாகன வாடிக்கையாளர்களுக்கு முதலில் அறிக்கை விட்டது டிவிஎஸ்தான். நெல்லைக்கும்தான். The Rest Just Follows என்பதுபோல், அதன் பிறகுதான் மற்ற நிறுவனங்களும் தங்கள் வாகனங்களுக்கு இலவச சர்வீஸ் என்று அறிவித்தன. இதைத் தொடர்ந்து நெல்லை மோட்டார்ஸ் டிவிஎஸ் எனும் டீலர்ஷிப்பில், வெறும் பத்தே நாட்களில் சுமார் 250–க்கும் மேற்பட்ட டூவீலர்களை இலவச சர்வீஸ் செய்து கொடுத்திருக்கிறார்கள். இதில் இன்ஷூரன்ஸ் க்ளெய்மிங்கும் அடங்கும். 

வேணு ஸ்ரீனிவாசன்

டிவிஎஸ் டூவீலர்கள் வாங்கும்போது ‘நம்ம ஊரு வண்டி’ என்றொரு பெருமை ஏற்படும். இனி ‘நம்ம ஊரு கம்பெனி’, ‘இவர் நம்ம ஆளு’ என்று வேணு ஸ்ரீனிவாசனையும், டிவிஎஸ்–ஸையும் நிச்சயம் பெருமையாகச் சொல்லலாம். பொதுவாக, பணம் இருப்பவர்களிடம் உதவி செய்யும் மனம் இருக்குமா தெரியாது; மனம் இருப்பவர்களிடம் பணம் இருக்காது. ஆனால், டிவிஎஸ் அப்படி இல்லை! 

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.