Doctor Vikatan: நான் சமீபகாலமாக விரதம் இருக்க ஆரம்பித்திருக்கிறேன். ஆனால், நான்கைந்து மணி நேரம் எதுவும் சாப்பிடாமல் இருந்தாலே லேசாக மயக்கம் வருவது எதனால்… இதற்கு என்ன தீர்வு?

பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ்  நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்

ஸ்ரீமதி வெங்கட்ராமன்

பல மாதங்களாக, வருடங்களாக நீங்கள் விரதம் இருந்திருக்க மாட்டீர்கள். அதனால் திடீரென எதுவும் சாப்பிடாத நிலையில், உங்கள் உடலானது அதற்கு ஒத்துழைக்க வேண்டும். அதற்கு நேரம் எடுக்கும்.

சமீப காலமாக பலருடம் இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் என்ற டயட் முறையைப் பின்பற்றுவதைப் பார்க்கிறோம். உங்கள் விஷயத்திலும் நீங்கள் உங்களுக்குத் தெரிந்த யாரோ அதைப் பின்பற்றுவதைக் கேள்விப்பட்டு நீங்களும் அதைச் செய்ய நினைத்திருக்கலாம். இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் முறையில் 8 மணி நேரம், 10 மணி நேரம், 12 மணி நேரம், 16 மணி நேரம் என அவரவர் விருப்பத்துக்கேற்ப இடைவெளி எடுத்துக்கொள்வார்கள். 

இளநீர்! #TenderCoconut

நீங்களும் பல மணி நேரம் சாப்பிடாமல் இருந்திருக்கலாம். அப்படிப்பட்ட நிலையில் உங்களுக்கு உடல் பலவீனமானது போலவோ, வெலவெலத்துப் போனது போலவோதான் இருக்கும். திடமாக எதுவும் சாப்பிடாமல் இருக்கும் இடைவெளியில் வெறும் தண்ணீருக்கு பதில், இளநீர், எலெக்ட்ரால், நீர்மோர் போன்றவற்றைக் குடிக்கலாம். இதெல்லாம் உடல் வெலவெலத்துப் போகாமல் காக்கும். மயக்கமும் வராது.

விரதமிருப்பதற்கு உங்கள் உடலானது பழக வேண்டும். முதலில் குறைந்த மணி நேரத்திலிருந்து தொடங்கவும். இரண்டு, மூன்று முறை அதைப் பின்பற்றினால் உடல் அதற்குப் பழகிவிடும்.  ஆனால், சிறிது நேரம் சாப்பிடாமல் இருந்தாலே உடல் வெலவெலத்துப் போவது போல உணர்ந்தால் நீங்கள் ரத்தச் சர்க்கரை அளவை செக் செய்யுங்கள். உங்களுக்கே தெரியாமல் உங்களுக்கு நீரிழிவு பாதித்திருக்கலாம். 

களைப்பு | மாதிரிப்படம்

எனவே, முதலில் நீரிழிவுக்கான பரிசோதனை மேற்கொண்டு, ஒருவேளை அது உறுதியானால் முறையான சிகிச்சைகளைப் பின்பற்றத் தொடங்குங்கள். உங்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும் ‘தாழ்சர்க்கரை நிலை’ இருக்கிறதா என்றும் பாருங்கள். நீரிழிவு பாதித்தோருக்கு விருந்தும் கூடாது, விரதமும் கூடாது என்று சொல்வோம். அந்தவகையில் ஒருவேளை உங்களுக்கு நீரிழிவு இருந்தால், நீங்கள்  இப்படி பலமணி நேரம் சாப்பிடாமல் இருப்பதை அவசியம் தவிர்க்க வேண்டும். 

மற்றபடி, சாதாரண நபர்களுக்கு விரதமிருக்கத் தொடங்கிய புதிதில் உடல் பழகும்வரை பலவீனமாக இருக்கும். போகப் போகப் பழகிவிடும். சர்க்கரைத் தண்ணீரோ, சர்க்கரை சேர்த்த ஜூஸோ குடிக்காமல், வெறும் பழச்சாறு குடிக்கலாம். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.