பீகார்: ராஜினாமா செய்கிறாரா நிதிஷ்? –  பாஜக-வுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கவிருப்பதாகத் தகவல்!

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகளின் `இந்தியா’ கூட்டணியில் சலசலப்புகள் அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றன. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சியும் மாநிலத்தில் தனித்துப் போட்டியிட முடிவுசெய்திருப்பதாக அறிவித்திருக்கின்றன. இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் இந்த திடீர் முடிவு, காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியையும், கூட்டணியில் பெரும் சிக்கலையும் ஏற்படுத்தியிருக்கிறது. `மம்தா எங்கள் கூட்டணிக்கு மிகவும் முக்கியமானவர். அவர் இல்லாமல் இந்தியா கூட்டணியை நினைத்துக்கூட பார்க்க முடியாது’ என காங்கிரஸ் இறங்கி வந்து பேச்சுவார்த்தைக்கு அடிபோட்டுக் கொண்டிருக்கிறது.

நிதிஷ் குமார்

இத்தகைய சூழலில், இந்தியா கூட்டணியின் அஸ்திவாரங்களில் ஒருவரான பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார், கூட்டணியின் அடுத்த செங்கல்லை உருவியெடுக்க முனைப்பு காட்டி வருகிறார். ஆரம்பத்திலிருந்து இந்தியா கூட்டணியை ஒருங்கிணைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்த நிதிஷ் குமார், சமீப காலமாக கூட்டணியின் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்து காணப்படுகிறார். இந்த நிலையில், நிதிஷ் இந்தியா கூட்டணியிலிருந்து வெளியேறி, மீண்டும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையவிருப்பதாக, தகவல்கள் பரபரத்துக்கொண்டிருக்கின்றன. இன்று மதியத்துக்குள் தனது முதல்வர் பதவியை நிதிஷ் ராஜினாமா செய்யவிருப்பதாகவும், அதைத் தொடர்ந்து பா.ஜ.க ஆதரவுடன், மீண்டும் முதல்வராக இருப்பதாகவும் பேச்சுகள் பலமாக அடிபட்டுக் கொண்டிருக்கின்றன. பீகாரில் பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்த நிதிஷ், பின்னர் அந்தக் கூட்டணியிலிருந்து விலகி, ஆர்.ஜே.டி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து முதல்வரானார். இந்த நிலையில், மீண்டும் பா.ஜ.க கூட்டணிக்கு அவர் செல்லவிருப்பதாகக் கூறப்படுகிறது. நிதிஷ் குமார் `இந்தியா’ கூட்டணியிலிருந்து வெளியேறும் பட்சத்தில், அது காங்கிரஸ் கட்சிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். நிதிஷ் குமார் இன்று மாநில ஆளுநரைச் சந்திக்க நேரம் கேட்டிருப்பதாகக் கூறப்படுகிறது… என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்த்தாக வேண்டும்!

`மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு’ – திமுக – காங்கிரஸ் இன்று ஆலோசனை!

மக்களவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால், தேசிய அளவில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. தேசிய அளவில் கூட்டணி குறித்த முடிவுகளை இறுதி செய்துவரும் அரசியல் கட்சிகள், மாநில அளவில் தொகுதி பங்கீடு வேலைகளில் தற்போது கவனம் செலுத்தி வருகின்றன. உ.பி-யில் காங்கிரஸ் கட்சியுடன் உடன்பாடு ஏற்பட்டிருப்பதாக அறிவித்திருக்கும் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு மாநிலத்தில் 11 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாகத் தெரிவித்திருக்கிறார்.

அண்ணா அறிவாலயம்

அந்த வரிசையில், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் – தி.மு.க ஆகிய கட்சிகளின் `தேர்தல் தொகுதி பங்கீடு’ குறித்த முதல் ஆலோசனைக் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்தில், தி.மு.க சார்பில் அந்தக் கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி தலைமையிலான `கூட்டணிக் கட்சிகள் தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தைக் குழு’வும், காங்கிரஸ் கட்சி சார்பில் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் தலைமையிலான அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் `தேசிய கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீட்டு குழு’வும் பங்கேற்கவிருக்கின்றன. இந்தக் குழுவில் காங்கிரஸ் முன்னாள் முதல்வர்கள் உள்ளிட்டோரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோரும் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.