நம்மில் பலர் ரிட்டயர் ஆகிவிட்டால் அலுவலகம் மற்றும் வெளியில் செல்லப் போவதில்லை; சாப்பாட்டுக்கு மட்டும் என்ன பெரிதாக செலவாகி விடுகிறது என பணி ஓய்வுக் காலத்துக்கு என எதையும் சேர்க்காமல் விட்டு விடுகிறார்கள். இவர்கள் எல்லாம் பணி ஓய்வு பெற்ற பிறகு வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். காரணம், செலவுகளை சமாளிக்க முடியாமல் தவிப்பதுதான்.

வயதாகும் போது மருத்துவச் செலவு உள்ளிட்ட பல செலவுகள் அதிகரித்து விடுகின்றன. ஆனால், நாம் நினைப்பது போல் பணி ஓய்வு பெற்றதும் செலவுகள் அனைத்தும் குறைத்து விடுவதில்லை. சில செலவுகள் குறையும் நேரத்தில் பல செலவுகள் புதிதாக வருகின்றன.

கணக்கீடு

தொகுப்பு நிதி கணக்கீடு

எனவே, முதலீட்டை ஆரம்பிக்கும்முன், பணி ஓய்வு பெறும் போது தொகுப்பு நிதி (corpus) எவ்வளவு இருக்க வேண்டும் என்பதைக் கணக்கிட வேண்டும்.

பொதுவாக, இன்றைய இளைஞர்களில் பலரும் படிப்பு முடிந்து 22, 25 வயதில் வேலைக்குச் சேர்ந்துவிடுகிறார்கள். அவர்கள் வேலைக்குச் சேர்ந்ததும் ஸ்மார்ட் போன், நல்ல பைக் போன்றவற்றை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். மேலும், கல்விக் கடனை கட்டுகிறார்கள் என வைத்துகொள்வோம்.

ஓய்வுக் காலத்துக்கான முதலீட்டை சுமார் 30 வயதில் தொடங்குவதாக வைத்துகொள்வோம். ஓய்வுக் கால தொகுப்பு நிதியை கணக்கிடுவது எப்படி எனப் பார்ப்போம்.

இன்றைய வயது: 30

தற்போதைய மாதச் செலவு : ரூ.30,000 (முதலீடு, கடன் தவணை தவிர்த்து)

பணி ஓய்வு வயது: 60

ஆயுள்: 80 வயது

பணவீக்க விகிதம் : 5% (பணிபுரியும் காலம் மற்றும் பணி ஓய்வுக் காலத்தில்)

60 வயதில் மாதச் செலவு: ரூ. 1,29,660.

முதலீடு மூலம் எதிர்பார்க்கும் ஆண்டு சராசரி வருமானம்: 12%

60 வயதில் தொகுப்பு நிதி மூலம் எதிர்பார்க்கும் ஆண்டு வருமானம்: 8%

தேவையான தொகுப்பு நிதி: ரூ.2,34,56,570

விலைவாசி

விலைவாசி உயர்வைக் கணக்கில் எடுத்துக் கொண்டு கணக்கிடும் போது, 60 வயதில் பணி ஓய்வு பெறும் போது ரூ.2.35 கோடி தேவைப்படுகிறது என்பதால் அதிர்ச்சி அடைய வேண்டும். உங்கள் கையில் 30 ஆண்டுகள் என்கிற மிக நீண்ட காலம் இருக்கிறது.

அந்த வகையில் தொகுப்பு நிதியைப் பெற மாதம் ரூ.6,650 வீதம் 30 ஆண்டுகளுக்கு முதலீடு செய்து வந்தால் போதும். ஒருமுறை மொத்த முதலீடு (Lump sum Investment) செய்வது என்றால் ரூ.7,82,930 முதலீடு செய்ய வேண்டும். .

இதுவே பணவீக்க விகிதம் அதிகமாக இருந்தால், 60 வயதில் செலவு அதிகமாக இருக்கும். அதேபோல், தொகுப்பு நிதியும் அதிகமாக தேவைப்படும். பணவீக்க விகிதம் 7% என்றால், 60 வயதில் மாத செலவு ரூ. 2,28,370 ஆக அதிகரித்துவிடும். தேவைப்படும் தொகுப்பு நிதியும் ரூ.4,97,79,520 ஆக உயர்ந்துவிடும். இது சுமார் ரூ.4.98 கோடியை பெற மாதம் முதலீடு செய்ய வேண்டிய தொகை ரூ.14,100 ஆக உயர்ந்துவிடும். ஒரு முறை மொத்த முதலீடு என்றால் ரூ. 16,61,540 முதலீடு செய்தால் போதும்.

நாட்டில் தற்போது பணவீக்க விகிதம் 7 சதவிகித அளவுக்கு இருக்கிறது. 30 வயதான தம்பதிகளின் மாதக் குடும்பச் செலவு ரூ.30,000 என்றால் அது விலைவாசி உயர்வால் 60 வயதில் சுமார் ரூ.2.28 லட்சமாக அதிகரித்துவிடும்.

கட்டுரையாளர்: கே.கிருபாகரன்,
நிறுவனர், www.moneykriya.com

இந்தப் பணத்தை மாதந்தோறும் பெற ரூ.4.98 கோடி தேவை என கண்டறிந்தோம். இந்த முதலீட்டுக்கு அதிக ரிஸ்க் இல்லாமல் ஃபிக்ஸட் டெபாசிட் அல்லது கடன் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் மூலம் ஆண்டுக்கு 8% வருமானம் கிடைத்தால் மாதம் ரூ.2.28 லட்சம் வீதம் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு தொகுப்பு நிதி வரும்.

இதுவே தொகுப்பு நிதியின் ஒரு பகுதியை அதிக ரிஸ்க் இல்லாத பங்குச் சந்தை மற்றும் கடன் பத்திரங்களில் கலந்து முதலீடு செய்யும் ஹைபிரீட் ஃபண்ட்கள், குறைவான ரிஸ்க் கொண்ட மிகப் பெரிய நிறுவனப் பங்குகளில் மட்டும் முதலீடு செய்யும் லார்ஜ் கேப் ஃபண்ட்கள், அனைத்து விதமான நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வது மூலம் ரிஸ்க்கை பரவலாக்கும் மல்டி கேப் ஃபண்ட் மற்றும் ஃபிளேக்சி கேப் ஃபண்ட்கள், பங்குகள், கடன் பத்திரங்கள், தங்கத்தில் கலந்து முதலீடு செய்யும் மல்டி அஸெட் ஃபண்ட்களில் மூலம் ஆண்டுக்கு சுமார் 10% வருமானம் கிடைத்தால் தொகுப்பு நிதி இன்னும் சில ஆண்டுகளுக்கு கூடுதலாக வரும்.

இந்தக் கணக்கீட்டில் ஏதாவது சந்தேகம் இருந்தால் நிதி ஆலோசகரை கலந்து ஆலோசிப்பது நல்லதாக இருக்கும்.

அடுத்த வாரம், ‘கோடீஸ்வரர் ஆக ரிட்டயர் ஆக சிறிய தொகையை முதலீடு செய்து வந்தால் போதும்’ என்பதை பார்ப்போம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.