அயோத்தி ராமர் கோயிலில், ஜனவரி 22-ம் தேதியன்று பிராண பிரதிஷ்டை விழா நடைபெற்றது. அதற்கடுத்த நாள்முதல் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதியளிக்கப்பட்டதையடுத்து, லட்சணக்ககில் பக்தர்கள் அயோத்தி சென்ற வண்ணம் இருக்கின்றனர். 500 ஆண்டுக்கால பிரச்னைகள் தீர்ந்து ராம பக்தர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக பா.ஜ.க தொடர்ந்து கூறிவருகிறது. ஒரு பக்கம் இவ்வாறு நடந்துகொண்டிருக்க, ராமர் கோயில் பிரதிஷ்டையொட்டி மும்பை சாலைகளில் இந்து அமைப்பினர் ஊர்வலம் நடத்தியபோது, காவி கொடியை ஏந்தியிருந்தவர்கள், ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்டபடி வாகனங்களை அடித்து நொறுக்கிய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை விழா

குறிப்பாக இஸ்லாமியர்கள் இருக்கும் பகுதிகளில் இத்தகைய தாக்குதல் நடந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவின. பின்னர் இந்த விவகாரத்தில், 13 பேரை போலீஸார் கைதுசெய்தனர். இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் `ராமர் கடவுள் இல்லை’ என சமூக வலைதளத்தில் பதிவிட்ட 17 வயது பட்டியலின சிறுவனை, வலதுசாரி அமைப்பினர் தாக்கிய சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

இது குறித்து போலீஸ் தரப்பில் வெளியான தகவலின்படி, கடந்த திங்களன்று அயோத்தி ராமர் கோயிலில் பிராண பிரதிஷ்டை நடைபெற்றபோது, கர்நாடகாவின் பிதார் மாவட்டத்திலுள்ள ஹம்னாபாத் பகுதியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இதில், பாதிக்கப்பட்ட 17 வயது பள்ளிச் சிறுவன், `ராமரும், ஹனுமானும் கடவுள் இல்லை’ என்ற குறிப்புடன் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, அந்த சிறுவனை காவி துண்டு போட்டிருந்த வலதுசாரி அமைப்பினர் சிலர் சூழ்ந்தனர். அப்போது, அவர்களில் ஒருவர் சிறுவனைக் கன்னத்தில் அறைய, மற்றவர்கள் அந்தச் சிறுவனை கோயிலுக்குள் இழுத்துச் சென்றனர். பின்னர், கோயிலுக்குள் சாமி கும்பிட வைத்து, மீண்டும் ஒருமுறை அந்த சிறுவனை ஒருவர் கன்னத்தில் அறைந்தார்.

பட்டியலின சிறுவன்

இந்த சம்பவத்தை அவர்கள் வீடியோவாக பதிவுசெய்து அதனை சமூக வலைதளத்திலும் பதிவுசெய்திருக்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் அதிகம் பரவ, அடுத்தநாள் போலீஸார் இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்தனர். அதையடுத்து விசாரணை மேற்கொண்டபோ போலீஸார், இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேரை நேற்று கைதுசெய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில், கைதுசெய்யப்பட்டவர்கள் மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்பு சட்டம் உட்பட பல பிரிவுகளின் கீழ் குற்றம்சாட்டப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.