ஐஐடி-ல் படிக்கும் மாணவர்கள் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. இந்நிலையில், ஐஐடி கான்பூரில் பிஎச்.டி படித்து வந்த பிரியங்கா(29) தற்கொலை செய்துகொண்டிருப்பது, அதிர்ச்சியையும் சோகத்தையும் இன்னும் அதிகமாக்கியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம், தும்காவை சேர்ந்த பிரியங்கா சமீபத்தில்தான் ஐஐடி-யில் சேர்ந்திருந்தார். அவரின் தந்தை மகளை போனில் அழைக்க, பிரியங்கா போனை எடுத்துப் பேசவில்லை. நீண்ட நேரமாக போனை எடுக்காத காரணத்தால் சந்தேகம் அடைந்த பிரியங்காவின் தந்தை, ஐஐடி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு தன் மகளின் அறையை சோதித்துப் பார்க்கும்படி கேட்டுக்கொண்டார். உடனே விடுதி மேலாளர் வந்து பார்த்தபோது, கதவு உள்பக்கமாக அடைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து கதவை திறந்து பார்த்தபோது பிரியங்கா மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருந்தார்.

உடனே போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் பிரியங்காவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது அறையில் எதாவது கடிதம் எழுதி வைத்திருக்கிறாரா என்பது குறித்து போலீஸார் சோதனை செய்து வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரி அபிஷேக் பாண்டே கூறுகையில், ”பிரியங்காவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அறிக்கை கிடைத்த பிறகுதான் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியும். பிரியங்காவின் பெற்றோருக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் வந்த பிறகுதான் தற்கொலைக்கான காரணம் குறித்து தெரிய வரும்.

தற்கொலை – representational image

சமீபத்தில்தான் பிரியங்கா ஐஐடி-யில் சேர்ந்து இருந்ததால் அவரைப் பற்றி மற்ற மாணவர்களுக்குச் சரியான தகவல் தெரியவில்லை. தற்கொலை செய்த அறையில் இருந்து இரண்டு கயிறுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றை பிரியங்கா இரண்டு நாள்களுக்கு முன்பு ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி இருக்கிறார். சில நாள்களாகவே தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் இருந்துள்ளார். குடும்பத்தினருடன் பேசினால்தான் தற்கொலைக்கான காரணம் தெரிய வரும்” என்றார்.

கடந்த 10-ம் தேதி இதே ஐஐடி-யில் விடுதி அறையில் விகாஸ் குமார்(26) என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இதே போன்று, பிஎச்.டி படிப்பு படித்து வந்த பல்லவி என்ற மாணவி கடந்த மாதம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பிரியங்காவை தவிர்த்து மற்ற இரண்டு பேரும் தற்கொலைக்கு முன்பு எழுதி வைத்திருந்த கடிதத்தில், தங்களது மரணத்திற்கு யாரும் காரணம் கிடையாது என்று எழுதி வைத்திருந்தனர்.

ஐஐடி கான்பூரில் ஒரே மாதத்தில் 3 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்திருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.