வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

இரண்டு ராஜதந்திரிகள் கை குலுக்கிக்கொள்ளும்போது அது நட்பிற்கா அல்லது போரைத் தொடங்கவா? என இருவருக்குமே தெரியாது.

ஆனால், இந்த சம்பிரதாயம் நடக்கும்.

”பேசாம…இந்த குரூப்-லிருந்து லெப்ட் ஆயிடலாமா?” என நினைக்கும் அளவிற்கு ”குரு தேவ பவ” வாட்ஸப் குரூப்பில் மெசேஜ்கள் வந்து விழுந்தன.

இந்த குரூப்பில் என்னை ஆராதித்து இணைத்தது நீண்டகால நண்பன் செல்வ பாரத். இந்த தொடரையே அர்பணிக்க வேண்டியளவுக்கு நட்பின் இலக்கணம்.

”தொடர்ந்து வா, தொட்டு விடாதே” என்பது லாரிகளுக்கு பொருந்துகிறதோ இல்லையோ, வாட்ஸப் குரூப்புக்கும் நன்கு பொருந்தும். குரூப்புக்கு பின்னால் அமைதியாக போய்க்கொண்டிருக்கும் வரை மோதல் இருக்காது, சேதாரம் வராது.

சொகுசு பேருந்தில் பயணிப்பது போலத் தான் வாட்ஸப்பில் பயணிப்பதும். ஒரே வித்தியாசம் பேருந்தில் சிரம் கரம் புறம் வெளியே நீட்டவே கூடாது, வாட்ஸப்பில் உள்ளே நீட்டக்கூடாது அவ்வளவு தான்.

டார்ச்லைட் தான் கிராமத்து மக்களைப் பேய், பிசாசு மூடநம்பிக்கையிலிருந்து விடுவித்தது.. அந்த பேய், பிசாசுகளோடும் பேச வைத்தது தான் நோக்கியா 1100. டார்ச்சும், டார்ச்சர் இல்லாத பேச்சும் மிகப்பெரிய வரப்பிரசாதம். அப்பேர்ப்பட்ட நோக்கியாவையே கை பிசைய வைத்தது இந்த வாட்ஸப்.

நுனிநாக்கு பேச்சினை விரல்நுனிக்கு மாற்றி ஸ்மார்ட்டாக செயல்படவில்லை நோக்கியா. தன்னிடம் வாட்ஸப் இருந்திருந்தால்,”தகுதியுள்ளது தப்பிப் பிழைக்கும்” என்ற டார்வின் கொள்கையை பிடிஎப் –ல் படித்துத் தெரிந்திருக்கும்! கொடுத்து வைக்கவில்லை, ஆண்ட்ராய்ட் –ஸ்மார்ட் போன் என அப்டேட் ஆகாதன் விளைவு? செல்லா போன் ஆனது.

தன்னை புதுப்பித்துக்கொள்ளாத எதுவும் பிரபஞ்சத்தில் நிலைக்காது. நோக்கியாவிற்கே இந்த நிலையென்றால், நாமெல்லாம் எம்மாத்திரம்? ஆகையால், நானும் ஒரு சுபமுகூர்த்த நாளில் வாட்ஸப்பை டவுன்லோட் செய்தேன்.

அடுத்த நொடியே ”குரு தேவ பவ” என்ற பெயருடன் Open this link to join my WhatsApp Group: என்ற செய்தி என் வாட்ஸ்ப் எண்ணுக்குள் புகுந்தது.குழுவில் ஏற்கனவே 43 பேர் இருந்தார்கள்.

வெல்கம்…. கொஞ்சம் பூக்கள். இப்படியாக நாலைந்து பேர் வரவேற்றார்கள்.

”இவர் பெயர் சி.ஆர். நிறைய எழுதுவார். வாசிப்பார்.” என்ற ஒற்றை வரியில் அறிமுகம் ஆனேன்.

புதிய இடத்தில் அமைதியாக இருப்பது தானே மரபும் பண்பும்.

எந்த குழுவிலும் உள்ளே புகுந்தவுடன் நம் திறமையைக் காட்டக்கூடாது.

இரண்டாம் நாள்,” இந்த செய்தியை நூறு பேருக்கு அனுப்பினால் ஐந்தே நிமிடங்களில் நல்ல செய்தி வரும்” என ஒருவர் பகிர்ந்த ஓரிரு நிமிடங்களில் குழுவிலிருந்து நீக்கிவிட்டார்கள். சாதாரண வாட்ஸப் குரூப்பில் ஐந்து நிமிடங்கள் கூட காப்பாற்றாத அந்த கடவுள் மீது பார்வேட் செய்தவருக்கு எப்படி நம்பிக்கை வரும்?

இப்படி எசகுபிசகாக எதாவது மெசேஜ் போட்டு நம்மையும் இந்த எலைட் குரூப்பிலிருந்து நீக்கிவிட்டால் என்ன செய்வது?

இது தான் பலர் அமைதியாக இருந்ததற்கு உண்மையான காரணம்.

அந்த குழுவில் ஒரு குணச்சித்திர நடிகரும் இருந்தார். பிரபல டிவிட்டராக இருந்த சினிமா விமர்சகரும் அந்த குழுவினுள் சேர்க்கப்பட்டார்.

ஒருவர் டிவிட்டரில் வெகு பிரபலம்! இன்னொருவர் சினிமா பிரபலம்!

இந்த இரண்டு ராஜதந்திரிகளும் ஒருவரையொருவர் பூக்கள் தூவி அறிமுகப்படுத்திக்கொண்டார்கள்.

டிவிட்டர் களம்புகுந்த நொடிமுதல் அந்த நடிகரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நடிகர் தன் இளம்வயதில் நடிகையோடு தனக்கு ஏற்பட்ட காதல் அனுபவங்களை நகைச்சுவையோடு பகிர்ந்து கொள்வார். அவரை இந்த டுவிட்டர் டுவிஸ்ட்டான கேள்விகளைக் கேட்பதாக நினைத்து டென்சன் ஆக்குவார்.

டிவிட்டரின் கேள்விகள் நியாயமானதாக இருக்கும். யாரிடம் பணமும் புகழும் இருக்கிறதோ அங்கே தான் கூட்டம் இருக்கும். கேள்விகள் தான் புரட்சிக்கு அடிப்படை. ஆனால் கேள்விகள் மட்டுமே புரட்சியை தந்துவிடாது. புகழோடு நிற்கும் நடிகருக்கும் வெறும் கேள்விகளை வைத்து புகழடைய விரும்பும் டிவிட்டருக்கும் இடையே ஈகோ யுத்தம்

Representational Image

”புத்தகங்களின் யுத்தம்” எழுதிய ஜொனாதன் ஸ்விப்ட் இப்படி சொல்லி வைத்துச் சென்றார். விலங்குகளானாலும் சரி மனிதர்களாலும் சரி ஒருவேலையும் இல்லையென்றால் அவர்கள் சண்டைதான் போட்டுக்கொண்டிருப்பார்கள். இவர் இன்றைக்கு இருந்திருந்தால் தனது புத்தகத்திற்கு“ வாட்ஸப் யுத்தம்” எனப் பெயர் வைத்தாலும் ஆச்சரியம் இல்லை. இப்போது குழுவின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் யார் பக்கம் நிற்பார்கள்? ஒரு கட்டத்தில் இருவருக்கு மோதல் முட்டவே… டிவிட்டரைக் குழுவிலிருந்து நீக்க முடிவு செய்து தனிப்படை அமைக்கப்பட்டது.

அதற்கு அவர்கள் கையாண்ட அரசியல் தான் அட்மின் அரசியல். கிரிக்கெட்டில் எதிரி அணி குறைந்த ஸ்கோர் செய்து இருந்தால் கூட உலகத்தரம் வாய்ந்த ஓபனிங் பார்டனர்களை இறக்கி தான் சேஸ் செய்வார்கள். உதாரணமாகக் கடந்த வாரம் நடந்த இந்தியா-தென்னாப்பிரிக்கா டெஸ்ட் மேட்சில் 80 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் கூட எப்போதும் ஓபனிங் இறங்கும் ரோஹித் சர்மாவும் ஜெய்ஸ்வாலும் தான் இறங்கினார்கள். அதாவது எதிரணியை அவமானப்படுத்தக்கூடாது என்பது தான் அதன் நோக்கம். விளையாட்டில் கூட கடைப்பிடிக்கும் இந்த மரபை, கடைவிரிக்கும் வாட்ஸப்பில் எதிர்பார்க்கவே முடியாது.

முதன்மையான அட்மின் ஒரு அப்பாவியைக் குழுவின் அட்மினாக முடி சூட்டுவார். வாட்ஸப் ஆரம்ப காலகட்டத்தில் அவ்வளவு சீக்கிரம் அட்மின் போஸ்ட் எல்லாம் கிடைத்து விடாது. அதற்குக் குழுவிற்குள் ஆயிரத்தெட்டு குட்டிக்கரணங்கள் போட வேண்டும்.

அட்மின் போடும் போஸ்ட்டுக்கு பூ தூவ வேண்டும். குழுவிற்கு விடியும் வரை காவல் இருக்க வேண்டும்.

புதிய அட்மின் சில நிபந்தனைகளை விதித்தார். ஆட்சி மாற்றத்தில் இதெல்லாம் சகஜம் தானே. ஒரு வாரம் எல்லாம் அமைதியாகப் போனது. ஒரு ஞாயிறு அன்று இரவில் சினிமா சார்ந்த விவாதம் நடைபெற்றது. திரைத்துறையில் ஒழுக்கம் என்பது தான் தலைப்பு.

தான் சார்ந்த துறை என்பதால் திரைத்துறையில் நிலவும் ஒழுக்கம் சார்ந்து தனது நியாயத்தின் பக்கம் தடுப்பாட்டம் ஆடினார். ”எல்லா துறையிலும் பாதை விலகல்கள் இருக்கின்றன. திரைத்துறையையும் மக்களையும் பிரிக்க முடியாது என்பதால் நடிகர், நடிகைகள் பேசு பொருளாக இருக்கின்றனர்” என நடிகர் தரப்பு வாதத்தை முன் வைத்தார்.

இப்போது டிவிட்டர் பிரபலம் விவாதத்தின் ஊடாக குதித்தார்.

வெளிச்சம் என்றால் எதுவேண்டுமானாலும் பண்ணலாமா சார்?

தவறு தான். ஆனால், தவிர்க்க முடியாது தம்பி.

தவிர்க்க முடியாது என்பதெல்லாம் அப்பட்டமான பொய். இது வேண்டுமென்றே நடைபெறுகிறது சார்.

அப்படி சொல்ல முடியாது…தம்பி

வாட்ஸப்பில் சார்,தம்பி,புரோ,சகோதரி என்பதெல்லாம் மேடையில் அவரே, இவரே என அழைப்பது போன்ற மெனக்கெடல் வார்த்தைகள் என்பது புரியப் பல நாட்களானது.

என்னை தப்பா நெனெச்சுக்காதீங்க

என டிவிட்டர் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தார். ”தப்பா நெனெக்காதீங்க” என்பவரின் வார்த்தைகள் எந்த காலத்தில் சரியாக இருக்கப்போகிறது?

சரிங்க சார்… மத்தவங்களை விடுங்க…உங்க அளவில் நீங்க சரியாக இருக்க முடியாதா?

இருக்கலாம் தான்.

நடிகர் லேசாகப் புரண்டார்.

Representational Image

உங்களை கெட்டவன் எனச் சொல்லல…உங்க நடவடிக்கை சரியில்லையென சொல்றேன்.

டிவிட்டர் உஷ்ணத்தைக்கூட்டினார்.

இரண்டும் ஒண்ணு தானே…

இப்போது நடிகர் நீளும் வார்த்தைகளில் வந்திறங்கினார். குரலில் கோபம் கொப்பளித்தது.

”சரி விடுங்க டாபிக்குக்கு வாங்க…” யாரோ ஒருவர் டிராபிக் ஜாம் கிளியர் செய்ய முற்பட்டார்.

நீதிபதிகள், நடுவர்கள், சமாதானபுறாக்கள் என ஒவ்வொருவரும் களம் இறங்கினர்.

அதில் ஒரு புத்திசாலி இப்படியாக பதிவிட்டார்,” சார்…எதா இருந்தாலும் காலையில பேசிக்கலாம், இப்ப தூங்குங்க”

“அப்ப நான் மப்ல பேசிறனா…” என நடிகர் பதிவிட்ட அடுத்த நொடி ”டக்”’ என அந்த நிகழ்வு நடந்தது.

Twitter is removed by admin.

ஒரு பத்து நிமிடங்கள் யாரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. சரியாக பத்தாவது நிமிடம் குரூப் ஓனர் இப்படியாக மெசேஜ் போட்டார்

“ எனக்கு தெரியும். அவர் நம்ம குரூப்புக்கு ஒத்து வரமாட்டார்”

வெற்றி தோல்வி சகஜம். நான் போர்க்களத்தை விட்டுப் போக மாட்டேன்.

இது தான் கடைசியாக டிவிட்டர் போட்ட பதிவு.

இந்த சண்டையில் அவரை நீக்கவே அட்மின் மாற்றப்பட்டார் என்பது புரிந்தது. வாட்ஸப் கிரிக்கெட் அல்ல. எதிரியை ஜெயிக்க ஓபனிங்க் பேட்ஸ்மேனை களமிறக்க.

பிடிக்காதவரை அவுட் ஆக்க பெரும்பாலும் மாற்று வீரர்களே களம் இறக்கப்படுகிறார்கள்.

இது தான் அட்மின் அரசியல்!

நான் கடைசியாகத் தான் கவனித்தேன்.

Actor left…

குழுவிற்கே அதிர்ச்சி!

ஊர்க் கோழியும் நாட்டுக்கோழியும் கூடுனா

ஒரல்ல கெடக்குற புழுங்கல் அரிசிக்குச் சேதம்

-தொடரும்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.