சீனாவின் அரசு நாளிதழான குளோபல் டைம்ஸ், இந்தியா-மாலத்தீவு இடையேயான சமீபத்திய `புகைச்சல்’ தொடர்பாகச் செய்தி வெளியிட்டிருக்கிறது. அதில், `புது டெல்லி (இந்தியா) இன்னும் திறந்த மனதோடு செயல்பட வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருக்கிறது.

சில தினங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவிற்கு இரண்டு நாள்கள் பயணமாகச் சென்றார். அங்கு தன்னுடைய அனுபவம் தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் மாலத்தீவின் அமைச்சர்கள், பிரதமர் மோடியை இழிவுபடுத்தும் வகையில் கருத்துகளைத் தெரிவித்தனர். அதனால் மாலத்தீவு அரசு, அவர்களை அமைச்சர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. 

மோடி – மாலத்தீவு

இந்த நிலையில் மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு, அரசுமுறைப் பயணமாகச் சீனாவிற்குச் சென்றிருந்தார். இது தொடர்பாகச் சீனாவின் அரசு நாளிதழான குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. அதில், “மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நட்பு மற்றும் உறவை, சீனா மதிக்கிறது. புது டெல்லியுடன் நல்ல உறவைப் பேணுவதற்கான முக்கியத்துவத்தை, சீனா முழுமையாக அறிந்திருக்கிறது. சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான மோதல்கள் காரணமாக, புது டெல்லியை நிராகரிக்குமாறு பெய்ஜிங் ஒருபோதும், மாலத்தீவிடம் கேட்கவில்லை.

மாலத்தீவுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பை ஆபத்தானதாகவோ அல்லது அச்சுறுத்தலாகவோ சீனா பார்க்கவில்லை. இந்தியா, மாலத்தீவுகள் மற்றும் சீனா இடையே முத்தரப்பு ஒற்றுமையை நிலைநாட்ட, சீனா தயாராக உள்ளது. புது டெல்லி இன்னும் திறந்த மனதுடன் இருக்க வேண்டும். சாதாரண சூழ்நிலையில், ஒரு புதிய தலைவர் ஆட்சிக்கு வரும்போது, விஷயங்களின் முக்கியத்துவம் மற்றும் அவசரத்தின் அடிப்படையில் அவர்கள் தங்கள் வருகைகளை ஏற்பாடு செய்கிறார்கள்.

சீனா – மாலத்தீவு – மோடி – இந்தியா

மாலத்தீவு அதிபர் முய்ஸு தனது முதல் அதிகாரபூர்வ வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவிற்குப் பதிலாகத் துருக்கிக்குச் சென்றதன் மூலம், பாரம்பர்யத்தை முறியடித்தார். சீனாவிற்கும் மாலத்தீவுக்கும் இடையிலான உறவு இப்போது ஒரு புதிய தொடக்கப் புள்ளியில் நிற்கிறது. இந்த வருகையின் மூலம், இரு தரப்பு உறவுகள் மேம்படும் என நம்புகிறோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.