தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தலைமையிலான `உலக முதலீட்டாளர்கள் மாநாடு- 2024′ சென்னையில் நடைபெற்றது. இதில், இந்திய மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதல் மாநில அமைச்சர்கள், எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். இந்த இரண்டு நாள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ரூ.6,64,180 கோடி அளவுக்கு முதலீடு ஈர்க்கப்பட்டிருப்பதாகவும், இதனால் 26,90,657 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, “உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்திய அரசை பாராட்டுகிறோம். இந்த மாநாடு வெற்றியடைய வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தோம். ஏனென்றால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை ஆகிய நான்கு மாவட்டத்தில் மட்டும்தான் தமிழ்நாட்டின் 34 சதவிகித உற்பத்தி திறன் இருக்கிறது. இது அல்லாத தமிழ்நாட்டின் மற்றப் பகுதிகளில் வேலைவாய்ப்பு பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கிறது.

பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தப் பிறகு, உலக நாடுகள் இந்தியாவுக்கு அதிகம் முதலீடு செய்வதற்கு வருகிறார்கள்.

குறிப்பாக எஃப்.டி.ஐ-யை ஈர்க்கக்கூடிய முதல் மூன்று நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இது இந்திய அரசியலின் வெளிப்பாடு. தமிழ்நாட்டின் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ. 6.6 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால், ரூ,10 லட்சம் கோடி முதலீடு ஈர்க்க வேண்டும் என பா.ஜ.க சார்பில் எதிர்பார்த்தோம்.

கடந்த மூன்று ஆண்டுகளில் இது போல இந்தியாவில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் ஈர்க்கப்பட்ட முதலீடு குறித்துப் பார்த்தால், பிப்ரவரி 2023-ல் உத்தரப்பிரதேசம் ரூ33.51 லட்சம் கோடி, 2022-ல் கர்நாடகா ரூ9.82 லட்சம் கோடி, குஜராத்தில் நாளை முதல் தொடர்ந்து மூன்று நாள் நடக்கவிருக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு முன்பே ரூ.7 லட்சம் கோடி, முதலீடு ஈர்த்திருக்கிறது.

பிரதமர் மோடி

எனவே, தமிழ்நாடு அரசு பயணிக்க வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது.

அதானி – பா.ஜ.க – பிரதமர் மோடியை இணைத்து மோசமான விமர்சனங்கள் வந்தன. ஆனால், இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் அதானி ரூ.42,768 கோடியும், அம்பானி ரூ.35,000 கோடியும், டாடா நிறுவனம் ரூ.83,212 கோடியும் முதலீடு செய்கிறார்கள். எனவே, அரசியலை விட்டுவிட்டு, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உழைக்க வேண்டும்.

பிரதமர் மோடி PLI (Production Linked Incentive Scheme) எனும் திட்டத்தை கொண்டுவந்தப் பிறகு முதலீடு வேகமாக ஈர்க்கப்படுகிறது.

இந்த திட்டத்தின்படி, பேட்டரி, சோலார், டெக்ஸ்டைல்ஸ், புட் புரோசஸஸ், டெலிகாம் போன்றவற்றில் முதலீடு செய்பவர்கள், ரூ1.97 லட்சம் கோடி வரை Incentive பெற்றுக்கொள்ளலாம். இதைப் பயன்படுத்திக்கொள்ள நிறுவனங்கள் முயற்சிக்கின்றன.

2019 அக்டோபர் முதல் 2023 செப்டம்பர் வரை எடுத்த கணக்கெடுப்பின்படி, எஃப்.டி.எஃப் மூலம் பணத்தை ஈட்டிய முதல் ஐந்து மாநிலங்களில் மகாராஷ்டிரா 61 பில்லியன் டாலர், கர்நாடகா 46 பில்லியன் டாலர், குஜராத் 34 பில்லியன் டாலர், டெல்லி 28 பில்லியன் டாலர். தமிழ்நாடு 9 பில்லியன் டாலர் என ஈட்டிருக்கிறது. இதில் தமிழ்நாடு 5-வது இடத்தில் இருக்கிறது.

அண்ணாமலை

எனவே, இன்னும் வரக்கூடிய அடுத்த அடுத்த மாநாடுகளில் இன்னும் நிறைய முதலீடுகளை ஈர்க்க வேண்டும். இதில் பெருமை பேச தி.மு.க-வுக்கு எதுவும் இல்லை. இதில், மாநில அரசுக்கு என்ன ஆதரவு வேண்டுமானாலும், மத்திய அரசு செய்துதருவதாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் உறுதி கூறியிருக்கிறார்.

என் மண் என் மக்கள் யாத்திரை, அரசியலில் பெரும் பரந்த பார்வையை எங்களுக்கு வழங்கியிருக்கிறது. 2024 தேர்தல், தமிழ்நாட்டில் எங்களின் கட்சியின் வளர்ச்சியில் மிக முக்கியமாக கவனம் செலுத்துகிறோம். தமிழ்நாட்டில், வாக்களிப்பதில் சாதி, மதம் ஒரு பிரச்னைதான். ஆனால், ஒவ்வொரு வாக்காளரும் தனித்தனியே வாக்களிக்கிறார்கள். அடுத்த பிரதமர் மோடிதான் என்பதில் மக்கள் உறுதியாக இருப்பதை பார்க்கிறோம்.

தி.மு.க-வில் லஞ்சம், ஊழல் மட்டும் பிரச்னையல்ல. அதன் நிர்வாகமும்தான். அதனால்தான், இந்த தேர்தலில் எங்களின் அரசின் திட்டங்கள், ஆளுமை, எதிர்கால திட்டங்கள் குறித்துப் பேசிதான் வாக்கு சேகரிக்கிறோம்.

போக்குவரத்துத் துறை ஊழியர்களின் கோரிக்கை நியாயமானது. அதை ஏற்றுக்கொள்ளும் சூழலில் அரசு இல்லை. எனவே, இன்னும் இரண்டு ஆண்டுகளில் மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு பெரும் தொகையை கடனாக கேட்கத்தான் போகிறது. அதை நாம் பார்க்கத்தான் போகிறோம்.

பில்கிஸ் பானுவுக்கு நடந்தது பெரும் கொடூரம். குஜராத் அரசு விடுதலை செய்தது தான் தவறு எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஒருவேளை மகாராஷ்டிரா அரசு விடுதலை செய்தால்… என்ன நடக்கிறது என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

அண்ணாமலை

2014-ல் பிரதமர் மோடி ஆட்சி பொறுப்பை ஏற்றபோது இந்திய அரசுக்கு இருந்த கடனை விட தற்போது 100 சதவிகித கடன் அதிகரித்திருக்கிறது என அழகிரி குற்றம்சாட்டி இருப்பது குறித்து கேட்கிறீர்கள். அதே நேரம் இந்தியாவின் உற்பத்தி திறன் 3.97 டிரில்லியன் டாலர். அதை இந்தியாவின் கடனுடன் ஒப்பிட்டால்தான் உண்மை நிலவரம் புரியும். அரசு கடன் வாங்குவது யதார்த்தம். அமெரிக்கா, சீனாவும் கடன் வாங்குகிறது தான். ஆனால், தமிழ்நாடு அதன் எல்லையைக் கடந்திருக்கிறது.

இந்தி திணிப்பு என்பது பா.ஜ.க-வின் கொள்கையல்ல. மும்மொழி கொள்கைதான் எங்களின் ஆலோசனை. மூன்றாவது மொழி இந்திதான் படிக்க வேண்டும் என்பது அவசியமில்லை. ஆனால், இந்தி பேசாததால்தான் நமது மாநிலத்துக்கு முதலீட்டாளர்களின் வருகை குறைந்திருக்கிறது. உங்கள் விருப்பப்படி படித்துக்கொள்ளுங்கள். அதனால், விஜய் சேதுபதி சொன்ன கருத்து அவரது தனிப்பட்ட கருத்து.

வெள்ள நிவாரண நிதியாக தமிழ்நாடு அரசு கேட்டிருப்பது மிகப் பெரியத் தொகை. அதனால், மத்திய அரசு ஆரம்பக்கட்டப் பணிக்கான தொகையை மட்டும் விடுவித்திருக்கிறது. மீதப்பணத்தை விரைவில் மத்திய அரசு கொடுக்கும்.

ராகுல் காந்தியின் யாத்திரையை பாராட்டுகிறோம். அதே நேரம், காங்கிரஸிடம் சரியான நோக்கமில்லை. அப்படி இருந்திருந்தால், கடந்த தேர்தலில் அவர்கள் வென்றிருக்கலாம். ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் அல்ல. அவருக்கும் எந்த நோக்கமும், திட்டமும் இல்லை.

மோடி – விஜயகாந்த்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன் அரசியல் பலத்தை பயன்படுத்தி தனக்கான வெளிச்சத்தை தக்க வைத்துக்கொள்கிறார். செயல்பாடுகளை கடந்து முக்கியத்துவமற்றவைக்கு அதிகம் செலவு செய்கிறார்.

விஜயகாந்த் மரணம் குறித்து பிரதமர் மோடி இரங்கல் குறிப்பு எழுதியது விஜயகாந்தின் மீதான பிரியத்தின் காரணமாகதானே தவிர அதில் எந்த அரசியலும் இல்லை. தமிழ்நாட்டுக்கு வந்த முதலீடு அனைத்தும் பிரதமர் மோடிக்காகதான் வந்திருக்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.