இன்னமும் ஒரே வாரம். இறுதிப் புள்ளியை நோக்கி நகரப் போகிறவர் யார்? இது மில்லியன் டாலர் கேள்வி. அல்ல, ஐம்பது லட்ச ரூபாய் கேள்வி.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

‘ஒரு நபருக்குள் ஏற்படும் மாற்றம் சொல்லினால் மட்டுமல்லாது, செயலினாலும் தெரிய வேண்டும். வெறும் வாக்குறுதிகள் போதாது. ஒருவர் செய்யும் பாராட்டு மற்றும் விமர்சனம் என்பது அவரைப் பற்றியே நமக்கு தெரியப்படுத்தி விடுகிறது. அது வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரியுமா என்று பார்ப்போம்’ என்கிற சுருக்கமான முன்னுரையுடன் உள்ளே சென்றார் கமல்.

“கடைசி வாரத்துக்கு வந்துட்டோம். இவ்ளோ தூரத்துக்கு வந்திருக்கீங்க. இதுக்கு காரணம் என்ன? ஒவ்வொருத்தரோட USP என்ன? துருப்புச்சீட்டு. ஒவ்வொருத்தரா சொல்லுங்க” என்றார் கமல். இதில் வரிசையாக சொல்லப்பட்ட அபிப்பராயங்களில் பொதுவாக இருக்கும் தன்மைகளைத் தொகுத்துக் கொள்வோம்.

கமல்

மணியைப் பொறுத்தவரை அவருடைய நடனம்தான் பிரதானமான காரணமாகச் சொல்லப்பட்டது. ‘ரவீனாதான் மணியோட USP’ என்று மாயா சொன்னதை மணி ரசிக்கவில்லை.

விஷ்ணுவைப் பொறுத்தவரை கேமில் ஃபோகஸ் செய்வது பிரதானமாகச் சொல்லப்பட்டது. “புலம்பல்தான் அவரோட மைனஸ் மற்றும் பிளஸ்” என்றார் மணி. “அவர் கிட்ட ஒரு சைல்ட் ஆர்டிஸ்ட்டும் ஆங்க்ரி யங்மேனும் இருக்காங்க” என்றார் அர்ச்சனா. “க்யூட்டா காமெடி செய்யக்கூடியவர்” என்றார் விசித்ரா. மாயா வழக்கம் போல் அதிரடி தாக்குதல்தான். “ஒருத்தரை யூஸ் பண்ணிக்கிட்டு தேவையானதை எப்படி வாங்கிக்கணும்னு தெரியும். அதை வெச்சே டிக்கெட் வாங்கிட்டாரு” என்றார்.

‘போட்டியாளர்களின் USP என்ன?’

அர்ச்சனாவின் பாடும் திறமை வெகுவாக சிலாகிக்கப்பட்டது. சொல்ல வந்ததை தெளிவான பேச்சின் வழியாக வெளிப்படுத்துவாராம். பிக் பாஸ் நிகழ்ச்சிகளை கரைத்துக் குடித்து வந்திருப்பதால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கிற தெளிவான திட்டம் அர்ச்சனாவிடம் இருக்கிறதாம். விஜய்க்கு நடனத்திறமை, சேஃப் கேம், ஃபர்பார்மர் போன்றவை சொல்லப்பட்டன. “இப்படி ஒரு புள்ள நமக்கு இருக்கணும்” என்று அம்மா சென்டியைப் போட்டார் விசித்ரா.

மணி

விசித்ராவைப் பொறுத்தவரை வயது ஒரு மேட்டரே இல்லை, கெத்து, நேரத்திற்கு ஏற்றபடி அணி மாறுவது போன்றவை அவருக்கு காரணங்களாகச் சொல்லப்பட்டது. ‘அந்தக் குழந்தையே நீங்கதான்’ என்கிற மாதிரி “விசித்ராவிற்கு கேம் ஆடவே தெரியாது” என்றார் விஜய். “தன்னோட தவறுகளையும் தோல்விகளையும் ஏத்துப்பாங்க. மன்னிக்கறதே தெரியாம மத்தவங்களை அழகா மன்னிச்சுடுவாங்க” என்றார் மாயா.

மாயாவைப் பொறுத்தவரை மூளையை உபயோகித்து ஆடுவது, என்டர்டெயின்மென்ட் தனித்தன்மை, workaholic போன்ற காரணங்கள் அவருக்கு சொல்லப்பட்டன. “ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தறாங்க” என்றார் விசித்ரா.

‘யாரோட ரசிகர் நீங்க?” – பெரும்பான்மையான தேர்வில் மாயா

“ஓகே.. அடுத்த தலைப்பிற்குப் போகலாம். நீங்க வெளில இருந்து பார்த்தீங்கன்னா, ஒரு பார்வையாளரா யாரோட ஃபேனா இருப்பீங்க?” என்கிற சுவாரசியமான கேள்வியை முன்வைத்தார் கமல். இதில் பெரும்பான்மையான வாக்குகள் மாயாவிற்குக் கிடைத்தன. தினேஷ், அர்ச்சனா, விஜய், விசித்ரா ஆகிய நால்வரும் மாயாவைத் தேர்ந்தெடுத்தார்கள். தினேஷூம் அர்ச்சனாவும் வெளியில் இருந்து ஷோவைப் பார்க்கும்போதே மாயாவின் ரசிகர்களாகி விட்டார்களாம். மணியும் விஷ்ணுவும் தினேஷைத் தேர்ந்தெடுத்தார்கள். “நான் என்னோட ஃபேன்” என்று சுயபாராட்டாக சிரிப்புடன் சொன்ன மாயா, பிறகு விசித்ராவின் ஆட்டத்திறனை சிலாகித்துப் பாராட்டினார்.

மூளைத்திறனை வைத்து ஆட்டத்தை சுவாரசியமாக்குகிறார் என்கிற வகையிலும் சரி, ‘நீங்கள் யாருடைய ரசிகர்’ என்கிற வகையிலும் சரி, மாயாவிற்கு பெரும்பான்மையான வாக்குகள் – அதிலும் சக போட்டியாளர்களால் – கிடைத்ததை வைத்துப் பார்க்கும் போது ஒரு சுவாரசியமான முரண் அதில் இருப்பதைப் பார்க்க முடிகிறது.

கமல்

பார்வையாளர்கள் தரப்பில் மாயாவிற்கென்று ரசிகர்கள் இருந்தாலும், அவரை விமர்சிப்பவர்களும் வெறுப்பாளர்களும் அதை விடவும் கணிசமாக இருக்கிறார்கள். ஆட்டத்தை வெளியில் இருந்து பார்ப்பவர்கள் மாயாவை வெறுக்கிறார்கள். ஆனால் வீட்டிற்குள் நெருக்கமாகப் பயணிப்பவர்கள், அதாவது ஆட்டத்தின் உள்ளே இருப்பவர்கள் மாயாவை ரசிக்கிறார்கள். அவருக்கு வாக்களிக்கிறார்கள். இந்த முரணை எப்படிப் புரிந்து கொள்வது? ‘மாயா தந்திரமாக மற்றவர்களின் மண்டையைக் கழுவி தன் பக்கம் ஈர்த்துக் கொள்கிறார்’ என்றே வைத்துக் கொள்வோம். அதுவும்தானே இந்த ஆட்டத்தின் ஒரு திறமையான அங்கம்? பிரதீப் இருக்கும் போதும் இதைத்தானே செய்து கொண்டிருந்தார்?

சக போட்டியாளர்களின் மண்டையை எளிதாக கழுவி விடும்படியாக மற்றவர்கள் எல்லாம் அத்தனை ஏப்பை சாப்பையானவர்களாகவா இருக்கிறார்கள்? அவர்களும் சகல விதமான தந்திரங்களையும் அறிந்தவர்கள்தானே? இப்படி எளிதாக கிரெடிட்டை மற்றவர்களுக்கு தூக்கிக் கொடுத்து விடுவார்களா என்ன? விசித்ரா, விஜய், அர்ச்சனா ஆகிய மூவரும் இப்போதைக்கு மாயா அணியில் இருப்பதால் அவரை ஆதரிக்கிறார் என்றே வைத்துக் கொள்வோம். கடினமான போட்டியாளரான தினேஷூம் மாயாவின் ஆட்டத்திறமையை பாராட்டுவதை எப்படிப் புரிந்து கொள்வது?

விருப்பு, வெறுப்பைத் தாண்டிய சமநிலையுணர்வு ரசிகனுக்கு அவசியம்

இதே போல் மணியும் விஷ்ணுவும் ‘தினேஷின் ரசிகர்கள்’ என்கிறார்கள். எதிர் க்ரூப் என்பதால் மாயாவின் பெயரைச் சொல்ல மாட்டார்கள் என்பது புரிகிறது. ஆனால் அவர்களின் தேர்வும் குறைந்தது கிடையாது. வைல்ட் கார்ட் என்ட்ரியில் நுழைந்தவர்களில் பலரும் வெளியே சென்று விட்டார்கள். இன்னமும் நீடிப்பவர்கள் தினேஷ் மற்றும் அர்ச்சனா மட்டுமே. இதில் தினேஷின் ஆட்டத்தில் முரட்டுத்தனங்கள் இருந்தாலும் வேறு பல அம்சங்களில் ஒரு கவனத்துக்குரிய போட்டியாளராக இருக்கிறார்.

இதையெல்லாம் ஒரு குறிப்பிட்ட போட்டியாளருக்கு சார்பாக வரிசைப்படுத்தப்படுவதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. எந்தவொரு ஆட்டத்திலும் ஒவ்வொருவருக்குமே ரசிகர் கூட்டம் அமையும். பிக் பாஸூம் அப்படித்தான். எதிர் அணியில் ஒரு திறமையான ஆட்டக்காரர் இருந்தால் அதை ரசிப்பதும் அங்கீகரிப்பதும்தான் ஒரு நல்ல ரசிகனின் பண்பு.

அர்ச்சனா – விஷ்ணு

தமக்குப் பிடித்த போட்டியாளர் பின்தங்கினாலோ, பிடிக்காத போட்டியாளர் முன்னேறினாலோ அதில் உலக சதி இருப்பதாகக் கருதிக் கொண்டு கரித்துக் கொட்டுவதும் வசைபாடுவதும் சமநிலையுணர்வான சிந்தனை அல்ல. ஒரு நல்ல ரசிகன் அப்படிச் செய்ய மாட்டான். குறிப்பாக விமர்சகன் அப்படிச் செய்யவே கூடாது. நிதானமாக யோசித்தால் இதிலுள்ள நியாயம் புரியும்.

கடைசி சுற்றில் இருக்கும் போட்டியாளர்கள் அனைவருக்கும் பிளஸ் மற்றும் மைனஸ் பாயின்ட்டுகள் இருக்கின்றன. அனைவருக்குமே நல்ல குணங்களும் கீழ்மைகளும் வெகுளித்தன்மையும் தந்திரங்களும் இருக்கின்றன. யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை. எனவே இந்த நோக்கில் யார் ஆட்டத்தைத் திறமையாக ஆடுகிறார்கள் என்று கவனிப்பதும் அந்த வரிசையை நியாய உணர்ச்சியுடன் அங்கீகரிப்பதும்தான் ஒரு ஆட்டத்தை ரசிப்பதற்கான அடிப்படை பண்பு. இன்னொரு நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் ஆட்டக்காரர் அவசியமான நேரத்தில் சிக்ஸர் அடித்தால் கோபத்தில் தொலைக்காட்சியை உடைத்துப் போடும் ஆத்திரக்காரன் நல்ல ரசிகனாக இருக்க முடியாது. இப்படித் துவங்கும் சார்பு மனநிலைதான், மதம், தேசம், எல்லை, இனம், மொழி என்று பல்வேறு பிரிவினைவாத உணர்வுகளை நமக்குள் ஏற்படுத்துகிறது. ஒரு திறமையாளன் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அவனை அங்கீகரிக்கும் பரந்த மனது வேண்டும்.

‘யாருக்கும் யாருக்கும் ஏழாம் பொருத்தம்?’

“ஒரே கருத்துதான். சிலர் சொன்னா உடனே மறுத்து சண்டை போடுவாங்க. ஆனா சிலர் சொன்னா ஏத்துப்பாங்க. அந்த மாதிரி இங்க யார் செய்யறது?” என்று அடுத்த தலைப்பை ஆரம்பித்தார் கமல். இதில் விசித்ரா – தினேஷ் ஜோடியின் பெயர்தான் பெரும்பான்மையாக சொல்லப்பட்டது. இருவருக்குமே ஏழாம் பொருத்தம் என்பது பார்க்கும் நமக்கே தெரியும். முகத்தில் அடிப்பது போல் பேசினாலும் “இதெல்லாம் இந்த ஆட்டத்திற்காகத்தான். தனிப்பட்ட வகையில் ஒன்றுமில்லை” என்று தினேஷ் பலமுறை தெளிவுப்படுத்துகிறார். ஆனால் சென்சிட்டிவ்வான விசித்ரா, இதை தனிப்பட்ட தாக்குதலாக எடுத்துக் கொண்டு தொடர்ந்து குமுறுகிறார். இரண்டு தரப்புமே நியாயம்தான். ஒருவரின் குணாதிசயத்தைப் பொறுத்துதான் இது அமையும்.

தினேஷ்

விஷ்ணு மற்றும் மாயாவைக் குறிப்பிட்டார் விசித்ரா. ஆம். ஒரு கட்டத்திலிருந்து விஷ்ணுவை வெறுக்க ஆரம்பித்து விட்டார் மாயா. பூர்ணிமா தன்னிடமிருந்து விலக ஆரம்பித்தது, அதை விஷ்ணு பயன்படுத்திக் கொண்டது, விஷ்ணுவின் பச்சோந்தித்தனம் போன்றவை மாயாவிற்கு வெறுப்பை ஏற்டுத்தியிருக்கலாம். ஏறத்தாழ இதே மாதிரியான காரணங்கள்தான் விஷ்ணுவின் தரப்பிலும் இருக்கும். மாயா மற்றும் பூர்ணிமா கூட்டணியின் அழிச்சாட்டியங்கள், அவர்களின் நெருக்கமான நட்பு, பூர்ணிமாவை அணுகமுடியாதவாறு நந்தியாக நிற்கும் மாயா போன்றவை விஷ்ணுவிற்கு மனவிலகலை ஏற்படுத்தியிருக்கின்றன. அதே சமயத்தில் மாயாவின் புத்திசாலித்தனத்தையும் விஷ்ணு புறணி பேசும் திட்டுவது மாதிரி பாராட்டுவார்.

விசித்ரா

“உங்களுக்குள்ள என்னதான் பிரச்னை?” என்று தினேஷ் – விசித்ரா விவகாரத்தையொட்டி கமல் நமட்டுச் சிரிப்புடன் கேட்டதும் சபை கலகலத்தது. “முகத்தில் அடிச்ச மாதிரி பேசிடுவாரு சார்.” என்று விசித்ரா வருத்தத்துடன் சொன்னதைப் புரிந்து கொள்ள முடிந்தது. என்னதான் கேம் என்றாலும் இப்படிப் பேசுவர்களை சென்சிட்டிவ்வாக உள்ளவர்களால் தாங்க முடியாது. “எதுக்கு கடைசி வாரம் வரைக்கும் வெச்சிக்கிட்டு…. கை கொடுத்து முடிச்சிடுங்க” என்று கமல் சொன்னது சிறப்பானது. தினேஷூக்கு இதெல்லாம் பிரச்னையேில்லை. எனவே உடனே ஆர்வமாக எழுந்து வந்து கைகளை நீட்டினார். விசித்ராவிற்கு முழு உடன்பாடு இல்லையென்றாலும் அரைமனதாகக் கை கொடுத்தார்.

எலிமினேட் ஆன விசித்ரா

“ஓகே. விஷ்ணுவைத் தவிர எல்லோருமே நாமினேஷன்ல இருக்கீங்க. இல்லையா?” என்று இந்த எபிசோடின் முக்கியமான விஷயத்திற்கு வந்தார் கமல். சிரிப்பு மறைந்து அனைவரின் முகத்திலும் டென்ஷன் ஏறியது. ‘யார் போவாங்க?’ என்கிற வழக்கமான கேள்வியைக் கமல் கேட்க “எல்லாத்தையும் பேக் பண்ணி ரெடியா வெச்சுட்டேன்” என்றார் விசித்ரா. எனில் அவருடைய உள்ளுணர்வு அறிந்திருக்கும் போல. மணி மற்றும் தினேஷின் பெயர்களும் வந்தன.

ஒவ்வொரு சீசனிலும் காமெடி ஊறுகாயாக ஒருவரைப் பயன்படுத்திக் கொள்வார் கமல். சிலர் தானாக வந்து அப்படி அமைவார்கள். இந்த சீசனில் சமீபத்தில் அப்படிச் சிக்கியவர் விஷ்ணு. எனவே சமீப வாரங்களில் “நீங்கதானே பிக் பாஸ்.. அனலிஸ்ட்?” என்னுமளவிற்கு கிண்டலடிக்கிறார் கமல். எனவே அவரையும் கமல் விசாரிக்க “இந்த முறை என்னை விட்டுடுங்க சார். ஏற்கெனவே ஒரு மாதிரியா பார்க்கறாங்க” என்று சிரித்தார் விஷ்ணு. பிறகு தயங்கித் தயங்கி, சுற்றிலும் பார்த்து, விசித்ரா மேம் முறைப்பதைப் பார்த்து பம்மி “விசித்ரா மேம் இல்ல” என்று அவர் இழுக்க “ஓ.. நீங்கதான் இதையெல்லாம் முடிவு பண்றதா?” என்று கமல் ஒரண்டை இழுக்க ஒட்டு மொத்த சபையும் சிரித்தது.

கமல்

பிறகு எவிக்ஷன் கார்டை எடுத்தார் கமல். மாயாவின் முகம் டென்ஷனில் ஏறியது. வாயைப் பொத்திக் கொண்டார். ஒருவேளை அவர் எவிக்ட் ஆனால் கெத்தாக சொன்னதெல்லாம் காமெடியாகப் போய் விடும். ஆனால் கார்டில் இருந்தது விசித்ராவின் பெயர். அவருக்கும் கொஞ்சம் அதிர்ச்சிதான். என்றாலும் எதிர்பார்த்திருந்ததால் அதிகம் ஏமாற்றத்தைக் காண்பிக்கவில்லை. உடனே எழுந்து வந்த தினேஷ் ‘All in the game’ என்று கை கொடுத்து, தலை குனிந்து வணங்கியது நல்ல விஷயம். ‘Well played’ என்று அனைவரும் விசித்ராவைப் பாராட்டினார்கள். நாணயத்தை மாயாவிற்கும விஜய்க்கும் அளித்தார். பிறகு விசித்ராவின் பேச்சு ஆத்மார்த்தமாக இருந்தது.

‘வயது ஒரு விஷயமில்ல. முதல் காலடியை நாமதான் எடுத்து வைக்கணும்’

“சினிமால நடிக்கறத விட்டப்புறம் எல்லோரும் மறந்துட்டாங்க. இந்த ஷோ அவங்களுக்கு என்னை ஞாபகப்படுத்தியிருக்கும். சில விஷயங்களுக்கு நமக்கு தயக்கம் ஏற்படும். ஆனா முதல் அடியை நாமதான் எடுத்து வைக்கணும். அப்பத்தான் மத்தவங்க கண்ல பட்டு வாய்ப்புகள் வரும். ஃபேமிலிக்கு முக்கியத்துவம் தரணும். அதே சமயத்துல புதிய விஷயங்களிலும் துணிச்சலா கால் வைக்கணும். வயசு ஒரு தடையே இல்ல. எனக்கு ஃபேமிலி சப்போர்ட் இருந்தது. யாரையாவது ஹர்ட் பண்ணியிருந்தா மன்னிச்சிடுங்க. மனசுல இருக்கறதை பேசிடுவேன். இதுதான் நான்” என்று அவர் பேசி முடிக்க அனைவரும் நெகிழ்ந்து கைத்தட்டினார்கள்.

தனக்கு அளிக்கப்பட்ட புகைப்படத்தைப் பார்த்த விசித்ரா “ரெண்டு பேருக்கும் கை கொடுத்து சமாதானம் பண்ணி வைக்கும் போதே தெரிஞ்சிடுச்சு” என்றார். ஸ்மார்ட். “இத்தனை கால சீசனில் ஒரு புதிய மைல் கல் ஏற்படுத்தியிருக்கீங்க” என்று பிக் பாஸ் பாராட்டியது சிறப்பு.

பைனலிஸ்ட்

“ப்ரீயா இருந்தா வீட்டுப் பக்கம் வாங்க பேசலாம்” என்றது குறும்பு. பெரியவர் வந்ததும் பொசசிவ் தாங்காமல் ‘ஸ்மால் பாஸூம் வந்து விட்டார். “விச்சு.. ஐ’ல் மிஸ் யூ” என்று அவரும் குறும்பு செய்ய, விசித்ராவிற்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. ‘மோட்டிவேஷனுக்கு நன்றி” என்று கிளம்பினார்.

மேடைக்கு வந்த கமல் புத்தகப் பரிந்துரை பகுதிக்கு வந்தார். இந்த வாரம் அவர் பரிந்துரைத்தது, Edward de Bono எழுதிய ‘Po: Beyond Yes and No’ என்கிற நூல். “இருபது வயசில இதைப் படிச்சிருக்கேன். என்னை புரட்டிப் போட்ட நூல் இது. ‘Lateral thinking’-ன்ற விஷயத்தைக் கேள்விப்பட்டிருப்பீங்க. அதை உருவாக்கியவர் இவர்தான். இந்தச் சிந்தனை விஞ்ஞானம், கலை உள்ளிட்ட விஷயங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று சிந்தித்தவர். ‘எப்படி சிந்திப்பது?’ என்று ஆக்ஸ்போர்டில் பாடம் எடுத்தவர். இதைப் படிச்சா நம்ம கிரியேட்டிவிட்டி பெட்டரா மாறும். எந்தத் துறையில் இருப்பவர்களும் இதைப் படிக்கலாம்” என்று புத்தகப் பரிந்துரையை நிறைவு செய்தார்.

போட்டியாளர்களின் காமிரா பிரசாரம்:

பார்வையாளர் கூட்டத்தை வியந்து பார்த்தபடி வந்தார் விசித்ரா. ஒருவேளை தனது குடும்பத்தினரை தேடினாரோ?! “ஒவ்வொரு நாளும் சவால்தான். ரெண்டு வாரம்தான் இருப்பேன்னு நிறைய பேர் சொன்னாங்க. உள்ளே கேமிற்காக சில விஷயங்கள் செய்யறாங்க. என்னாலயும் முட்டாளா இருக்க முடியாது. அதே சமயத்துல வேல்யூஸ் முக்கியம். நான் மக்கள் கிட்டதான் நிறைய பேசியிருக்கேன். அழக்கூடாதுன்னு நெனச்சு வந்தேன். ஆனா நிறைய எமோஷனல் ஆகி அழுதிருக்கேன்” என்ற விசித்ராவிடம் “இங்க இருந்து எடுத்துட்டுப் போற செய்தி என்ன?” என்று கமல் கேட்க ‘இளைய தலைமுறையோட பழக முடிஞ்சது நல்ல அனுபவம். அவங்களுக்கு வழிவிட்டுட்டுப் போறேன்” என்று டைமிங்காக விசித்ரா சொன்னது சிறப்பு.

அர்ச்சனா

அகம் டிவி வழியாக உள்ளே வந்த விசித்ரா, அப்போதும் ஒரண்டையை விடாமல் “தினேஷ் யூத்ஃபுல்லா இருக்காரு. ஏதோ ஒரு சமயத்துல ஒரே வயசுக்காரங்கன்னு சொல்லிட்டேன். அப்போதுல இருந்து பிடிச்சிக்கிட்டாரு” என்று அவர் கலாய்க்க “முத்து படம் வரும் போது நான் ப்ளஸ் 2 படிச்சிட்டு இருந்தேன்” என்று தினேஷ் சொன்னதை விசித்ரா கவனிக்காதது போல் திரும்பிக் கொண்டது சுவாரசியம். “உங்க கூட மட்டும்தான் சார் சேர்ந்து நடிக்கலை” என்ற விசித்ராவை வாழ்த்தி அனுப்பிய கமல் “ உங்களுக்கு ஒரு முக்கியமான டாஸ்க் இருக்கு. ஏன் மக்கள் உங்களுக்கு வாக்களிக்கணும்னு ஒவ்வொருத்தரும் காமிரா முன்னாடி பேசணும். ஃபைனல்ஸ்ல பார்க்கறேன்” என்றபடி விடைபெற்றுக் கொண்டார்.

ஒவ்வொருவரும் தங்களின் சிறப்பு அம்சங்களைச் சொன்னாலும் அதை வலியுறுத்தி சொல்லாமல் “நீங்களே பார்த்துட்டு இருக்கீங்க. உங்களுக்கு தெரியும்” என்று ‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ என்கிற தொனியில் காமிரா முன்பாக வேண்டுகோள் வைத்தது சிறந்த விஷயம். வெற்றி பெறுபவர் யாராக வேண்டுமென்றாலும் இருக்கட்டும், ஒரு போட்டியாளரின் மீதுள்ள விருப்பு, வெறுப்பு ஆகியவற்றைக் கடந்து இந்த ஆட்டத்தைச் சிறப்பாக கையாண்டவர் யார் என்பதை சமநிலையுணர்வுடன் பரிசிலீத்து வாக்களிப்பதுதான் சரியான விஷயம். இது பிக் பாஸ் ஆட்டத்திற்கு மட்டுமல்ல. அதிகார அரசியல் போன்ற முக்கியமான முடிவுகளுக்கும் பயன்படும்.

இந்த கடைசி வாரத்தில் இருப்பவர்களில் கடினமான போட்டியாளர்கள் என நீங்கள் நினைப்பவரை கமென்ட்டில் தெரிவியுங்கள்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.