ஆயிரம் விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், பூர்ணிமாவிற்கும் மாயாவிற்கும் இடையே இருக்கும் அந்த நட்பின் உன்னதம் இறுதிக் கட்டத்திலும் வெளிப்பட்டது.

மாயா

இந்த இருவருமே ஆட்டத்தில் பிரதானமான பாதிப்பையும் செல்வாக்கையும் ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. இந்த சீசன் உயிர்ப்போடு இருந்ததில் இந்தக் கூட்டணியின் பங்கு கணிசமாக இருந்தது.

இந்த எபிசோடின் விசாரணை நாளில் நடந்த ஒரு உரையாடலில் மாயாவிற்கு அதிக பிளஸ் பாயிண்ட்களும் விஷ்ணுவிற்கு நிறைய மைனஸ் பாயிண்ட்களும் கிடைத்தன. ஆட்டத்தின் கிளைமாக்ஸில் ஏதேனும் திருப்பம் நிகழலாம் என்பதன் டிரைய்லரா இது?

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

“கொண்டாட்டத்தோடு ஆரம்பிக்கும் ஒரு பயணம், அதே கொண்டாட்டத்துடன் முடிந்தால்தான் அது நல்ல பயணம். வாழ்க்கை என்னும் கொண்டாட்டமும் அது போல்தான். ஒருவருடைய வாழ்க்கை நன்றாக அமைந்தது என்பதற்கான அடையாளமே, அவரது இறுதி ஊர்வலம்தான். அந்தப் பயணம் சிறப்பாக அமைவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதுதான் நம் வாழ்க்கை” என்கிற முன்னுரையுடன் வந்த கமல், சமீபத்தில் மறைந்த விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட மக்கள் கூட்டத்தைச் சொல்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

“இந்த வீட்டின் பயணத்தில், வெளியில் யார் செல்வார் என்பதை ஒவ்வொரு முறையும் நீங்கள்தான் முடிவு செய்வீர்கள். (அப்படியா?!) ஒரேயொரு முறையை தவிர்த்து. பெட்டி எடுக்கும் சாய்ஸ் தவிர. அது எடுக்கப்பட்டு விட்டது. வீட்டில் உள்ளவர்களின் மனநிலை என்னவாக இருக்கிறது என்று பார்ப்போம்” என்று வெள்ளிக்கிழமை நிகழ்வுகளைக் காட்டினார் கமல்.

விஷ்ணு – தினேஷ்

ஆண் போட்டியாளர்களில் விஷ்ணு அளவிற்கு புறணி பேசுவதில் யாரும் இருக்க மாட்டார்கள் போல. ஒன்று தினேஷூடன் அமர்ந்து விடுகிறார். அல்லது மணியுடன் அமர்ந்து பல மணி நேரங்களுக்கு வம்பு பேசுகிறார். “ஐயோ.. இவன வெச்சிக்கிட்டு முடியல சார்” என்று கமல் முன்பாக பிறகு அவர்கள் கதறும் அளவிற்கு விஷ்ணுவின் ஸ்ராட்டஜி புராணம் நீள்கிறது.

“விசித்ரா ஏன் பெட்டியை எடுக்கலை. எடுத்திருந்தா செமயா இருந்திருக்கும். அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து மண்டையைக் கழுவியிருப்பாங்க. நல்லா ஊசி ஏத்தறதுல மாயா கில்லி” என்பதாக தினேஷ், விஷ்ணுவின் புறணி இருந்தது. “அந்தக் காசை நான் வாங்கிடுவேன், டிஸ்கஸ் பண்ணித்தான் அவ எடுத்தா” என்று பூர்ணிமாவுடனான கூட்டணி பற்றி அர்ச்சனாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் மாயா. “என் தங்கை சொல்லுக்கு கட்டுப்பட்டு நின்னுட்டேன். இல்லைன்னா நானும் பெட்டிதான்” என்று தன் தரப்பு காரணத்தைச் சொன்னார் அர்ச்சனா. ஆக, ‘நான் மாமனை மட்டும்தானே பார்த்தேன்’ என்கிற வடிவேலு காமெடி மாதிரி, அனைவருமே ஓரக்கண்ணால் பெட்டியை மட்டும்தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள் போல.

“ஏன் பெட்டியை எடுக்கவில்லை?” – விசாரித்த கமல்

அகம். கமல் என்ட்ரி. நேரடியாக பெட்டி விஷயத்திற்கு வந்தவர் “ரெண்டு பேர் மட்டும்தான் எடுக்க போட்டி போட்டாங்க. மத்தவங்கள்லாம் பக்கத்து இலைக்கு பாயாசம்ன்ற மாதிரியே ஓரமா இருந்தீங்களே… ஏன் எடுக்கலை?” என்று ஒவ்வொருவரிடமும் விசாரித்தார். “எனக்கு கோடிகள் முக்கியமில்ல. வந்திருக்கும் லட்சியம்தான் முக்கியம்” என்றார் தினேஷ். அவருடைய லட்சியம் நிறைவேறட்டும். ஆனால் பிக் பாஸ் டைட்டில் ஜெயித்தால் அவர் வந்திருக்கும் நோக்கம் நிறைவேறி விடுமா? (ஆட்டோவ திருப்பினா கண்ணாடி எப்படி ஓடும் ஜீவா?!) “பெட்டியை கட்டாயமாக எடுக்கக்கூடாதுன்னு அம்மா சொல்லிட்டாங்க” என்றார் மணி. “அதுவரைக்கும் நீங்க இருக்கணும்னு மறைமுகமாக ஆசிர்வாதம் பண்ணியிருக்காங்க” என்று கூடுதல் சென்டியை இணைத்தார் கமல். மணி இத்தனை நாள் இருந்ததெல்லாம் மணிக்கே ஆச்சரியமாகத்தான் இருந்திருக்க வேண்டும்.

தினேஷ்

அடுத்து எழுந்த விஷ்ணு “டிக்கெட் டு பினாலே போயிட்டேன். முழுசா முடிக்கணும். ஏதாவது மேஜிக்கூட நடக்கலாம். தோக்கக்கூட செய்யலாம். ஆனா கை தூக்கற மேடைக்காவது போயி நிக்கணும்னு தோணுச்சு.” என்று அவர் சொல்வது சரியான காரணம். “ஏகப்பட்ட கணக்கு போட்டு கொல்றான் சார். ஸ்கூல் டைம்ல கூட நான் இத்தனை கணக்குப் பாடம் கேட்டதில்ல” என்று மணி கதற “இந்த உலகத்துக்கு நாம ஏதாவது சொல்லணும் இல்லையா சார்” என்று பம்மினார் விஷ்ணு. வீட்டிற்குள் இருக்கும் போது “புரியுதா… நான் சொல்றது” என்று விதம் விதமான திட்டங்களை கெத்தாக விவரிக்கும் விஷ்ணு, கமல் அதைக் கிண்டலடிக்கும் போது உடல் இரண்டாக மடங்கி ‘ஹிஹி. சும்மா’ என்ற வழிவது காமெடியான விஷயம்.

அடுத்து அர்ச்சனா எழுந்த போது பார்வையாளர்களிடமிருந்து பலத்த கைத்தட்டல் எழுந்தது. அதைப் பார்த்து அர்ச்சனாவே ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தார். கைத்தட்டலை கணக்கில் எடுக்கக்கூடாது என்பது பாலபாடம். “தங்கச்சி சொலிட்டா சார். அதை மீற முடியலை” என்று டி,ஆர். மாதிரி சென்டியாக சொன்னார். “பெட்டி எடுக்கறதைப் பத்தி யோசிக்கக்கூட இல்லை. மக்கள்தான் என்னை அனுப்பிச்சாங்க. அவங்களாதான் என்னை வெளில அனுப்பணும். அதில் எனக்கு உரிமையில்லை” என்று ஜென்டில்மேன்தனமாக பேசினார் விஜய். நல்ல விஷயம்தான். ஆனால் மக்களின் அபிமானத்தைப் பெற்று இறுதிக் கட்டத்தில் வாக்குகளைச் சேகரிக்க இதுவும் ஒரு நல்ல வழி.

அர்ச்சனா

அடுத்து எழுந்த விசித்ரா “ரெண்டு மூணு வாரம்தான் இருப்பேன்னு நெனச்சேன். ஆனா மக்கள் சப்போர்ட்டில் இவ்வளவு தூரம் வந்திருக்கேன். பணம் எப்ப வேணா சம்பாதிக்கலாம். இந்த அனுபவத்தைச் சம்பாதிக்கறது முக்கியம். எவ்ளோ தூரம் இருக்க முடியும்னு பார்க்க முடிவு செஞ்சேன்” என்று சொல்ல “இதுவே நல்ல தூரம்தான்” என்று பாராட்டினார். ஆம், இந்த வயதில் உள்ளவர்கள் விரைவில் எலிமினேட் ஆகி விடுவார்கள் என்கிற வழக்கத்தை உடைத்து விசித்ரா செய்தது நிச்சயம் சாதனைதான். அடுத்து எழுந்த மாயா “நான்தான் எடுக்கலாம்னு இருந்தேன்” என்று உண்மையை ஒப்புக் கொண்டவுடன் கைத்தட்டல் வந்தது. “பைனலிஸ்ட் ஆயிடுவேன்னு தெரியும். ஆனா வின்னர் ஆவேன்னான்னு சந்தேகம். நான் எடுக்கறதுக்குள்ள அவ கைல அடிச்சிட்டா” என்றார்.

மேடையில் தோன்றிய பீனிக்ஸ் பூர்ணிமா (!)

பிரேக் முடிந்து திரும்பிய கமல் “பெட்டியை எடுக்காம கோட்டை விட்டது யாரு?” என்கிற தலைப்பை ஆரம்பிக்க தினேஷ், மணி, விஷ்ணு ஆகிய மூவரும் விசித்ராவைக் கைகாட்டினார்கள். மணியைச் சுட்டிக் காட்டிய விஜய் “டான்ஸ் கிளாஸ் வைக்க உபயோகமா இருந்திருக்கும்” என்று சொல்ல “அவர் ஜெயிக்க மாட்டார்ன்னு முடிவு பண்ணிட்டீங்களா… கப் ஜெயிச்ச தொகைல இரண்டு மூணு கிளாஸ் ஆரம்பிக்கலாமே?” என்று கமல் லாஜிக்காக மடக்கியது சிறப்பு. “கோட்டை விட்டதாக நான் யாரையும் நெனக்கலை. இளம் தலைமுறைக்கு வழிவிடச் சொன்னாங்க. ஆனா கடினமான போட்டியாளரா நீடிக்க விரும்புகிறேன்” என்று பதில் சொன்னார் விசித்ரா.

பூர்ணிமா

“நான்தான் சார் கோட்டை விட்டுட்டேன்” என்று சிரித்தபடி மீண்டும் உண்மையைப் பேசினார் மாயா. “பார்த்தா.. அப்படித் தெரியலையே” என்று கமல் நமட்டுச் சிரிப்புடன் கேட்க “அதெல்லாம் என்கிட்ட வந்துடும்” என்று மாயா சொன்னதில் இருந்து ரகசிய உடன்பாடு ஆகியிருப்பது தெரிந்தது.

கமல் பிரேக்கில் செல்ல “பூர்ணிமா வர மாட்டாளா?” என்று கேட்டு கண்கலங்கினார் விசித்ரா. (அடடா! என்ன பாசம்!) “அடுத்த ஏழு நாள் எப்படி இருக்கப் போறேனோ, இந்த வாரம் எலிமினேட் ஆனா எனக்கு சிறப்பு விழா எடுத்து வழியனுப்புங்க” என்றார் மாயா. (வாங்க.. வாங்க.. விழா எடுத்துடுவோம் – பெரும்பாலான பார்வையாளர் மைண்ட் வாய்ஸ்!)

விசித்ராவின் ஆசை நிறைவேறியது. மேடையில் பூர்ணிமா. அவசரத்தில் வந்து விட்டார் போல. காஃபி பொடியில் காரக்குழம்பு போட்ட மாதிரி இருந்தார். “கைல என்ன பெட்டியா, கொடுங்க பார்க்கலாம்” என்று குறும்பாக வாங்கி வைத்துக் கொண்டார் கமல். “டைட்டில் ஒருத்தருக்குத்தான் கிடைக்கும். அதை விட இங்க கத்துக்கிட்ட விஷயங்கள் முக்கியம். கண்ணு முன்னாடியே ஒரு நிச்சயப்பரிசு சுத்திக்கிட்டு இருக்கு. இத்தனை நாள் இருந்ததுக்கு எனக்கு நானே கொடுத்துக்கிட்ட கிஃப்ட்தான் சார் இது” என்று சாமர்த்தியமாகப் பேசிய பூர்ணிமா “வெளில என்னைக் கொண்டாடறாங்க சார். எதிர்பார்க்கவேயில்ல. நான்தான் லூஸூ மாதிரி இங்க வர்ற கைத்தட்டல் வெச்சு என்னென்னமோ நெனச்சிட்டு குழம்பினேன்” என்று பரவசத்துடன் சொல்ல “நான் அப்பவே சொன்னேனா இல்லையா?” என்ற கமலிடம் “ஸாரி சார்” என்றார் பூர்ணிமா. (என்னது, கொண்டாடறாங்களா. எங்க அண்டார்ட்டிக்காவிலயா? – இது ஹேட்டர்ஸ் மைண்ட்வாய்ஸாக இருக்கலாம்!)

விசித்ரா

“ஆனா இருந்த நாள்ல நவரசத்தையும் காட்டிட்டீங்க” என்று கமல் சொன்னது உண்மை. பூர்ணிமாவால் தன் உணர்ச்சிகளை மறைக்கவே முடிவதில்லை. பளிங்கு மாதிரி அவரது முகம் அத்தனையையும் உடனுக்குடன் லைவ் ரிலே செய்து விடுகிறது. பயண வீடியோவைப் பார்த்தாலே தெரியும். அதுகலவையான உணர்ச்சிகளுடன் ரகளையாக அமைந்திருந்தது. இவர்களைப் போன்றவர்களால் சிறந்த நடிகர்களாக வர முடியும். (ஏற்கெனவே அந்தம்மா சிறந்த நடிகைதான் – மீண்டும் ஹேட்டர்ஸ் மைண்ட் வாய்ஸ்). “நான் வாங்கிய அடியை விடவும் என் நண்பர்கள், குடும்பம் ரொம்ப அடிவாங்கினாங்க. ரொம்ப ஸ்ட்ராங்கா இருந்தாங்க” என்ற பூர்ணிமாவிடம் “பணப்பெட்டி ஒகே. மனப்பெட்டில என்ன இருக்கு?” என்று கமல் கேட்க “அவங்க காட்டிய நட்பு, ஆதரவு. அன்பு. வெளில வந்த பிறகு மாறுமோன்னு பார்த்தேன். மாறாம கூடிடுச்சு. இதை வாழ்நாள் முழுக்கக் கொண்டாடுவேன்” என்று மாயாவைப் பற்றி பூர்ணிமா சொன்னது நெகிழ்வை ஏற்படுத்தியது.

‘தெய்வத்திருமகள்’ விக்ரம், நிலாவாக மாறிய இருவர்

“நான் யாரு. நான் செய்த தடுமாற்றங்கள், தவறுகள் என்ன.. பலவீனம்ன்னு நான் நெனச்சதே பிளஸ்ஸா இருந்தது.. இதெல்லாம் வெளில வந்தப்புறம்தான் தெரிஞ்சது. ‘ஃபீனிக்ஸ் பூர்ணிமான்னு’ என்னைக் கூப்பிடறாங்க சார்” என்று பரவசமாகச் சொன்னார். (பூர்ணிமா மீண்டும் மீண்டும் எழுந்து வந்ததில் மாயாவின் பங்கு பிரதானமானது. எனவே அந்த கற்பனைப் பறவையின் இரண்டு சிறகுகளாக மாயா இருந்தார் என்றால் கூட மிகையில்லை).

அகம் டிவி வழியாக உள்ளே வந்த பூர்ணிமாவைப் பார்த்ததும் அனைவருக்கும் மகிழ்ச்சி. மாயாவின் முகத்தில் பிரத்யேக பல்பு எரிந்தது. விசித்ரா கண்கலங்கினார். அர்ச்சனாவின் முகத்தில் பரவசம். “இன்னுமா போகலை?” என்று விஷ்ணு நினைத்திருக்கலாம். ஒவ்வொருவரையும் பற்றி அபிப்ராயம் சொன்ன பூர்ணிமா, விஷ்ணுவிடம் வரும் போது கைத்தட்டல் கேட்டது. “சும்மாவே திட்டுவாங்க” என்று சங்கடச் சிரிப்பை உதிர்த்தார் விஷ்ணு.

பூர்ணிமா

கட்டைவிரலையும் சுட்டுவிரலையும் இணைத்து ‘செம’ என்கிற மாதிரி சமிக்ஞையால் தெரிவித்தார் பூர்ணிமா. பிறகு சற்று கண்கலங்கி சுதாரித்து ‘இட்ஸ் ஓகே. ஆல் தி பெஸ்ட்” என்றார். இதில் பூர்ணிமாவின் மனவலியும் தெரிந்தது. சர்காஸ்டிக் குற்றச்சாட்டும் தெரிந்தது.

கடைசியில் மாயாவைப் பார்த்தார் பூர்ணிமா. தெய்வத்திருமகள் விக்ரம் – நிலா மாதிரி இருவரும் சைகையில் பிரியத்தை வெளிப்படுத்திக் கொண்டது சிறப்பான காட்சி. “சீக்கிரம் வா” என்று பூர்ணிமா கையை நீட்ட “இப்பவே வரணுமா. ஜெயிச்சுட்டு வரணுமா” என்று ஜாலியாக குறுக்கிட்டார் கமல். “சும்மா வந்தா துரத்தி துரத்தி அடிப்பேன்” என்றார் பூர்ணிமா. (அதெப்படி விசித்ரா, அர்ச்சனா, மாயா ஆகிய மூவருமே டைட்டில் வெல்ல முடியும்!). பூர்ணிமா விடைபெற்றுக் கொள்ள ஒரு பிரேக். விஷ்ணுவிடம் காட்டிய சமிக்ஞையை பெருமிதத்துடன் கிண்டலடித்த மாயா “தலைவி வேற ரகம்” என்றார். சங்கடமாக அமர்ந்திருந்த விஷ்ணு, இதைப் பற்றி தன் சகாக்களிடம் விசாரிக்க “நீ என்ன பண்ணியோ. எங்களுக்கு எப்படித் தெரியும்” என்று ஜாலியாக போட்டுக் கொடுத்தார் தினேஷ்.

பிக் பாஸ் டாஸ்க்குகளின் சூட்சுமங்கள்

பிரேக் முடிந்து திரும்பிய கமல் “agree, disgreeன்னு ஒரு டாஸ்க் பண்ணீங்க. அது தொடர்பா ஏதாவது சொல்ல விரும்பறீங்களா?” என்று கேட்க “எதுக்கு சார்.. அதை மீண்டும் கிளறிக்கிட்டு” என்று சபையே மௌனமாக இருக்க “ஓகே. பேச விரும்பலைன்னா.. அடுத்த தலைப்பு போகலாம்” என்று கமல் சொன்னாலும் அதை விடுவதாக இல்லை. “அது உங்களுக்கு கிடைச்ச ஒரு நல்ல வாய்ப்பு. ஒரு மனிதரின் செயல்பாடுகளை, வெற்றி தோல்விகளை கவனித்து தொகுத்துக் கொள்வதற்கான பயிற்சி. தனிப்பட்ட கோபம் காரணமா விட்டுட்டீங்க. மாயாவும் தினேஷூம்தான் இடைமறிச்சு தலைப்பு தொடர்பா பேசச் சொன்னாங்க. உங்க வாழ்க்கைக்கு கூட இது பயன்படும். மிஸ் பண்ணிட்டீங்க” என்கிற லெக்சருடன் ஆதங்கப்பட்டார் கமல்.

பூர்ணிமா

கமல் சொல்வது உண்மை. பிக் பாஸில் தரப்படும் பல்வேறு டாஸ்க்குள் சதுரங்க ஆட்டம் போல உளவியல் நெருக்கடியைத் தருபவை. அவற்றின் மூலம் ஒரு போட்டியாளர், இதர போட்டியாளர்களைப் பற்றி என்ன அபிப்ராயம் வைத்திருக்கிறார் என்பதை குறுக்கு வெட்டாக, துல்லியமாக சொல்ல வைப்பதற்கான கண்ணிகள் அவை. அவற்றை சாமர்த்தியமாக எதிர்கொள்வது ஒரு சுவாரசியமான சவால். ஆனால் பெரும்பாலான போட்டியாளர்கள், தனிப்பட்ட கோப, தாபங்களை மட்டுமே பிரதானமாக எடுத்துக் கொண்டு அவற்றைக் கொட்டித் தீர்த்து இந்த ஆட்டத்தின் நுட்பத்தைப் பாழ்படுத்தி விடுகிறார்கள். (மாயா, பிரதீப் போன்றவர்கள் விதிவிலக்கு!)

உண்மையாகவே அடுத்த தலைப்பை கையில் எடுத்த கமல் “மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தவர் யார், செய்யாதவர் யார்” என்று ஒவ்வொருவரிடமும் விசாரித்தார். இதில் பலரின் அப்சர்வேஷன் ஆச்சரியப்பட வைக்கும் வகையில் சிறப்பாக இருந்தது. கமல் தந்த உத்வேத்தின் பலனா என்று தெரியவில்லை. ஆனால் இதில் பல அபிப்ராயங்கள் விஷ்ணுவிற்கு எதிராக இருந்தன. அவற்றில் பெரும்பாலும் உண்மையும் இருந்தது.

விஷ்ணுவிற்கு எதிராக வந்து விழுந்த அபிப்ராயங்கள்

“நீங்கதானே சிறந்த அனலிஸ்ட். நீங்களே ஆரம்பியுங்க” என்று விஷ்ணுவைக் கோர்த்து விட்டார் கமல் “அய்யோ. சார்.. நீங்க வேற. நான் சும்மா.. வந்து .. ஹிஹி” என்று பம்மிய விஷ்ணு, பூர்த்தி செய்தவராக அர்ச்சனாவைச் சொன்னது அந்தர் பல்டி. இதற்கு பலத்த கைத்தட்டல் வந்தது. வழக்கம் போல் இதற்கு பரவசமான எக்ஸ்பிரஷனை தந்த அர்ச்சனா “இதெல்லாம் அனுபவிக்கறதா, வேண்டாமான்னு தெரியல. ஆனா இங்க இப்படிச் சொல்வாங்க. உள்ளே வேற மாதிரி சொல்வாங்க.” என்று விஷ்ணுவின் டபுள் ஸ்டான்டர்டை குத்திக் காட்டினார்.

‘பூர்த்தி செய்யாதவர்’ என்கிற கேட்டகிரியில் ‘விஜய்’ பெயரைச் சொன்ன விஷ்ணு “முன்ன வந்த வேகம் ரீஎன்ட்ரியில் இல்லை. சேலையில் முள்படாத மாதிரி ஜாக்கிரதையா நடந்துக்கிட்டார். சேஃப் கேம் ஆடினார்” என்று சொன்னது நல்ல அப்சர்வேஷன். “நடிப்பு ஒரு வரம்ன்னு சொல்லுவாங்க. ஆனா அது ஒரு வியாதியா கூட இருக்கலாம்” என்று ஆரம்பித்து கமல் தந்த பொழிப்புரை பிக் பாஸிற்கு பொருத்தமோ, இல்லையோ. நடிப்புத் துறையில் வர விரும்புபவர்களுக்கு உபயோகமாக இருக்கும். “நடிப்புல அப்படியே மூழ்கிடக்கூடாது. காமிரா கான்ஸியஸூம் ஒருபக்கம் இருக்கணும்” என்பதுதான் கமல் சொன்னதன் சுருக்கம்.

விஜய்

அடுத்து எழுந்த அர்ச்சனா, ‘பூர்த்தி செய்தவராக’ மாயாவின் பெயரைச் சொல்ல அதற்கும் பலத்த கைத்தட்டல். (மக்கள் ஒரே குழப்பறாங்களே?!) விஷ்ணுவிற்கு எப்படி நெகட்டிவ் பாயிண்ட்ஸ் கிடைத்ததோ, அதற்கு மாறாக மாயாவிற்கு பாசிட்டிவ்வான கமெண்ட்ஸ்கள் நிறைய கிடைத்தன. இந்தப் போக்கினால் ஆட்டத்தின் கிளைமாக்ஸ் மாறக்கூடும் என்கிற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கோபம், புறணி, ஸ்ட்ராட்டஜி என்பதிலேயே விஷ்ணு தேங்கி விட்டார். ஆனால் ஆட்டத்தை எவ்வாறு சுவாரசியமாக்கலாம் என்று ஒவ்வொரு கணமும் மாயா செய்த சிரத்தைக்கு இப்போது பாராட்டு கிடைக்கிறது. இதற்காக அவர் நிறைய அடி வாங்கியிருந்தாலும் இந்த முனைப்பு நிச்சயம் அங்கீகரிக்கப்பட வேண்டியதே.

அர்ச்சனாவைத் தொடர்ந்து விஜய், விசித்ரா, தினேஷ் ஆகியோரும் மாயாவிற்கு பிளஸ் பாயிண்ட்டை அளித்தார்கள். அர்ச்சனா மற்றும் விஜய்க்கு பிளஸ் பாயிண்ட்டை அளித்த மாயா “நேர்மையும் இல்லை. ஆர்டிஸ்ட்டிக்கா எதையும் செய்யலை. என்டர்டெயின்மென்ட்டும் இல்லை” என்று விஷ்ணு மீது பெரிய பாறாங்கல்லை தூக்கிப் போட்டார். தினேஷ் மற்றும் அர்ச்சனாவிற்கு பிளஸ் அளித்த மணி, விஷ்ணுவிற்கு மைனஸ் அளித்து சேம் சைட் கோல் போட்டார். தினேஷ் விஜய்க்கு மைனஸ் அளித்தார்.

கிளைமாக்ஸில் டிவிஸ்ட் இருக்குமா?

ஆக இந்த டாஸ்க்கைப் பொறுத்தவரை மாயாவின் பக்கம் ஆதரவு அதிகமாகியிருக்கிறது. விஷ்ணுவின் பக்கம் டேமேஜ் அதிகமாக ஆகியிருக்கிறது. இந்தப் போக்கு டைட்டில் விஷயத்தில் பிரதிபலிக்குமா? ஒருவேளை மாயா டைட்டில் வின்னர் ஆகக்கூடுமா? பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

“இன்னமும் ஒரு வாரம்தான் இருக்கு. Crucial period. ஆனா ஒரு வாரம் கூட மக்கள் கவனத்தைக் கவர்வதற்கு அவகாசம் உள்ள நேரம்தான். சரியாகப் பயன்படுத்திக்கங்க” என்கிற உபதேசத்துடன் கமல் விடைபெற்றார். முதல் ஃபைனலிஸ்ட் என்கிற கெத்துடன் சுற்றிக் கொண்டிருந்த விஷ்ணுவிற்கு இப்போது பலத்த பின்னடைவு. எனவே “மாயா பண்றதைத்தானே நானும் பண்றேன்” என்று மணியிடம் பாவமாக அனத்திக் கொண்டிருந்தார்.

அர்ச்சனா

தினேஷூம் மணியும் கூட தன் மீது மைனஸ் குத்துவார்கள் என்று அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார். “என்னைக் கூடத்தான் ரவீனா போனப்புறம் தொலைஞ்சு போயிட்டதா விசித்ரா சொன்னாங்க. பார்த்துக்கலாம். ஃப்ரீயா விடு” என்று ஆறுதல் சொன்னார் மணி. “சொன்னவங்கள்லாம் யாருன்னு பாரு” என்றார் தினேஷ். அர்ச்சனாவிற்கு கிடைத்த பலத்த கைத்தட்டல் விசித்ராவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. மைக் மாட்டாமல் அதைப் பற்றி மாயாவிடம் அவர் பேசிக் கொண்டிருக்க “மைக் மாட்டுங்க” என்று பிக் பாஸ் எச்சரித்தார். ஆனால் அதை விசித்ரா சட்டையே செய்யவில்லை. விசித்ராதான் இந்த வார எவிக்ஷன் என்று தெரிகிறது. இரண்டு எவிக்சன் இருக்குமா அல்லது மிட் வீக் எவிக்சன் இருக்குமா எனத் தெரியவில்லை.

அர்ச்சனாதான் டைட்டில் வின்னர் என்று உள்ளேயும் வெளியேயும் பரவலாக நம்பப்படும் சூழலில், இந்த ஒரு வாரத்திற்குள் ஏதேனும் மேஜிக் நடக்கலாம் என்று தோன்றுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

மிட் வீக் எவிக்சன் இருக்குமா? யாருக்கு செல்வாக்கு அதிகரித்திருக்கிறது என்பதைக் கமென்ட்டில் பதிவிடுங்கள்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.