பனை ஓலைகளால் செய்யப்பட்டஉணவு…

உணவே மருந்து கான்செப்டில் சமையல் செய்த சேலத்தை சேர்ந்த ஹைசர் ஜீஹைரா பனை ஓலைகளால் செய்யப்பட்ட பொருள்களில் தான் சமைத்ததை டிஸ்பிளே செய்திருக்கிறார்.

2 மணி நேரத்தில் 28 வகை உணவு…

கலைவாணி

வழங்கப்பட்ட இரண்டு மணி நேரத்தில் 28 வகை உணவுகளை செய்து அசத்தி இருக்கிறார் சென்னையைச் சேர்ந்த கலைவாணி. வாயுவிளாகம், கருஞ்சீரகம் ஓமம் குழம்பு, கற்றாழை குழம்பு, முடவாட்டுக் கிழங்கு குழம்பு, வெந்தயக்கீரைக் குழம்பு, ஆவாரம் பூ குழம்பு ஆகிய குழப்பு வகைகளை செய்து அசத்தியுள்ளார்.

மேலும், முருங்கைக்கீரைப் பொடி – இட்லிப்பொடி & சூப், வல்லாரைப் பொடி, முடவாட்டுக் கிழங்கு பொடி, பூனைக்காலி பொடி, கருவேப்பிலை பொடி ஆகிய பொடிவகைகளுடன்

மாப்பிள்ளை சம்பா அவல் புட்டு, நரிப்பயிறு கார அவல் கலவை, நாட்டு சுரக்காய் அவல் கலவை, பீட்ரூட் கார அவல், கருவேப்பிலை கார அவல், மூங்கில் அரிசி கீர், நரிபயிர் பாயாசம், தினை மூங்கில் அரிசி தேன் மாவு, பீட்ரூட் தேன் கலவை, சங்குப்பூ டீ, மூங்கில் அரிசி நரிப்பயிர் உருண்டை, கருவேப்பிலை சூப், முடவாட்டு கிழங்கு சூப், முருங்கைக்கீரை சூப், பிரண்டை சூப், வல்லாரை சூப் என வித விதமாக செய்து அரங்கையே அதிர வைத்துள்ளார்.

மதிப்பெண் போட ஆரம்பித்து விட்டார்…

போட்டியாளர்கள் சமையலை நிறைவுசெய்துவிட்ட நிலையில், செஃப் தீனா அவற்றை ருசி பார்த்து மதிப்பெண் வழங்கி வருகிறார்…

“சைவ உணவே நல்லது” – பல் மருத்துவர்..!

சைவ உணவுகள், உடலுக்கு மட்டுமில்லாமல் நம் பல்லுக்கும் நல்லது என பல ஆராய்ச்சிகள் வெளியாகியுள்ளன. என்னிடம் வரும் நோயாளிகளிடமும் அதை வலியுறுத்துகிறேன்” அறிவுரை தந்துக்கொண்டே சமைக்கிறார் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பல் மருத்துவர் முத்துல‌ஷ்மி.

கல்யாண விருந்தில் புடவையும் கொடுப்போம்…

கல்யாண விருந்துக்கு வருபவர்களுக்கு சாப்பாடோடு புடவை வைத்துக்கொடுப்பது நம் கலாசாரம் என்று கூறி உணவுடன் புடவையையும் டிஸ்பிளேவில் வைத்திருக்கிறார் மதுரையைச் சேர்ந்த முனா கலால்.

பொட்டலம் போடப் போறேன்…

“சமையல் சூப்பர் ஸ்டார் விருதை பொட்டலம் போடப் போறேன்” என்று காலிஃப்ளவரை வைத்து பொட்டலம் என்ற ரெசிபியை செய்து வருகிறார் வேலூரைச் சேர்ந்த அபிதா. பஞ்சாமிர்த கேக், பனீர் டெஸர்ட்டும் செய்து வருகிறார்.

நான் தான் சமையல் சூப்பர் ஸ்டார்…

“நான் தான் சமையல் சூப்பர் ஸ்டார் டைட்டில் வின்னர். ஆண்டவன் சொல்றான் இந்த வித்யா தேவி முடிக்கிறார்” கலகலக்கிறார் சென்னையைச் சேர்ந்த வித்யா தேவி. சக்கப்பழ பாயாசம், ஓலன், அரச்சுவிட்ட சாம்பார், எரிசேரி என கேரள திருமண விருந்தை சமைத்துக் கொண்டிருக்கிறார்.

இரண்டாம் கட்ட போட்டி தொடங்கி ஒரு மணி நேரம் கடந்த நிலையில், குக் வித் கோமாளி பாலா மற்றும் KPY விக்கி சிவா இருவரும் பரப்பாக சமைத்துக்கொண்டிருக்கும் போட்டியாளர்களிடம் காமெடியாகப் பேசி அந்த இடத்தை கலகலப்பாகி வருகின்றனர்.

ஆளி விதை சத்துமாவு உருண்டை…

Life is a Blessing coffee, Bliss balls என்று விதவிதமான பெயர்களுடன் கொண்டைக்கடலை மாவு காபி, சன்பிளவர் விதைகள், பூசணிவிதைகள், மற்றும் ஆளி விதை சத்துமாவு உருண்டை என பல சத்தான உணவுகளை சமைத்து அசத்தி வருகிறார் வேலூரைச் சேர்ந்த ஜனனி.

குஜராத் ஸ்பெஷல்வாங்கி ரசம்… 

“போட்டியின் நடுவரான தீனா சமீபத்தில் அவரது சேனலில் செய்து காட்டிய குஜராத் ஸ்பெஷலான வாங்கி ரசத்தை அதை அவர் சொன்னபடியே செய்து அவரிடமே கொடுக்கப்போகிறேன்” காஞ்சிபுரம் சாந்தி.

எல்லா கீரையும் சேர்த்து ஒரே சூப்..!

“படித்ததெல்லாம் சென்னையாக இருந்தாலும், நான் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவள். இந்தப் போட்டியில் கலந்துக் கொள்வதற்காக கேரளாத்திலிருந்து சென்னை வந்துள்ளேன். உணவே மருந்து கான்செப்ட் கொடுக்கப்பட்டுள்ளதால் அனைத்து கீரைகளையும் வைத்து ஒரு சூப், என்னுடைய சிக்னேச்சர் டிஷ் இத்தாலியன் ரிசோட்டோ மற்றும் தமிழகத்துப் ஸ்பெஷல் பொங்கல் என சத்தான உணவை சமைக்கப் போகிறேன்” – நிஷா

தாய்மார்களுக்கு மருந்துச் சோறு…

பிரசவித்த தாய்மார்களுக்கு கொடுக்கப்படும் மருந்துச் சோறு, குழம்பு மற்றும் கஞ்சி, மீன் உப்பானம், மிளகு தண்ணீர் ஆனம், செட்டிக்காயம் ஆகியவற்றை கமகமக்க சமைத்து வருகிறார் சேலத்தை சார்ந்த ஹைசர் ஜுஹைரா

உணவே மருந்து…

நெல்லிக்காய் பிரியாணி, குதிரைவாலி அன்னாசி அல்வா, துத்தி இலை மருந்து, வெட்டிவேர் நீர் மற்றும் இனிப்பு வெண்டைக்காய் என உணவே மருந்து கான்செப்டில் சமைத்து வருகிறார் காஞ்சிபுரத்தை சேர்ந்த குரு ரகுநாதன். “உணவே மருந்து கான்செப்ட் என்பதால் மிளகாய்த்தூள், கரம் மசாலா போன்ற மசாலாக்கள் இல்லாமல் சமைக்கிறேன்” என்கிறார்

விறுவிறுப்பான இறுதிச்சுற்று..!

இரண்டாம் கட்டமாக அடுத்த 33 போட்டியாளர்கள் சமையல் செய்து வருகின்றனர். போட்டியாளர்களில் 17 பேர் உணவே மருந்து என்ற கான்செப்டிலும், 16 பேர் கல்யாண விருந்து என்ற கான்செப்டிலும் சமையல் செய்து வருகின்றனர்.

முதல் கட்டம் நிறைவு; மதிப்பெண் வழங்கும் நடுவர்…

போட்டியின் முதல் கட்டம் முடிந்திருக்கும் நிலையில் நடுவர் தீனா போட்டியாளர்கள் சமைத்து காட்சிப்படுத்தியிருக்கும் உணவுகளை ருசி பார்த்து மதிப்பெண் வழங்கிக்கொண்டு வருகிறார்.

கல்யாண வீட்டு மறுவிருந்து…

கல்யாண வீட்டில் மறுவிருந்துக்குப் படைக்கும் உணவுகளைச் சமைத்து சிதம்பரம் ஸ்பெஷலான மருதாணி விதை காபி, தண்ணிச் சாறு போன்றவற்றை சமைத்து காட்சிப்படுத்தியுள்ளார் சிதம்பரத்தைச் சேர்ந்த சாந்தி.

மராத்திய மன்னருக்கு விருந்து…

மராத்திய மன்னருக்கு விருந்து…

மராத்திய மன்னர் காலத்து சமையலை செய்ததோடு மன்னருக்கு உணவு வழங்கப்படுவதைப்போலவே டிஸ்பிளே செய்து அசத்தியிருக்கிறார் திருச்சியைச் சேர்ந்த மருது பாண்டியன்.

எளிதில் செரிமானம் ஆகும்…

சம்பா ரவை இட்லி, நரிப்பயறு ஆப்பிள், இலுப்பைப்பூ சம்பா வெண்பொங்கல், கருங்குறுவை கஞ்சி என வித்தியாசமாக செய்து கலக்கி வருகிறார் சேலத்தைச் சேர்ந்த அக்குபஞ்சர் மருத்துவர் கோகிலா. “இந்த உணவு வகைகள் எல்லாம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது” என்று டிப்ஸும் வழங்கினார்.

சமைக்க பயம் இல்ல… ஆனா…

“எனக்கு சமைக்க பயமா இல்ல. ஃபுல்லா லேடீஸா இருக்காங்களா அதான் பயமா இருக்கு” – கோயமுத்தூரைச் சேர்ந்த இளங்கோவன்.

“மாமியார் பாராட்டிய சமையலை ஊரே பாராட்ட வைத்தது…”

“என் சமையலை என் மாமியார்தான் இதுவரை பாராட்டி இருக்கிறார். நானே சமைத்து என்னையே அவருக்கு ஊட்டிவிடச் சொல்லுவார். என் மாமியார் பாராட்டிய சமையலை ஊரே பாராட்ட வழிவகை செய்திருக்கிறது சமையல் சூப்பர் ஸ்டார்” – ராஜேஸ்வரி, திருச்சி.

நல்லாம்பட்டி சிக்கன் ஃப்ரைடு ரைஸ்…

“எங்க ஊரு ஸ்பெஷல் நல்லாம்பட்டி சிக்கன் ஃப்ரைடு ரைஸ். எந்த சாஸ் வகைகளும் பயன்படுத்தாமல் நறுமணப் பொருள்களை மட்டுமே கொண்டு செய்கிறேன்” கோவையைச் சேர்ந்த காவ்யா.

திருவாதிரை களி, மருந்துக் குழம்பு, முடக்கத்தான் ரசம்..

நடராஜருக்கு மார்கழி மாதத்தில் செய்யப்படும் திருவாதிரை களி, மருந்துக் குழம்பு, முடக்கத்தான் ரசம் என ஆரோக்கிய சமையலில் களம் கண்டுவருகிறார் கடலூரை சார்ந்த உஷா.

காய்கறிகளின் சத்து குறையாது…

செல்வராணி முத்துவேல்

“புளித்தண்ணீரில் காய்கறிகளை வேக வைத்தால் காய்கறிகளின் சத்து குறையாது” டிப்ஸ் கொடுத்துக்கொண்டே சமைத்து வருகிறார் திருநெல்வேலியைச் செல்வராணி முத்துவேல்..

புதுமாப்பிளைக்கான கல்யாண விருந்து…

ஃபரீனா

மன்னார்குடி பகுதியில் புதிதாகத் திருமணமான ஆணுக்கு கொடுக்கப்படும் ‘புதுமாப்பிளை கல்யாண விருந்து’ சமையலும், பாதாம் அல்வாவுடன் ஆம்பூர் மட்டன் பிரியாணியும் மணக்க மணக்க சமைத்து வருகிறார் ஃபரீனா

பாடலோடு உற்சாகமான சமையல் போட்டி…

‘அதோ அந்த பறவைப்போல வாழ வேண்டும்…’, ‘அடி என்னடி ராக்கமா..’ போன்ற பாடல்களை பாடிக் கொண்டே குதூகலமாக சமைத்து வருகின்றனர் போட்டியாளர்கள்.

சேரர்கள் அவையில் படைக்கப்பட்ட பெருஞ்சோறு…

‘சேரர்கள் அவையில் படைக்கப்பட்ட பெருஞ்சோறு’ எனப்படும் சங்ககால பிரியாணியை சிவப்பிறைச்சியைக் கொண்டும், நறுமணப்பொருள்களை வைத்தும் தயாரித்து வருகிறார் சேலத்தைச் சேர்ந்த நந்தினி.

எனக்கே தெரியாம என் கணவர்தான் ரிஜிஸ்டர் பண்ணாரு…

“சமையல் சூப்பர் ஸ்டார் போட்டிக்கு என் பெயரை ரிஜிஸ்டர் பண்ணதே எனக்குத் தெரியாது. என் கணவர்தான் எனக்கே தெரியாம ரிஜிஸ்டர் பண்ணாரு. இப்போ இறுதிப்போட்டி வர வந்திருக்கேன். சந்தோசமா இருக்கு!” – காஞ்சிபுரத்தைச் சேர்ந்த போட்டியாளர் கோமதி.

பாட்டி காலத்து ‘மருந்து குழம்பு’

சுண்டக்காயை வைத்து பாட்டி காலத்து ‘மருந்து குழம்பு’ செய்து வருகிறார் மதுரையை சேர்ந்த போட்டியாளர் உமையாள் வைரவன்.

சரபேந்திர மஹாராஜா காலத்து கல்யாண விருந்து இது..!

மருதுபாண்டியன்

“கடைசி மராத்திய மன்னரான சரபேந்திர மஹாராஜா காலத்தில் எழுதப்பட்ட ஓலைச்சுவடியில் குறிப்பிடப்பட்டுள்ள கல்யாண விருந்து உணவுகளை சமைத்து காட்சிபடுத்தவிருக்கிறேன்” என்று பரபரப்புடன் சமைத்து வருகிறார் திருச்சியை சேர்ந்த மருதுபாண்டியன்.

களத்தில் இறங்கிய போட்டியாளர்கள்…

சமையலுக்குத் தேவையான பொருள்களைத் தேர்வு செய்த நிலையில் சமையல் செய்வதற்காக போட்டியாளர்கள் களத்தில் இறங்கினார்கள்…

தெரியாத உணவை மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள்….

தெரியாத உணவை மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள். உற்சாகத்துடன் சமையுங்கள். வாழ்த்துகள்!” – இறுதிப் போட்டியாளர்களுக்கு செஃப் தீனா வாழ்த்து

காலை, மதியம்… 2 பிரிவுகளாக போட்டி..!

காலை, மதியம் என இரண்டு பிரிவுகளாக போட்டி நடைபெறுகிறது. காலையில் நடைபெறும் போட்டியில் 33 போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர். அவர்களில் 16 பேர் உணவே மருந்து என்ற கான்செப்டிலும் 17 பேர் கல்யாண விருந்து என்ற கான்செப்படிலும் சமையல் செய்யத் தொடங்கியுள்ளனர். சமையலுக்குத் தேவையான பொருள்கள், பாத்திரங்கள், அடுப்பு என அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சமையலுக்குத் தேவையான பொருள்களைத் தேர்வுசெய்வதற்காக போட்டியாளர்களுக்கு 30 நிமிடங்கள் வழங்கப்பட்டுள்ளது.

குக் வித் கோமாளி பாலா, KPY விக்கி சிவா மிமிக்கிரி…

தொடக்க நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி பாலா, KPY விக்கி சிவா ஆகியோரும் பங்கேற்றனர். போட்டியில் பங்கேற்பவர்களின் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் மிமிக்கிரி செய்து சந்தோஷப்படுத்தினர்.

இறுதிபோட்டியில் பங்கேற்ற 66 பேர்…

தமிழகம் முழுவதும் நடைபெற்ற முதற்சுற்று போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்ற 66 பேர் இறுதிபோட்டியில் பங்கேற்றுள்ளனர்.

இறுதிபோட்டியில் கல்யாண விருந்து அல்லது உணவே மருந்து ஆகிய 2 தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பில் போட்டியாளர்கள் சமைக்க வேண்டும்.

“8 கிலோ எடை கூடி விட்டேன்..” தொடக்க விழாவில் செஃப் தீனா

செஃப் தீனா

“அவள் விகடனின் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டியில் மூன்று மாதம் பயணித்ததால், உங்கள் வீட்டு சாப்பாட்டை சாப்பிட்டு நான் எட்டு கிலோ எடை அதிகரித்திருக்கிறேன். சமையல் என்பது பெண்களுக்கானது மட்டுமல்ல. ஆண்களும் இந்தப் போட்டியில் அதிக அளவில் கலந்து கொண்டுள்ளனர்”- தொடக்க விழாவில் செஃப் தீனா

இறுதிச்சுற்று சென்னையில் இனிதே தொடங்கியது…

தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் ‘அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார்’ போட்டி நடைபெற்று வந்தது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், இறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.

மாபெரும் இறுதிப்போட்டி, சென்னையில் இன்று (06/01/2024) காலை 10 மணியளவில் தொடங்கியது. போட்டியின் நடுவர் மற்றும் பிரபல சமையல் கலை வல்லுநர் ‘செஃப்’ தீனா, ‘வசந்த பவன்’ உணவகத்தின் எம்.டி-யான ஸ்வர்ணலதா ரவி, ‘இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்’ நிறுவனத்தின் முதல்வர் பிரமிளா ரஞ்சித், ‘அவள் விகடன்’ ஆசிரியர் ச.அறிவழகன் மற்றும் விகடன் குழுமத்தின் மார்க்கெட்டிங் பிரிவு துணைப் பொது மேலாளர் ஜான் ஜஸ்டின் உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி உரை நிகழ்த்த… நிகழ்ச்சி இனிதே தொடங்கியது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.