தி.மு.கவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் `கலைஞர் 100’ விழா தற்போது நடைபெற்று வருகிறது.

தமிழ்த் திரையுலகம் சார்பில் தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம் என அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து நடத்தும் இந்த பிரமாண்ட விழா சென்னையில் உள்ள கிண்டி ரேஸ் கோர்ஸ் திறந்தவெளி மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகப் பங்குபெறும் இவ்விழாவிற்குத் திரைப்பிரபலங்கள் எல்லோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று மாலை கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கிய இவ்விழாவிற்கு கமல்ஹாசன், ரஜினிகாந்த், கமல், சூர்யா, தனுஷ், நயன்தாரா உள்ளிட்டப் பலரும் வந்த வண்ணமிருக்கின்றனர்.

கலைஞர் 100 விருந்தினர்கள்

இயக்குநர் பா.இரஞ்சித், நடிகர் சத்யராஜ், இயக்குநர் பாரதிராஜா, பாக்யாராஜ், விஜயகாந்த், சந்தான பாரதி, நாசர், நடிகை சச்சு, பாடலாசிரியர் வைரமுத்து உள்ளிட்டோர் கலைஞரைப் பற்றிப் பேசியிருக்கும் 10 நிமிட ஆவணப்படம் இந்நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டது. இதை இயக்குநர் ஏ.எல்.விஜய் உருவாக்கியுள்ளார்.

இதையடுத்து இவ்விழாவில் கலைஞர் கருணாநிதி குறித்துப் பேசிய நடிகர் சூர்யா, “கலைஞர் அரசியலுக்கும், கலைக்கும் தன்னை அர்பணித்தக் காலத்தை ரொம்பவே முக்கியமாகப் பார்க்கிறேன். ‘பராசக்தி’ படத்தில் கை ரிக்சா இழுப்பவரைப் பற்றி ஒரு காட்சி இருக்கும். ‘நீ வேணா ஆட்சிக்கு வந்து இந்த முறையை ஒழியேன்னு’ சிவாஜி சாரைப் பார்த்து ஒரு கதாபாத்திரம் பேசும். அந்த வசனத்தை எழுதியது கலைஞர். சொன்ன மாதிரியே ஆட்சிக்கு வந்து கை ரிக்சா முறையை ஒழித்தார்.

கலைஞர் கருணாநிதி

சினிமா என்பது ஓர் ஆயுதம். அதை முறையாகப் பயன்படுத்தினால் நல்ல சமூக மாற்றங்களை உண்டாக்க முடியும் என்பதற்கு கலைஞர்தான் பெரிய உதாரணம். பெண்களுக்குச் சொத்துரிமை வாங்கிக் கொடுத்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்காக நிறைய நலத்திட்டங்களைச் செய்திருக்கிறார். தமிழ் சினிமாவின் பல ஆளுமைகள் நடித்த முதல் படத்துக்கு வசனம் எழுதியிருக்கிறார். 62 காலம் சினிமாவுடன் சேர்ந்துப் பயணித்தவர்.

இப்போவும் டிரெண்டிங்ல ‘பொறுத்தது போதும் பொங்கி எழு’ என்ற வசனம் இருக்கு. அரசியலில் பல மாற்றங்களை எடுத்துட்டு வந்திருக்கிறார். கலைஞருக்கும் அவரோட எழுதுகோலுக்கும் என்னுடைய மரியாதையைச் சமர்ப்பிக்கிறேன்” என்று புகழ்ந்துரைத்தார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.