பிரேமலதா விஜயகாந்த் விகடனில் கடந்த 2015 – ம் வருடம், தங்கள் திருமண நினைவுகள் மற்றும் குடும்பம் பற்றி பகிர்ந்துகொண்டார். நவம்பர் 3, 2016 அன்று அவள் விகடனில் பிரசுரமான அந்தக் கட்டுரையில் இருந்து விஜயகாந்தின் பெர்சனல் பக்கங்கள் இங்கே…

‘‘விஜய்காந்த் உடனான முதல் சந்திப்பு..?’’

‘‘பெரியவங்க பார்த்து செஞ்சுவெச்ச கல்யாணம். எங்க குடும்பத்துக்கும் சினிமாவுக்கும் தொடர்பே இல்ல. அப்பாவோட நண்பர் ஒருத்தர் கேப்டனுக்கு பொண்ணு பார்க்கிறதா எங்கப்பாகிட்ட சொல்லி, என்னைக் கேட்டார்கள்.

கேப்டனோட நண்பர்கள், உறவினர்கள் வந்து, என்னைப் பார்த்தார்கள். இறுதியா, கார்த்திகை மாதத்தின் ஒரு நாளில் கேப்டன் பெண் பார்க்க வர்றதா சொன்னாங்க. அப்போ அவர் சினிமாவில் உச்சத்தில் இருந்த ஹீரோ! ஒரு ஹீரோ என்னைப் பெண் பார்க்க வர்றாருன்னா, எனக்கும் எங்க வீட்டுல இருந்தவங்களுக்கும் எவ்வளவு பரவசமா இருந்திருக்கும்?!

வாசல்ல கார் வந்து நின்னது. கேப்டன் இறங்குறாரு. பார்த்தா… கறுப்பு வேஷ்டி, நெற்றியில் சந்தனம், கால்ல செருப்பில்லை. மாலை போட்டிருந்தாரு. அப்போ சபரிமலைக்கு தவறாம மாலை போடுறது கேப்டனோட வழக்கம் என்று கூறினார்கள். அவரோட எளிமையில் எல்லோரும் அசந்துட்டோம்.

Vijayakanth | விஜயகாந்த்

‘மொதமுறை பார்க்கும்போதே எனக்கு என் சொந்தத் தம்பி போல தோணிருச்சு’னு சிலிர்த்துட்டாங்க எங்கம்மா. காபி கொடுக்கச் சொன்னாங்க. எதுவும் பேசிக்கல. வீட்டுக்குப் போயி சொல்றேன்னு சொன்னாரு. அப்ப அவர் ரொம்ப பிஸி. ‘புலன்விசாரணை’ படத்துல நடிச்சுட்டு இருந்தாரு. என்னைப் பார்க்க பாம்பேவில் இருந்து வந்துட்டு, பார்த்த கையோட நாகர்கோவிலுக்கு ஷூட்டிங்குப் கிளம்பிட்டாரு. அரை மணி நேரத்துல, ‘பிடிச்சிருக்காம்!’னு தகவல் வந்துருச்சு.’’

‘‘திருமணத்தில் மறக்க முடியாத நிகழ்வுகள்..?’’

‘‘அன்றைய முதல்வர் கலைஞர் தலைமையில், ஐயா ஜி.கே.மூப்பனார் முன்னிலையில் மதுரை, ராஜா முத்தையா மஹாலில் கல்யாணம் நடந்தது. அங்கிருந்து தமுக்கம் மைதானம் வரை நாங்க ஜீப்பில் நின்னுட்டே போறோம்… எங்களுக்கு முன்னாடியும் பின்னாடியும் ரசிகர்கள் ஓட்டமும் நடையுமா வர்றாங்க. கண் பார்வைக்குத் தெரிஞ்ச வரைக்கும் மக்கள் வெள்ளம். திரண்ட கூட்டத்தைப் பார்த்து மகிழ்ச்சியா மிரண்டுட்டேன் நான். அந்த ஜனத்திரளுக்கு நடுவில்தான் எங்க கல்யாணம் நடந்தது. ரசிகர்கள்தான் எங்க திருமண விருந்தினர்கள். `இது ஒரு நடிகருக்கு வந்த கூட்டம் அல்ல, நாளைய தலைவராக வரப்போறவருக்கு வந்த கூட்டம்’னு அன்னிக்கே என் மனசில் பட்டது. இதை இப்போ சொன்னா மிகைனு தோணலாம்… ஆனா, அதுதான் உண்மை!’’

‘‘ஹீரோவின் ரியல் ஹீரோயின் ஆனதுக்கு அப்புறம் வாழ்க்கை பற்றி…”

‘‘நானும் அந்தக் கனவுகளோடதான் வந்தேன். ஆனா, அதுக்கு நேரெதிரா எந்த ஆடம்பரமும் இல்லாம இருந்தது வீடு. ஒரு ரூமில் இரண்டு கப்போர்டு இருந்துச்சு. ‘இதில் ஒண்ணை இனி நீ எடுத்துக்கோ’னு சொன்னார். அவரோட கப்போர்டைத் திறந்து பார்த்தா, நாலஞ்சு வேஷ்டி, சட்டைதான் இருந்துச்சு. எவ்ளோ பெரிய நிகழ்ச்சியா இருந்தாலும், கதர் வேஷ்டிதான் கட்டிட்டுப் போவார். அவர் போடும் கதர் சட்டை சலவைக்குப் போயிட்டு வரும்போது சில சமயம் ஓட்டை விழுந்துடும். ‘கிழிஞ்சாதான் கதருக்கு மரியாதை… இருக்கட்டும்’னு போட்டுட்டுக் கிளம்பிடுவார். சாப்பிடும்போது, டி.வி பார்க்கும்போது எல்லாம் தரையில்தான் உட்காருவார். கேப்டனோட அந்த எளிமைதான், எப்பவும் அவர்கிட்ட எனக்குப் பிடிச்ச விஷயம்! ஒரு விஷயம் தெரியுமா… அவரும் என்னை மாதிரியே ஸ்போர்ட்ஸ் பர்சன். பேஸிக்கலி அவர் ஒரு ஃபுட் பால் பிளேயர்!

கல்யாணமாகி ஏழு வருஷத்துக்கு அப்பறம், கேப்டன் அவருக்காக என்னைக் கதை கேட்கச் சொன்னார். அவர் போலீஸா நடிக்கும் எல்லா படங்களும் எனக்கு பிடிக்கும். `ரமணா’ படம் என்னை மிகப்பெரிய அளவில் பாதிச்ச படம்! இல்லத்தரசியா இருந்த என்னைக் கொஞ்சம் கொஞ்சமா நிர்வாகப் பொறுப்புகளுக்குப் பழக்கினது அவர்தான். அவர், ஓடா உழைக்கிறதைப் பார்க்கும்போது ஒரு மனைவியா வருத்தமாவும், ஒரு மனுஷியா ஆச்சர்யமாவும் இருக்கும். நேரம்தவறாமையில் கேப்டன் ரொம்பக் கவனமா இருப்பார். இன்னிக்கும் ஒரு நிகழ்ச்சிக்கு எந்த நேரத்துக்கு வர்றதா சொன்னோமோ, அந்த நேரத்துக்குத் தவறாமப் போயிடுவோம்.

தன்னோட ஒரு வயசுலயே அம்மாவை இழந்துட்டவர். எல்லாமே அப்பாதான் அவருக்கு. சாமியறையில முதல் கடவுளே அப்பாவும், அம்மாவும்தான்! பன்னிரண்டாவது படிச்சிருக்காரு. வெளியூர்களுக்குப் போகும்போதெல்லாம்… ‘இந்த ஸ்கூல்ல நான் படிச்சிருக்கேன்’னு ஸ்கூலைக் காட்டுவாரு. ஒரு டிகிரி வாங்கல என்ற வருத்தம் கேப்டனுக்கு உண்டு. அதனால பசங்களை நல்லா படிக்க வைக்கணும்னு சொல்லிட்டே இருப்பார்.

விஜயகாந்த், பிரேமலதா

மூத்தவன் விஜயபிரபாகரன், பி.ஆர்க்… சின்னவன் சண்முக பாண்டியன், விஷுவல் கம்யூனிகேஷன் படிச்சு முடிச்சுட்டாங்க. பசங்க லேட் நைட் சினிமாவுக்குப் போகக் கூடாது; பார்ட்டி, கிளப்புக்கு நோ. ரெண்டு விஷயத்தில் மட்டும் கண்டிப்பான அப்பா. கலாசாரத்தை மீறி எதுவும் நடக்கக்கூடாது அவருக்கு.’’

அன்பான கணவர், பொறுப்பான அப்பா… சினிமா மட்டுமல்ல… விஜயகாந்த்தின் பெர்சனல் பிம்பமும் பலருக்கும் பிடித்தமானது!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.