கவனிக்கப்படாமல் இருந்தவர்கள் கோடிகளை முற்றுகையிடுவதும், முன்னர் அணிகளால் போட்டிப் போட்டு வாங்கப்பட்டவர்களுக்கு தற்சமயம் பாராமுகம் காட்டப்படுவதும் இந்த ஆண்டும் ஒருங்கே நிகழ்ந்தது‌. இந்த வணிகத்தில் வென்றவர்கள் யார், கைகளைச் சுட்டுக் கொண்டவர்கள் யார், யார்?ஐ.பி.எல் மினி ஏலம் 2024 பற்றிய முழுமையான அலசல்.

காஸ்ட்லி கொள்முதல்:

ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக, 20 கோடி விலையை கம்மின்ஸ் எட்டிய சாதனைக்கு அற்ப ஆயுள்தான். அதையே மறக்கடிக்கும் அளவு ஸ்டார்க்குக்காக அணிகள் மோதிக் கொண்டன. விளைவு, 24.75 கோடிக்கு அவருக்கான மதிப்பு எகிற கே.கே.ஆர் இறுதியில் அவரை வாங்கியது. ஸ்டார் வீரர்தான் என்றாலும் இத்தனை கோடியை ஒரே வீரருக்காக செலவழிப்பது எப்போதுமே ஆபத்துதான். அதுவும் காயம் ஏற்படும் அச்சுறுத்தல் உள்ள வேகப்பந்து வீச்சாளர் மீது நம்பிக் கட்டும் பந்தயம் ‘ரிஸ்க்’ என்னும் இலவச இணைப்போடே எப்போதும் வரும்.

Pat Cummins

அடுத்த ஸ்டார்க் என கூறப்பட்டு வரும் பிக் பேஷ் லீக் புகழ் ஸ்பென்சர் ஜான்சனுக்காக குஜராத் விட்டு விளாசிய 10 கோடியுமே அதிர்ச்சி அல்ல எனினும் சற்றே ஆச்சரியம் ஊட்டியது. டெத் ஓவர்களில் பந்துவீச்சை பலப்படுத்தும் நோக்கில் ஜான்சனிடம் குஜராத் நகர்ந்திருக்கிறது. இருவருமே சிறந்த வீரர்கள்தான் என்பதில் சந்தேகத்துக்கு இடமில்லை என்றாலும் இந்த விலைக்கு ஈடானவர்களா என்பது விவாதத்திற்கு உரியதே!

ஜாக்பாட் கொள்முதல்:

மார்க்கெட் அதிகமுள்ள வீரர்களைக் குறைந்த விலையில் வாங்கும் அதிர்ஷ்டம் சில சமயம் அணிகளுக்குக் கிட்டும். மற்ற அணிகளின் தேவை, அவர்களது கையிருப்பு எனப் பல காரணிகள் இதனை நிர்ணயிக்கும். அவ்வகையில் சில அணிகள் இம்முறை ஜாக்பாட் அடித்தன.

* சர்வதேச தரமுள்ள, அதுவும் சமீபத்திய உலகக்கோப்பையில் தனிஆவர்த்தனம் நிகழ்த்திய ஜெரால்ட் கோட்ஸியை மும்பை இந்தியன்ஸ் ஐந்து கோடிக்கு வாங்கியது அவர்களது அதிர்ஷ்டமே. அல்ஜாரி ஜோசப்புக்காக 11.5 கோடியை செலவழிக்கத் தயாராக இருந்த, வேகப்பந்து வீச்சாளருக்கான தேவை அதிகமிருந்த ஆர்.சி.பி மோதத் துணிந்திருந்தால் அவரது மதிப்பு இன்னமும் எகிறியிருக்கும்.

Hasaranga

* 2022-ல் 10.7 கோடிக்கு ஆர்.சி.பியால் வாங்கப்பட்ட ஹசரங்கா, இம்முறை வெறும் 1.5 கோடிக்கு சன்ரைசர்ஸுக்குக் கிடைத்தார். அற்புதமான லெக் ஸ்பின்னர், டி20-ல் 140+ ஸ்ட்ரைக்ரேட்டோடு ரன்களைக் குவிப்பவர் என்ற வகையில் இது சன்ரைசர்ஸுக்கு ஏக லாபம்தான்.

* ரச்சின் ரவீந்திரா 1.8 கோடிக்கு சி.எஸ்.கே-வுக்குக் கிடைத்ததும் இதே பிரிவில்தான் சேரும். பேட்டிங்கைப் பலப்படுத்துவதோடு சேப்பாக்கத்தில் அவரது சுழல் கைவரிசையும் அவர்களுக்குக் கைகொடுக்கும். மற்ற அணிகள் தலையிட்டிருந்தால், இன்னமும் பல கோடிகள் அவருக்காக சி.எஸ்.கே செலவிட்டிருக்க வேண்டும்.

* தனது பழைய வீரர் ஷர்துல் தாக்கூரைத் திரும்ப தங்களோடு இணைத்துக் கொள்ள சி.எஸ்.கே நான்கு கோடிகளைக் கொடுத்திருந்தது. பந்தாலோ, பேட்டாலும் ஏதோ ஒரு கட்டத்தில் வியக்கத்தக்க சாதனைகளை நிகழ்த்தி அணியை வெல்ல வைப்பவர். இது ஒருசில போட்டிகளில் நடந்தால் கூட போதும் எனும் மனநிலையோடே சி.எஸ்.கேயும் எப்போதும் வீரர்களைக் கையாளும். அவ்வகையில் இது அவர்களுக்கு ஜாக்பாட்தான்.

* ஹாரி ப்ரூக்கினை வாங்கி டெல்லி கொள்ளை லாபம் சம்பாதித்துள்ளது. நான்கு கோடியிலான இந்த முதலீடு பலமடங்காக அவர்களுக்குத் திரும்பக் கிடைக்கும். ஃபெர்கூசன் வெறும் இரண்டு கோடிக்குக் கிடைத்ததும் ஆர்.சி.பியின் அதிர்ஷ்டம்தான். தற்போதும் பலமின்றி இருக்கும் அவர்களது வேகப்பந்துவீச்சு அவரும் இல்லையெனில் மொத்தமாகச் சரிந்திருக்கும்.

மிகச் சரியான கொள்முதல்:

செலவழிக்கப்பட்ட ஒவ்வொரு ரூபாய்க்கும் நியாயம் கற்பிக்கும்படியான சில மிகச் சரியான தேர்வுகளையும் அணிகள் செய்திருந்தன. அவற்றில் சில…

* 20.5 கோடி கொடுத்து கம்மின்ஸ் வாங்கப்பட்டது சற்றே கூடுதல் விலை எனத் தோன்றலாம். உண்மையில், அது சரியான பர்சேஸ்தான். அற்புதமான பௌலர், பின்ச் ஹிட்டர், அவரது கேப்டன்ஷிப் அனுபவமும் அணிக்கு உள்ளீடாகும் என பல வகையில் இது சன்ரைசர்ஸின் ஸ்மார்ட்டான மூவ்தான்.

* தனக்கான ஃபினிஷரை ஷாருக்கான் உருவத்தில் குஜராத் கண்டெடுத்திருந்தது. அவரது சமீபத்திய டொமெஸ்டிக் கிரிக்கெட் சற்றே சுணக்கத்தைச் சந்தித்திருந்தாலும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் மிகச்சிறந்த வீரர் என்பதால் இது சரியான தேர்வே.

Shahrukh Khan

* ஹோல்டர் இருந்த இடத்தை நிரப்ப வாங்கப்பட்டு இருந்தாலும் ரோவ்மன் பவலினைக் கையில் இருந்த 14 கோடியில் கிட்டத்தட்ட பாதியைச் செலவழித்து ராஜஸ்தான் ராயல்ஸ் வாங்கியது சரியா என்ற கேள்வி எழலாம். லோயர் ஆர்டர் பவர் ஹிட்டராக ஹெட்மயருக்குப் பின்பாக இறக்கப்படும் போது தாக்கத்தை ஏற்படுத்துபவர், ஒரு சில ஓவர்கள் பந்துவீச்சிலும் கைகொடுப்பார்.

* நியூசிலாந்து வீரர்களின் கூடாரமாக மாறிக் கொண்டுள்ள சி.எஸ்.கே டேரியல் மிட்சலை 14 கோடிக்கு வாங்கியிருந்தது. மொயின் அலிக்கு ரீப்ளேஸ்மெண்டாக போட்ட முதலுக்கு பன்மடங்கு பலனை அவரது பேட் மற்றும் பால் இரண்டுமே தர வல்லது. ஸ்பின் பந்துகளை எதிர்கொள்ளும் விதமும் அவரைத் தனித்துவமாக்குகிறது. அதேபோல், முஸ்தபிஜுர் ரஹ்மானை இரண்டு கோடிக்கு சி.எஸ்.கே வாங்கியதும் சரியான தேர்வுதான். கையைக் கடிக்காத அளவு பணத்தில் ஒரு ஓவர்சீஸ் இடக்கை வேகப்பந்துவீச்சாளர் என்பது எல்லா வகையிலும் சாதுர்யமான முடிவுதான்.

* சர்வதேச அறிமுகம் ஆகாத இந்திய வீரர் என்ற வகையில் சமீர் ரிஸ்வியை 8.4 கோடிக்கு சி.எஸ்.கே வாங்கியது பலருக்கும் ஆச்சரியமளித்தது. உத்தரப்பிரதேச டி20 லீக்கிலும், விஜய் ஹசாரே, சையத் முஸ்டாக் அலி தொடரிலும் அவரது செயல்பாடுகள் தான் காரணம். Right Handed ரெய்னாவாக அவர் சி.எஸ்.கேவுக்கு மாற வாய்ப்புள்ளது.

* ஹர்சல் படேலை 11.75 கோடிக்கு பஞ்சாப் வாங்கியது. சமீபத்திய சீசன்களில் அவர்களது பல வெற்றிகளை வேகப்பந்து வீச்சாளர்கள் சாத்தியப்படுத்தி இருந்தனர். அதனால்தான் அனுபவம் வாய்ந்த இந்திய வேகப்பந்து வீச்சு வீச்சாளராக அர்ஷ்தீப்போடு சேர்த்து இன்னமும் அதனைப் பலப்படுத்த ஹர்சல் படேலை பஞ்சாப் வாங்கியுள்ளது.

Harshal

* சுபம் துபே என்னும் புதுமுக வீரரை ராஜஸ்தான் 5.8 கோடிக்கு வாங்கியதும் புருவங்களை உயர்த்தியது. சமீபத்திய சயத் முஸ்டாக் அலி தொடரில் 187.28 ஸ்ட்ரைக்ரேட்டோடு ரன்களைக் குவித்திருந்த சுபம், ஒரு போட்டியில் இம்பேக்ட் பிளேரயாக உள்ளே வந்து, 20 பந்துகளில் 58 ரன்களை விளாசி விதர்பாவை வெல்ல வைத்திருந்தார். ஆக, துபேவை தற்செயலாக அல்ல, அப்போதிருந்தே திட்டமிட்டேதான் ராஜஸ்தான் வாங்கியுள்ளது. ஃபினிஷிங் ரோலைக் கனகச்சிதமாக செய்யும் இந்திய வீரர் என்பது அவரை உள்ளே இழுத்திருக்கிறது. நன்ரே பர்ஹரை அடிப்படை விலையில் ராஜஸ்தான் வாங்கியதும், பட்லருக்கு பேக்கப்பாக இருக்கட்டும் என வாங்கப்பட்ட டாம் கோலரும் சரியான தேர்வுகள்தான், அணிக்குச் சாதகமான முடிவுகள்தான்.

தவறவிடப்பட்ட கொள்முதல்:

அதிக விலைக்குப் போக மாட்டார்கள் என்பது தெரிந்தாலும் வாங்கப்படாமல் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்காத சில ‘Unsold Story’களும் நடந்தேறின.

* சர்ஃப்ராஸ் கானின் சமீபத்திய உள்ளூர் டி20 தரவுகள் அவருக்கு ஆதரவளிக்காததால் அணிகளும் ஏலத்தில் அவரை அண்டவில்லை. ஆனால் ஷாருக்கானுக்கு அடுத்தபடியாக எதிர்பார்க்கப்பட்ட இந்திய வீரரான கருண் நாயரும் எந்த அணியாலும் அடிப்படை விலை கொடுத்துக் கூட வாங்கப்படவில்லை.

* ஸ்பின்னர்களுக்கு வரவேற்பு இருக்கும் எனக் கருதப்பட்ட நிலையில் வேகப்பந்து வீச்சாளர்கள் கொண்டாடப்பட்ட அளவு, ஸ்பின்னர்கள் கவனம் ஈர்க்கவில்லை. ஆதில் ரஷித், ஷம்சி, முருகன் அஷ்வின் எனப் பலரும் வாங்கப்படவில்லை. அதேபோல் ஹ்ரித்திக் ஷோகீன் மற்றும் அகீல் ஹொசைனை அணிகள் வாங்க முன்வராததும் சற்றே வியப்பை ஏற்படுத்தியது.

சர்ஃபராஸ் கான்

* ஓப்பனிங்கை வலுவாக்கும் நோக்கில் கே.கே.ஆர் போன்ற அணிகள் காலின் முன்ரோவுக்காகப் போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. விக்கெட் கீப்பரான இங்கிலாந்தின் பில் சால்டுக்கும் அதே வரவேற்பு இருக்கும் என நம்பப்பட்டது. ஆனால் இருவரையுமே அணிகள் அடிப்படைத் தொகை கொடுத்துக்கூட வாங்க முற்படவில்லை.

ஸ்டீவ் ஸ்மித் வாங்கப்படாதது முன்கூட்டியே கணித்ததுதான். பல பிரபலப் பெயர்களும் அவரோடு இணைக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டன. ஆடம் மில்னே, கைல் ஜாமிசன், ஜேம்ஸ் நீசம், மேட் ஹென்ரி, ஓடியன் ஸ்மித், மைக்கேல் பிரேஸ்வெல், டைமல் மில்ஸ் ஆகியோர்களும் அணிகளைக் கவரவில்லை.

எல்லா அணிகளும் இருக்கின்ற பணத்தைக் கொண்டு முடிந்தளவு தங்களது பள்ளங்களை நிரப்பிக் கொள்ள முயன்றுள்ளன. குஜராத், சி.எஸ்.கே, மும்பை என ஒருசில அணிகளுக்கு அது சரியாகவும் முடிந்திருக்கிறது, பற்களற்ற ஃபாஸ்ட் பௌலிங்கை சரிசெய்ய முடியாமல் போய் கைகளைப் பிசைந்து கொண்டுள்ள ஆர்.சி.பி போல ஒருசில அணிகளுக்கு அது தவறாகவும் முடிந்துள்ளது.

IPL Auction 2024

நேரடி ஏலம் முடிந்துள்ள நிலையில், டிரேடிங் சாளரம் மறுபடியும் திறந்துள்ளது. அதன் வழியாக இன்னமும் சில ஆச்சரியமூட்டும் குதிரை பேரங்களும், ‘பரி’மாற்றங்களும் நிகழலாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.