டிசம்பர் 4-ம் தேதி மிக்ஜாம் புயலால் வந்த மழை, வடமாவட்டங்களை புரட்டிப் போட்ட நிலையில், தென் மாவட்டங்களை வெள்ளக்காடாக்கியிருக்கிறது டிசம்பர் 17, 18-ம் தேதி பெய்த பெருமழை. இருமழைகளுக்கு பிறகும் `இவ்வளவு மழைபெய்யுமென தெரியாது, அதிகனமழை பெய்யும் என்று மட்டுமே சொன்னார்கள்’ என இந்திய வானிலை ஆய்வு மையத்தின்மீது பழிபோட்டது தமிழ்நாடு அரசு. இந்திய வானிலை ஆய்வு மையம் மழையை சரியாக கணிக்க தவறியதா… உண்மை நிலவரமென்ன என்பது குறித்து விசாரித்தோம்.

ஸ்டாலின்

“இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புகள் துல்லியமாகவும், சரியான நேரத்திலும் கொடுக்கப்பட்டிருந்தால், எதிர்பாராத பாதிப்பு மற்றும் அதன் தீவிரத் தன்மை குறைக்கப்பட்டிருக்கும். ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டு வெள்ளப்பெருக்கு தொடங்குவதற்கு முன் குறுகிய கால இடைவெளியே இருந்தது” என்றார் அமைச்சர் மனோ தங்கராஜ்.

அதேபோல், “டிசம்பர் 17, 18-ம் தேதிகளில் கடுமையான மழைபெய்யும் என்பதைதான் வானிலை ஆய்வு மையம் சொன்னது. வானிலை ஆய்வு மையம் கணித்த மழை அளவை விடபல மடங்கு அதிகமாக பெய்தது” என்றார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின். கூடுதலாக தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனாவும் இதே கருத்தைதான் முன்மொழிந்திருக்கிறார்.

நம்மிடம் பேசிய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் சிலர், “டிசம்பர் 4-ம் தேதி சென்னையில் 45 செ.மீ வரை மழை பெய்தது. டிசம்பர் 18-ம் தேதி தென்மாவட்டங்களில் 100 செ.மீ வரை பெய்தது. ஆனால் மழைக்கு முன்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் சொன்னதென்னவோ `அதிகனமழை பெய்யும்’ என்றுதான். அதிகனமழை என்றால் 20 செ.மீக்கு மேல் என்றுபொருள். 20 செ.மீ மேல் மழைபொழிவு ஏற்பட்டால் அதனை அதிகனமழை எனக் குறிப்பிடுவதோடு முடித்துக் கொள்கிறது வானிலை ஆய்வு மையம்.

வானிலை ஆய்வு மையம்

அதுதான் பிரச்னையே. முன்பெல்லாம் அதிக பட்சமே 20 செ.மீ மழை பெய்தபோது இப்பிரச்னை ஏழவில்லை. இப்போது அளவு அதிகரிப்பதால் இதுபோன்ற பிரச்னைகள் உருவாகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் முறையான ஆய்வு செய்யக் கூடிய தொழில்நுட்பங்களை உருவாக்கவில்லை என்றால் வருங்காலங்களில் அது பெரும் பிரச்னையாக உருவெடுக்கும்” என்றனர்.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் செயல்பாடுகள் குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் வெற்றிச்செல்வனிடம் பேசினோம், “முதலில் தமிழ்நாடு முதலமைச்சரும், தலைமை செயலாளரும் சொல்வது உண்மைதான். இந்திய வானிலை ஆய்வு மையம் துல்லியமாக இவ்வளவு மழைபெய்யுமென சொல்வதில்லை. அதிகபட்சமே 20 செ.மீ-க்கு மேல் மழைபெய்யும் என்றே சொல்கிறார்கள்.

அதனையே வழிமுறையாக கொண்டிருக்கிறார்கள். அதனை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. மேலும் இந்தியாவுக்கென வானிலையை துல்லியமாக கணிக்கும் க்ளைமெட் மாடல் கிடையாது. பிரிட்டன், ஐரோப்பியம் மற்றும் ஐஸ்ரோ தரும் தகவல்களை வைத்து ஆராய்ந்துதான் வானிலையை கணிக்கிறார்கள். க்ளைமெட் மாடல் சுயமாக உருவாக்க பல ஆண்டுகளுக்கான டேட்டா தேவைப்படும்.

வெற்றிச்செல்வன்

காலநிலை மாற்றம் குறித்து பல ஆண்டுகளாக உலக அமைப்புகள் பேசுகிறபோதும் மத்திய அரசு இன்னமும் பழைய நடைமுறைகளை கையில் வைத்திருப்பது சரியல்ல. வானிலையை கணிப்பதை தமிழ்நாடு அரசும் முன்னெடுக்கலாம். கர்நாடகாவில் அதற்காக முயற்சிகள் செய்யப்பட்டிருக்கின்றன. மத்திய அரசு க்ளைமெட் மாடலை உருவாக்கினாலோ, தமிழ்நாடு அரசு அந்த முன்னெடுப்பை மேற்கொண்டாலோ மிகத் துல்லியமாக இவ்வளவு மழை என சொல்ல முடியாது. 90 செ.மீ பெயப்போகிறதென்றால், 60-க்கு மேல் இருக்கலாம் என்றாவது கணித்துவிட முடியும். என்னை பொறுத்தவரை இருபெரு மழைகள் குறித்து முன்னறிவிப்பு செய்வதில் பெயிலர் ஆகியுள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்” என்றார்.

தனியார் வானிலை ஆய்வாளர்கள் எப்படி சரியாக கணிக்கிறார்கள் எனக் கேட்டப்போது, “அவர்களும் பிரிட்டன், யூரோப் உள்ளிட்ட மாடல்களை ஆராய்ந்துதான் சொல்கிறார்கள். வாய்ப்புகளின் அடிப்படையில் சொல்கிறார்கள். அது பல நேரங்களில் சரியாக இருக்கிறது. இதில் வானிலை ஆய்வு மையத்துக்கு இருக்கும் பிரச்னை என்னவெனில் உறுதியாத விஷயத்தில் அவர்களால் அறிவிக்க முடியாது. அவர்களிடமுள்ள உறுதியான தகவல் 20 செ.மீ மேல் மழைபெய்யும் என்பதுதான்.” என்றார்.

வெண்ணிலா தாயுமானவன்

நம்மிடம் பேசிய நா.த.க சுற்றுசூழல் பாசறை ஒருங்கிணைப்பாளர் வெண்ணிலா தாயுமானவன், “இந்திய வானிலை ஆய்வு மையம், மழையின் அளவை துல்லியமாக கணிக்க தவறியிருக்கிறது என்பதை மறுக்கவில்லை. ஆனால் தி.மு,க அரசு இதனை காரணம்காட்டி பேரிடரை அலட்சியமாக கையாண்டதை மறைக்க பார்க்கிறதோ என்ற சந்தேகம் உள்ளது.

காலநிலை மாற்றங்கள் குறித்தும் எல்-நினோ குறித்தும் பல்வேறு அமைப்புகள் பேசிவருகின்றன. எல்-நினோ ஆண்டுகளில் பேரிடர்கள் வருமென தெரிந்தும் நீர்நிலைகளைப் பராமரிக்காமல் விட்டது தமிழக அரசினுடைய தப்புதான். பெருமழை வருமென்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தும் மக்களை மீட்கும் உபகரணங்களை தயாராக வைக்காமால், குடிநீர், உணவு, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு கூட மக்களை திண்டாட வைத்ததெல்லாம் அரசின் பெருந்தோல்வி.

இவ்வளவு பேசுகிற தி.மு.க அரசு மாநிலத்துக்கென மழையை கணிக்கும் தொழில்நுட்பங்களை எத்தணை பேரிடர்கள் வந்தாலும் தயார் செய்யாமல் இருப்பது ஏன்?” என காட்டமாக வினவுகிறார்.

நெல்லை | மழை

நம்மிடம் பேசிய சூழலியல் நிபுணர்கள், “நிலவில் கால் பதித்துவிட்டோம் என பெருமையுடன் பேசுகிறார் பிரதமர் மோடி, ஒருநாள் மழையை கணிக்க முடியாத லட்சணத்தில்தான் வானிலை ஆய்வு மையங்கள் இருக்கின்றன. 90 செ.மீ மழை பெய்தாலும் 20 செ.மீக்கு மேல் மழை பெய்யும் என அறிவிப்பு செய்வது மக்களின் உயிருடன் விளையாடுவதாக இருக்கிறது. மத்திய அரசு மிக விரைவாக மழையை துல்லியமாக கணிக்க பிற நாடுகளுடன் ஒப்பந்தம் செய்தாவது உரிய முன்னறிப்புகளை செய்திட வேண்டும்” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.