வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா பகுதியிலுள்ள அருள்மிகு அரங்கநாயகி உடனுறை ஸ்ரீ உத்திர ரங்கநாத சுவாமி திருக்கோயில், ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது. அதாவது, விக்கிரம சோழனுக்கு முந்தைய ஆட்சியாளர்களால் கட்டப்பட்டதாகக் கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றன.

ஒவ்வோர் ஆண்டும், வைகுண்ட ஏகாதசி தினத்தில், இத்திருத்தலத்தில் ‘சொர்க்க வாசல்’ சேவைச் சிறப்பாக நடைபெறும். ‘கோவிந்தா… கோவிந்தா’ என்று முழக்கமிட்டு தரிசிக்க வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மங்கள வாத்தியம் முழங்க அருள்பாலிப்பார் ரங்கநாதர். அந்த அற்புத காட்சிகளைக் காண ஆயிரமாயிரம் கண்கள் போதாது.

ஸ்ரீ உத்திர ரங்கநாத சுவாமி திருக்கோயில்

இந்த நிலையில், கும்பாபிஷேகத் திருப்பணிகள் காரணமாக இந்த ஆண்டு சொர்க்கவாசல் சேவை கிடையாது எனக் கோயில் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து, கோயில் செயல் அலுவலர் நரசிம்ம மூர்த்தி வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், ‘‘ஒவ்வோர் ஆண்டும் வைகுண்ட ஏகாதசியன்று, அதிகாலை 4.30 மணிக்கு உற்சவர் ரங்கநாத பெருமாள் கருட வாகனத்தில் ராஜகோபுரக் கதவுகளுக்கு முன்பு எழுந்தருளுவார்.

தொடர்ந்து, காலை 5 மணிக்குப் பரமபத வாசலாகக் கருதப்படும் ராஜகோபுர வாசல் திறந்ததும், பெருமாள் கருட வாகன சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதையடுத்து, மூலவர் ரங்கநாதர் மற்றும் அரங்க நாயகித் தாயாரை முத்தங்கி சேவையில் பக்தர்கள் தரிசனம் செய்து மகிழ்வார்கள். இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில், கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்குத் திட்டமிட்டு, ராஜகோபுரத் திருப்பணிக்காக கடந்த செப்டம்பர் 3-ம் தேதியன்றே பாலாலயம் நடைபெற்றது.

ஸ்ரீ உத்திர ரங்கநாதர்

தொடர்ந்து, உபயதாரர்கள் மூலம் ராஜகோபுர திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, வரும் 23-ம் தேதி வைகுண்ட ஏகாதசி தினத்தில், சொர்க்க வாசல் திறப்பு மற்றும் கருட சேவை நடைபெற இயலாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. அதே நேரம், அன்றைய தினத்தில் காலை 5 மணி முதல் மூலவர் ரங்கநாதர் மற்றும் அரங்க நாயகித் தாயாரை முத்தங்கி சேவையில், பக்தர்கள் தரிசனம் செய்யலாம். அதோடு, உற்சவர் ரங்கநாத பெருமாள் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி தாயார்களுடன் கண்ணாடி அறையில் காட்சித் தருவார்’’ எனத் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.