குமரி அருகே வங்கக் கடலில் ஏற்பட்டிருக்கும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகத் தென் மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இரண்டு நாள்களாக ரெட் அலர்ட் நீடிக்கிறது. இந்த கனமழை காரணமாக, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால், ரயில் பாதைகள் தண்ணீரில் மூழ்கியிருக்கின்றன.

திருநெல்வேலி

குறிப்பாக, தூத்துக்குடி ரயில் நிலையம் ஒன்றில் வெள்ள நீர் புகுந்ததால், சுமார் 800 -1,000 பயணிகள் ரயில் நிலையத்திலேயே சிக்கிக்கொண்டனர். இந்த நிலையில், ரயில் நிலையத்தில் சிக்கிக்கொண்ட பயணிகள் குறித்தும், அவர்களை மீட்பது குறித்தும் மதுரை ரயில்வே கோட்டம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

அந்த அறிக்கையில், `திருநெல்வேலி – தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் ரயில் பாதைகளில் சரளை கற்களை வெள்ள நீர் அடித்துச் சென்றுள்ளது. அதனால் ரயில் போக்குவரத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தாழையூத்து – கங்கைகொண்டான் ரயில் பிரிவில் 7.71 கி.மீ தூர ரயில் பாதை வெள்ள நீரால் பாதிக்கப்பட்டுள்ளது. மண்ணரிப்பு மற்றும் சரளை கற்கள் முழுவதுமாக அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

நைனார்குளம் நிரம்பி வழிவதால் திருநெல்வேலி ரயில் நிலையம் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. அதிக மழை காரணமாகத் தூத்துக்குடி ரயில் நிலையத்தில் ரயில் பாதைக்கு மேல் ஒரு மீட்டர் அளவிற்கு வெள்ள நீர் தேங்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில், தட்டப்பாறை – மீளவிட்டான் ரயில் நிலையங்களுக்கிடையே 7.47 கி.மீ தூர பாதையிலுள்ள ஒன்பது நீர்வழிப் பாலங்களில் அபாயகர அளவில் வெள்ள நீர் சென்று கொண்டிருக்கிறது. செய்துங்கநல்லூர் – ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையங்கள் இடையே 12.16 கி.மீ தூரத்துக்குப் பாதையில் சரளை கற்கள் வெள்ள நீரால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

மழை நின்று வெள்ள நீர் குறைந்தவுடன் சீரமைப்பு பணிகள் தொடங்க உள்ளது. இதற்காக ரயில்வே பொறியியல் பிரிவு, தேவையான ஊழியர்கள் மற்றும் உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்கிறது. ஸ்ரீ வைகுண்டம் – செய்துங்கநல்லூர் ரயில் பாதையில் திடீர் பாதிப்பு ஏற்பட்டதால், பாதுகாப்பு காரணங்களுக்காக ஸ்ரீ வைகுண்டம் ரயில் நிலையத்தில் நேற்று இரவு நிறுத்தப்பட்ட ரயிலில் 800 பயணிகள் இருந்த நிலையில், மாநில அரசு அதிகாரிகள் உதவியுடன் இன்று அதிகாலை 300 பயணிகள் மீட்கப்பட்டு 4 பேருந்துகள், 2 வேன்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு அருகிலுள்ள பள்ளியில் பாதுகாப்பாகத் தங்கவைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி

வழியிலுள்ள சாலையில் உடைப்பு ஏற்பட்டதால் மீதமுள்ள 500 பயணிகளை மீட்க இயலாமல் போனது. உடனடியாக தூத்துக்குடியிலிருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழு அனுப்பி வைக்கப்பட்டது. அந்தக் குழுவும் சாலையில் ஏற்பட்ட பல்வேறு உடைப்புகள் காரணமாக ஸ்ரீ வைகுண்டம் ரயில் நிலையம் சென்று சேர முடியவில்லை. ரயில்வே நிர்வாகத்தின் தொடர் வேண்டுகோளுக்கிணங்க மீட்புப் பணிகளுக்குச் செல்ல தயாராக இருந்த தேசிய, மாநில பேரிடர் மீட்புக் குழுக்கள், அதிக மழை, வெள்ளம் காரணமாக ஸ்ரீ வைகுண்டம் ரயில் நிலையம் சென்று சேர முடியவில்லை.

தூத்துக்குடி

மாநில அரசு அதிகாரிகள் மற்றும் போலீஸ் உதவியுடன் பள்ளியில் தங்கவைக்கப்பட்ட 300 பயணிகளுக்கு உணவு மற்றும் குடிநீர் போன்ற தேவையான பொருள்கள் வழங்கப்பட்டன. ரயிலில் சிக்கியுள்ள 500 பயணிகளுக்குச் சாலை மார்க்கமாக உணவு கொடுக்க வழியில்லாத காரணத்தால், ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொருள்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காகத் தேவையான 2 டன் நிவாரணப் பொருள்களுடன் ஹெலிகாப்டர் சூலூரிலிருந்து ஸ்ரீ வைகுண்டத்துக்குப் புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. நாளை காலை அனைவரும் மீட்கப்பட்டு பத்திரமாக அனுப்பப்படுவார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.