டிசம்பர் 17, கோவை பீளமேடு பகுதியில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள சி.எஸ்.கே கிரிக்கெட் அகாடமியின் திறப்பு விழாவில் சென்னை அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு கலந்து கொண்டார்.

முன்னதாக இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவிலும் தமிழகத்தில் திருச்சி, சென்னை, திருநெல்வேலி ஆகிய நகரங்களிலும் சி.எஸ்.கே அகாடமி செயல்பட்டு வந்த நிலையில் தற்போது புதிதாக கோயம்புத்தூர் மாவட்டம் பீளமேடு பகுதியிலும் தொடங்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சி.எஸ்.கே அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவரிடம் கேட்கப்பட்ட சில கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் இங்கே…

அம்பத்தி ராயுடு

ஐபிஎல் போட்டியிலிருந்து நீங்கள் ஓய்வு பெற்றுவிட்டீர்கள். சி.எஸ்.கே அணியை மிஸ் பண்ணுவீர்களா?

“ஐபிஎல்-ஐ பொறுத்தவரை சி.எஸ்.கே சிறப்பான அணி. இதுவரை சி.எஸ்.கே அணிக்காக விளையாடி வந்த நான் இனி சி.எஸ்.கே-வின் ஆட்டத்தைத் தொலைக்காட்சியில்தான் பார்க்க வேண்டியிருக்கும் என்பது மனதிற்குச் சற்று வேதனை அளிக்கிறது. நிச்சயமாக சி.எஸ்.கே அணியை ரொம்ப மிஸ் பண்ணுவேன்.”

எம்.எஸ்.தோனியுடன் நிறைய போட்டிகள் விளையாடியுள்ளீர்கள். அவரைப் பற்றிச் சில வார்த்தைகள்…

“கிரிக்கெட் வரலாற்றில் தோனி ஒரு மிகச் சிறந்த வீரர். மைதானத்தில் அவரது பேட்டிங்கும் விக்கெட் கீப்பிங்கும் மிகச் சிறப்பாக இருக்கும். தோனி ஒரு தலைசிறந்த கேப்டனாக சரி தவறுகளைச் சுட்டிக்காட்டி இளம் வீரர்களின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுவார். இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு தோனி சி.எஸ்.கே அணிக்காக விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.”

தோனி, அம்பத்தி ராயுடு

தோனியின் ஓய்வுக்குப் பிறகு அவரது ஃபினிசர் இடத்தை நிரப்பத் தகுதியுள்ள வீரர் யார் என்று நினைக்கிறீர்கள்?

“சி.எஸ்.கே அணியின் சிறந்த ஃபினிஷர் தல தோனிதான். வேறு எந்த வீரரும் தோனிக்கு மாற்றாய் வர இயலாது.”

போட்டியின் முக்கியமான நேரங்களில் வரும் மன அழுத்தத்தை நீங்கள் எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள்?

“போட்டியின் முக்கியமான நேரங்களில் நான் எந்த வித மன அழுத்தத்திற்கும் ஆளாவதில்லை. அதற்குக் காரணம் எந்தச் சூழலையும் மிகவும் எளிமையாக அணுகுவது தான் (Keep Things Simple). அந்தச் சூழலைப் பெரிதாகப் பார்க்காமல் சாதாரண ஒன்றாகப் பார்க்கும் போது நிச்சயம் எந்த அழுத்தத்தையும் எளிதாகக் கையாளலாம்.”

தோனி

தோனிக்குப் பிறகு சி.எஸ்.கே அணியின் கேப்டனாக நீங்கள் யாரை எதிர்பார்க்கிறீர்கள்?

“தோனி ஐபிஎல்-லில் இருந்து விலகும் பட்சத்தில் அடுத்த ஏழு, எட்டு ஆண்டுகளுக்கு அணியைச் சிறப்பாக வழிநடத்திச் செல்லும் வகையில் இளம் வீரர்கள் யாரேனும் சி.எஸ்.கே அணியின் கேப்டனாக வேண்டும். அதன் அடிப்படையில் ருதுராஜ் சி.எஸ்.கே அணியின் கேப்டனாக வந்தால் சிறப்பாக இருக்கும்.”

2013-ம் ஆண்டிலிருந்து இன்று வரை இந்தியா ஐசிசி கோப்பையைக் கைப்பற்ற முடியவில்லை. எதிர்காலத்தில் யார் யார் கீ பிளேயராக இருந்தால் இந்தியா கோப்பையை வெல்ல முடியும்? 

கோவையில் சி.எஸ்.கே அகாடமியின் திறப்பு விழா

“அது வருந்தத்தக்க ஒன்றுதான். அண்மையில், ஆசிய விளையாட்டுகளில் இந்தியா தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. அந்த அணி மிகச் சிறப்பாகச் செயல்பட்டது. அனைத்து வீரர்களும் கடுமையாகப் போராடி தங்கம் வென்றனர். எதிர்காலத்தில் அந்த அணி ஐசிசி கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது. குறிப்பாக ருதுராஜ் முக்கிய பங்குவகிப்பார் என நினைக்கிறேன்.”

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.