பீகார் மாநிலம், கோபால்கஞ்ச் மாவட்டத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு காணாமல்போன கோயில் பூசாரி ஒருவர், துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டு, பிறப்புறுப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து வெளியான தகவலின்படி, பிணமாக மீட்கப்பட்ட பூசாரியின் பெயர் மனோஜ் குமார். பா.ஜ.க-வைச் சேர்ந்த முன்னாள் டிவிஷனல் தலைவர் அசோக் குமார் ஷா-வின் சகோதரரான மனோஜ் குமார், டானாபூர் கிராமத்திலுள்ள சிவன் கோயில் பூசாரியாக இருந்திருக்கிறார்.

கொலை

இப்படியிருக்க, கடந்த 6 நாள்களுக்கு முன்பு வீட்டிலிருந்து கிளம்பி கோயிலுக்குச் சென்ற மனோஜ் குமார், கோயில் வேலை முடித்துவிட்டு வெளியே கிளம்பினார். அந்த சமயத்தில், அவரின் சகோதரர் அசோக் குமாரும் கோயிலில்தான் இருந்திருக்கிறார். இருப்பினும், மனோஜ் குமார் வீட்டுக்குத் திரும்ப வரவே இல்லை. அவரின் குடும்பத்தினரும் அவர் எங்காவது சென்றிருப்பார், சீக்கிரம் வந்துவிடுவார் என்றே எண்ணியிருக்கின்றனர்.

இந்த நிலையில், நேற்றைய தினம் கிராமத்தின் சாலையோரம் முட்புதர் ஒன்றில், துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டு, கண்கள் பிடுங்கப்பட்டு, பிறப்புறுப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் மனோஜ் குமார் பிணமாகக் கிடந்திருக்கிறார். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்தபோது, உள்ளூர் மக்களும் அங்கு வந்து, போலீஸார் அலட்சியமாக இருந்ததாகக் குற்றம்சாட்ட ஆரம்பித்தனர். அதோடு, போலீஸார் வந்த வாகனத்தையும் பொதுமக்கள் தீ வைத்துக் கொளுத்திவிட்டனர். இதனால் அந்த இடத்தில் பதற்றம் நிலவவே, போலீஸாரும் நிலைமையைச் சமாளிக்க வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

போலீஸ்

பின்னர், கோபால்கஞ்ச் சதார் சப்-டிவிசனல் போலீஸ் அதிகாரி (SDPO) பிரஞ்சால், சம்பவ இடத்துக்கு வந்து உள்ளூர் மக்களைச் சமாதானப்படுத்தினார். அதைத் தொடர்ந்து, கிராமத்தில் தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், இந்த விவகாரத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரஞ்சால் தெரிவித்தார். மேலும், மனோஜ் குமாரின் சகோதரர் அசோக் குமார், “மாவட்ட நிர்வாகத்தைச் சேர்ந்த சிலர் வந்து, விரைவில் விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்தனர். இருப்பினும், ஆறு நாள்களுக்குப் பிறகு, என் சகோதரனின் சடலம் எப்படி இங்கு வந்தது, கொலை எப்படி, ஏன் நடந்தது என்று எங்களுக்கு எதுவும் தெரியவில்லை” என்று கூறினார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.