போர்க் காலத்தின்போது ஒரு நாட்டுக்கு ராணுவம் அவசியம் என்பதைப்போல, பத்திரிகையாளர்களும் அவசியமானவர்களே. காரணம், போரில் அரங்கேறுகின்ற கொடூரங்களை வெளிச்சத்துக்கு கொண்டுவருவது இவர்களே. அவ்வாறு இல்லையென்றால், பாலஸ்தீனத்தின்மீது ஒரு மாதத்துக்கும் மேலாக இஸ்ரேல் நடத்திவரும் கொடூர தாக்குதல்கள் வெளியே தெரியவந்திருக்காது. ஆனால், தற்போது இஸ்ரேல் நடத்திவரும் இந்தப் போரில் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு குறித்து அவ்வப்போது கேள்விகள் எழுகின்றன.

இஸ்ரேல்-ஹமாஸ் போர்

கடந்த சில நாள்களுக்கு முன்புகூட, காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், தனது வீடு முற்றிலுமாக அழிந்ததாகவும், அதில் தன்னுடைய தாய், தந்தை, இரண்டு சகோதரிகள், சகோதரன் ஆகியோர் இறந்துவிட்டதாகவும், காஸாவைச் சேர்ந்த சாலிஹ் அல்-ஜஃபாராவி என்ற சுயாதீன பத்திரிகையாளர் சமூக வலைதளத்தில் உருக்கமாகப் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் அல் ஜஸீரா (Al Jazeera) ஊடகத்தின், காஸா பத்திரிகையாளர் அனஸ் அல்-ஷரீப் (Anas al-Sharif) என்பவர், காஸாவில் பத்திரிகையாளர்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடப்பதாகவும், அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து, சமூக வலைதளத்தில் அனஸ் அல்-ஷரீப், “தொடர்ச்சியாகப் பத்திரிகையாளர்களையே குறிவைத்துத் தாக்குகின்றனர். இது எங்களுக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கிறது. ஆக்கிரமிக்கப்பாளர்களின் குற்றங்களை நாங்கள் வெளியிடுவதை அவர்கள் வெறுக்கின்றனர். இதற்காக, என்னையும் என்னுடைய குடும்பத்தினரையும் குறிவைக்கின்றனர். என்னுடைய தந்தையைக் கொன்றேவிட்டனர். இதனால் நான் நின்றுவிடப் போவதுமில்லை. ஜபாலியா அகதிகள் முகாமிலும், வடக்கு காஸாவிலும் தொடர்ந்து செய்திகளைச் சேகரித்துக் கொண்டே இருப்பேன்” எனப் பதிவிட்டிருக்கிறார். இந்தப் பதிவில் இஸ்ரேலை நேரடியாக குறிப்பிடவில்லை என்றாலும் காஸாவில் நடைபெறும் தாக்குதல் என்று இஸ்ரேலை மறைமுகமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

காஸா பத்திரிகையாளர் அனஸ் அல்-ஷரீப்

கடந்த நவம்பர் மாதம் பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக் குழு (The Committee to Protect Journalists ) வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தப் போர் தொடங்கப்பட்டு ஒரு மாதத்துக்குள் காஸாவைச் சேர்ந்த 39 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். போரில், பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்களைக் குறிவைத்துத் தாக்குவதென்பது சர்வதேச மனிதாபிமான சட்டத்தின்படி போர்க் குற்றமாகக் கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.