சமீபத்தில், சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள மாநகராட்சி திடலில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில், மகளிர் இலக்கிய அரங்கத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர் ஆண்டாள் பிரியதர்சினி. ‘இலக்கியப் பரப்பில் பெண்ணின் மொழி’ என்கிற தலைப்பில் அவர் உரையாற்றினார்.

“இலக்கியப் பரப்பு மற்றும் பெண்ணின் மொழி என்பதை முரண் தொகையாக நான் பார்க்கிறேன். இலக்கியப் பரப்பிலே காலம்காலமாகப் பெண்ணுக்கு மொழி கிடையாது என்று சொல்லப்பட்டது. மௌனம்தான் அவளின் மொழி. அவளுடைய அதிகபட்சமான மொழியே ‘ம்’ மட்டும்தான். பெண் என்பவள் மௌனத்தின் குறியீடு மட்டும்தான். சிந்தனைக் குறியீடு மொழியின் குறியீடுகூட இல்லை என்று சொல்லப்பட்டது. மொழி பெண்ணுக்குக் கிடையாது என்று சொல்லப்பட்டது. ‘அ’ ணா, ‘ஆ’வணா ஆணுக்கு மட்டும்தான் சொந்தமா?

ஆண்டாள் பிரியதர்சினி

தமிழ் இலக்கியத்தில் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அறிவை, தெறிவை, பேரிளம்பெண் என்று வயதை வைத்து ஏழு பருவம் சொல்லப்படுகிறது. பெண்ணை கவிஞர், எழுத்தாளர், தலைமை நிர்வாகி, அரசியல்வாதி என்று சொல்லப்பட்டிருக்கிறதா? வயதை வைத்து வருகிற அடையாளம் மட்டும்தான் பெண்ணுக்கானதா? திறமையால் வருகின்ற வினைச்சொற்கள், தொழிற்பெயர்கள் எங்கே போயின?” என்கிற அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்தார், ஆண்டாள் பிரியதர்சினி.

“ஒரு பெண்ணின் மனதை சொல்வதற்கு ஆணின் மொழிதான் வேண்டி இருந்திருக்கிறது. மொழி என்பது பெண்களுக்கு கொடுக்கப்படவே இல்லை.

விவிலியத்திலும் குரானிலும் சொல்லப்பட்ட ஆதாம் – ஏவாள் நமக்குத் தெரியும். உலகிலேயே புரட்சி செய்த முதல் பெண் ஏவாள். ’நீ அந்த ஞானப்பழத்தை சாப்பிடக்கூடாது’ என்று அவளுக்குக் கட்டளையிடப்பட்டிருந்தது. ஆனால் அந்தக் கட்டளையை மீறினாள் ஏவாள். ’நான் எதை சாப்பிட வேண்டும் என்று நீ முடிவு செய்யாதே’ என்று ஆதியிலேயே புரட்சியை ஆரம்பித்துவைத்தவள் ஏவாள்.

அறிவுக்கடவுள் சரஸ்வதிக்கு கையில் ஏடு கொடுத்திருக்கிறோம். ஆனால், சரஸ்வதியே எழுதியதாகப் பதிவு இருக்கிறதா? அந்த ஏட்டை வைத்து அவள் படைக்கவில்லை, அவளைப் பற்றி படைத்தது உலகம். படைத்தது ஆண்கள். ஆண்கள் மொழியில்தான் இங்குள்ள இலக்கியங்கள், சட்டதிட்டங்கள் உருவாயின” என்றார் கவிஞர்.

இந்த ஒடுக்குமுறைகளையெல்லாம் மீறி கவிதை படைத்த பெண் கவிஞர்களின் படைப்புகளை வாசித்தவர், கவிஞர் பாலபாரதி எழுதிய,

அப்பா சமையல் செய்தார்

அம்மா பேப்பர் படித்தார்

அண்ணன் வீடு கூட்டினான்

தங்கை கிரிக்கெட் விளையாடினாள்

தப்பாக ஒப்பித்தேனாம்

ஆசிரியர் காதை திருகினார்

என்கிற கவிதையை வாசித்து, ’’ஒரு நூற்றாண்டுக்கு முன்பு இது தவறான கவிதை. காலங்கள் மாற பெண்ணின் மொழியும், கவிதையும் தேவைப்படுகிறது. தஸ்லிமா நஸ்ரின் ‘லஜ்ஜா’ என்கிற அவருடைய படைப்புக்காக அவருடைய தலைக்கு விலை வைக்கப்பட்டு, ஒவ்வோர் ஊராகச் சுற்றிக் கொண்டிருக்கிற இஸ்லாமிய தேசத்து கவிஞர். பெண்ணுணர்வுகளை சொல்லும் கவிஞர்.

மனித இயல்பு இவையெல்லாம்

நீ உட்கார்ந்தால், அவர்கள் சொல்வார்கள் – “உட்காரக் கூடாது”.

நீ நின்றால், “எதற்காக நிற்கிறாய், நட!”

நீ நடந்தால், “இது உனக்கு அவமானம், உட்கார்!”

ஒருவேளை நீ படுத்திருந்தால், அவர்கள் கவலைப்பட்டுக் கூறுவார்கள் – “எழுந்திரு”

கொஞ்சம் ஓய்வின்றி நீ படுக்கவில்லையென்றால்,“கொஞ்சம் படுத்துக்கொள்”.

எழுந்தும், அமர்ந்தும், என் நாட்கள் வீணாகிக் கொண்டிருக்கின்றன. இப்பொழுது நான் இறந்தால், அவர்கள் சொல்வார்கள் – “வாழு”

நான் வாழ்ந்தால், இப்படியும் அவர்கள் கூறுவார்கள் – “அவமானம் சாவு”

இப்பேரச்சத்திலேயே நான் மெளனமாக வாழ்ந்துகொண்டிருக்கிறேன்”

என்ற கவிதையை வாசித்து பெண்ணின் அக உணர்வுகளை விளக்கினார், கவிஞர் ஆண்டாள் பிரியதர்சினி.

சேலம் புத்தகத்திருவிழா

’’மனுநீதியில் பெண்ணுக்கான அடையாளமாக அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என்று சொல்கிறார்கள். அதை படித்த பின்பு, தந்தை பெரியாரை, அண்ணல் அம்பேத்கரை வாசித்த பின்புதான் எனக்குள்ளான பெரு நெருப்பு இன்னும் தீப்பிழம்பாக எரிந்துகொண்டிருக்கிறது. அதனால்தான், ஆண்டாள் யோசித்தாள்… அவள் எழுதினாள். ‘அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு எல்லாம் பழங்காலம். உச்சம், ஞானம், தடம், உயிர்ப்பு பெண்ணின் புதுக்கோலம்! இதுதான் பெண்ணின் மொழி. முன்பிருந்த அடிமை மொழி, ஆசுவாச மொழி, இருட்டு மொழி, அழுகல்மொழி பெண்ணுக்கு தேவையில்லை” என்று சுதந்திர உணர்வோடு பேசி முடித்தார், ஆண்டாள் பிரியதர்சினி.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.