ஃபேஷன் போட்டோகிராபரான விராஜ் (நானி) தன் மகள் மஹியோடும் (பேபி கியாரா கன்னா) மஹியின் தாத்தாவோடும் (ஜெயராம்) செல்லப்பிராணி புளூட்டோவோடும் மும்பையில் வசித்து வருகிறார். ஒருவித நுரையீரல் பிரச்னையால் (Cystic fibrosis – 65 Roses) பாதிக்கப்பட்டிருக்கும் தனது மகளை ரொம்பவே பத்திரமாக பார்த்துக் கொள்கிறார் விராஜ். வேலையில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தனது மகளோடு நேரம் செலவழிப்பதையே  முதன்மையாக வைத்திருக்கும் விராஜ், இரவில் மஹிக்கு கதை சொல்லித் தூங்க வைப்பது வழக்கம்.

அப்பா சொல்லும் கதைகளில் எப்போதுமே அம்மா கதாபாத்திரம் வராததால், அம்மா பற்றிய கதை வேண்டும் என அடம்பிடிக்கிறார் மஹி. அப்பா அதை தன்னிடம் சொல்லாமல் தவிர்த்து வருவதால் யாருக்கும் தெரியாமல் வீட்டைவிட்டு கிளம்பி விடுகிறார். வழியில் ஒரு விபத்தின் வழியாக யஷ்னாவை (மிருணாள் தாக்கூர்) சந்திக்க நேர்கிறது. அவரிடம் நடந்ததை எல்லாம் சொல்கிறார் மஹி. மகளைத் தேடி ஓடிவந்த விராஜிடம் அம்மாவின் கதையைச் சொல்ல வைக்கிறார் யஷ்னா. விராஜ் சொன்ன கதை என்ன, மஹியின் அம்மா யார், அம்மா ஏன் இவர்களோடு இல்லை, விராஜுக்கும் மஹிக்கும் இடையில் வரும் யஷ்னா யார் எனப் பல கேள்விகளுக்கான விடைதான் ‘ஹாய் நான்னா’. 

‘ஹாய் நான்னா’

‘நான்னா’வாக நானி. அப்பாவாக ஒரு லுக்; கணவராக ஒரு லுக் என இரண்டிலும் பயங்கர ஸ்மார்ட்டாக இருக்கிறார். சமீபத்திய படங்களில் அவரது தோற்றமும் கதாபாத்திரமும், அதை அவர் உள்வாங்கி நடிக்கும் விதமும் பாராட்டுக்குரியவை.

இந்தப் படத்திலும் நடிப்பில் அசத்தியிருக்கிறார். காதலனாக, கணவனாக, கறாரான அதே சமயம், குழந்தையின் உடல் நலம் குறித்தக் கவலையான, குழந்தை மீது உயிரையே வைத்திருக்கும் பாசம் மிக்க தந்தையாக அத்தனை எமோஷன்களிலும் சிக்ஸர் அடித்திருக்கிறார். ஆரம்பக்கட்டத்தில் ஜாலியான இளைஞனாகவே படங்கள் நடித்து, ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ இமேஜைப் பெற்ற நானி, தற்போது ஒரு தேர்ந்த நடிகராகத் திரையில் மிளிர்ந்து அப்ளாஸ் அள்ளுகிறார். இந்திய சினிமாவில் முக்கியமான நட்சத்திரங்கள் எல்லோரும் ஆக்‌ஷன், துப்பாக்கி, ரத்தம் என பக்கா பீஸ்ட் மோடில் இயங்கிக் கொண்டிருக்கும்போது, நானியின் கதைத் தேர்வும் அதை அவர் கையாளும் விதமும் அவரை தனித்துக் காட்டுகின்றன. வாழ்த்துகள் நானி காரு!

மிருணாள் தாக்கூர்

‘ஹாய் நான்னா’ படம் அப்பா – மகள் சம்பந்தப்பட்ட படமாக வெளியில் தெரிந்தாலும் நானிக்கு இணையான கதாபாத்திரம்தான் மிருணாள் தாக்கூருக்கும். ஒரு வழிப்போக்கராக அப்பா – மகளின் வாழ்க்கைக்குள் வரும் யஷ்னா, விராஜிடம் கதை கேட்கும் போது, தன்னை விராஜின் மனைவியாகவே நினைத்து கதை கேட்கிறார். அந்தக் கதைக்குள் விராஜின் காதலியாகவும் சரி, மனைவியாகவும் சரி தனது தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதிலும் குறிப்பாக பிரசவத்திற்கு பிறகு வரும் மருத்துவமனை காட்சியில் இவரின் நடிப்பு அட்டகாசம்!  திரையில் நடிப்பால் மிருணாள் ஜொலிக்கிறார் என்றால், திரைக்குப் பின்னால் தனது நேர்த்தியான டப்பிங்கின் மூலம் அவரது நடிப்பை மேலும் ஒருபடி கூட்டியிருக்கிறார் சின்மயி. ‘சீதா ராமம்’ படத்திற்குப் பிறகு, மிருணாள் தாக்கூரின் கரியரில் மற்றுமொரு நட்சத்திரம் இந்தப் படம். 

பேபி கியாரா கண்ணா, மஹி கதாபாத்திரத்திற்குச் சரியான தேர்வு என்றே சொல்லலாம். க்யூட்டான எக்ஸ்பிரஷன்ஸ் தொடங்கி கோபம், அழுகை, சோகம், சந்தோஷம், நகைச்சுவை என எல்லாமே நன்றாக வருகிறது. தனக்கான முக்கியத்துவத்தை உணர்ந்து நடித்ததற்கும் அதை வெளிக்கொண்டு வந்த இயக்குநர் சௌர்யுவ்வுக்கும் பாராட்டுகள்! நானி, மிருணாள், கியாரா கண்ணா இந்த மூவரும்தான் படத்தைத் தாங்குகிறார்கள். ஜெயராமுக்கு சிறிய கதாபாத்திரம்தான். ஆனாலும், அதன் மூலம் நடக்கும் திருப்பம் படத்தின் சுவாரஸ்யத்தைக் கூட்டியிருக்கிறது.

பேபி கியாரா கண்ணா

ஒளிப்பதிவில் சனு ஜான் வர்கீஸ் புகுந்து விளையாடியிருக்கிறார். மும்பை, கோவா, குன்னூர் என வெவ்வேறு லொக்கேஷன்களைத் தனது கேமரா கண்களால் மேலும் அழகாக்கி இருக்கிறார். ஷீத்தல் ஷர்மா, லக்‌ஷ்மி கிலாரியின் ஆடை வடிவமைப்பு படத்தை கிளாஸாக மாற்றியிருக்கிறது. மலையாளத்தில் ‘ஹிருதயம்’, தெலுங்கி ‘குஷி’ என மியூசிக்கல் ஹிட் கொடுத்த ஹீஷம் அப்துல் வஹாப், இந்தப் படத்தின் பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார். குறிப்பாக, தவில் இசையை வைத்து, கிளோசப் காட்சிகளிக் உணர்வுகளைக் கடத்தியது கவனிக்க வைக்கிறது. ஆனால், பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. சில பல இடங்களில் ‘ஹிருதயம்’ பட இசையும் ஞாபகத்துக்கு வருகிறது. 

ஃபீல் குட் கதையை நானியை வைத்து அழகாகச் சொன்னதற்கு அறிமுக இயக்குநர் செளர்யுவ்விற்கு பாராட்டுகள். கொஞ்சம் பிசகினாலும் கிரிஞ்ச்சாகிவிடும் ஆபத்து இருக்கும் எமோஷனலான காட்சிகளை நேர்த்தியாகக் கையாண்டிருக்கிறார். ஃபீல் குட் ஜானரில் கதை சொல்லலில் இருக்கும் சவாலே படத்தை வேகமாக நகர்த்துவதுதான். இந்தக் கதை சந்திக்கும் பிரச்னையும் அதுதான். மெதுவாகச் செல்லும் திரைக்கதையால், படம் அதிக நேரம் ஓடுவது போல் தோன்றுகிறது. அதிலும் குறிப்பாக முதல் பாதியின் நீளம், இடைவேளை எப்போது வரும் என வாய்விட்டு கேட்க வைக்கிறது.

நானி – மிருணாள் தாக்கூர்

இந்த ஜானர் மெதுவாக நகரும் திரைக்கதைதான் என்பதை எடிட்டர் பிரவீன் ஆண்டனி புரிந்துகொண்டு, எடிட்டிங்கில் கொஞ்சம் வேகம் கூட்டி விறுவிறுப்பாக்கி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். படத்தின் கதையோட்டம் ‘டாடா’, ‘தீபாவளி’ தொடங்கி சில தமிழ்ப் படங்களை ஞாபகப்படுத்துகின்றன. சில இடங்கள் எளிதில் யூகிக்க முடிந்ததாக இருப்பதும் மைனஸ். இப்படிச் சில குறைகள் ஆங்காங்கே இருந்தாலும், ‘ஹாய் நான்னா’ நம்மை ஈர்க்கவே செய்கிறது. 

நானி ஃபேன்ஸ்… இ சினிமா மீ அந்தரிக்கோசமே! 

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.