திரைப்படத்துறையில் பணிபுரிந்துவரும் ஃபயீஸ் அன்வர் குரேஷி என்பவர், கடந்த மாதம் மும்பை உயர் நீதிமன்றத்தில், `பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த திரைக்கலைஞர்களுடன் தொடர்பிலிருக்கும் இந்தியக் கலைஞர்கள் மற்றும் இந்திய நிறுவனங்களைத் தடைசெய்ய வேண்டும்’ எனக் கூறி, மனுத்தாக்கல் செய்திருந்தார். ஃபயீஸ் அன்வர் குரேஷியின் மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், அதைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதையடுத்து, உயர் நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து, ஃபயீஸ் அன்வர் குரேஷி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

அந்த மனு நவம்பர் 28-ம் தேதியன்று, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எஸ்.வி.என்.பாட்டி ஆகியோரின் அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அந்த மனுவில் ஃபயீஸ் அன்வர் குரேஷி, `பாகிஸ்தான் கலைஞர்களுக்கு இந்தியாவில் நிலவுகிற சாதகமான சூழல், பாகிஸ்தானில் பணிபுரியும் இந்தியக் கலைஞர்களுக்கு இல்லை. எனவே, இந்தியாவில் பாகிஸ்தான் கலைஞர்கள் பணியாற்றத் தடைவிதிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். விசாரணையின்போது, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை, ஃபயீஸ் அன்வர் குரேஷியின் வழக்கறிஞர் விமர்சித்து கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

மும்பை உயர் நீதிமன்றம்

அதையடுத்து நீதிபதிகள், “இது போன்று மேலும் செய்யாதீர்கள்…” என்று கூறிவிட்டு, “இவ்வளவு குறுகிய மனப்பான்மையுடன் இருக்காதீர்கள். இந்த விவகாரத்தை இதற்கு மேல் எடுத்துச் செல்ல முடியாது” என்று குறிப்பிட்டு, பாகிஸ்தான் திரைக்கலைஞர்கள், இசைக்கலைஞர்கள் இந்தியாவில் பணியாற்றுவதற்குத் தடை கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து, மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிசெய்தனர்.

முன்னதாக மும்பை உயர் நீதிமன்றம், “இந்த மனு இங்கே கோருகிற தீர்வு, கலாசார நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் அமைதியை மேம்படுத்துவதில் ஒரு பிற்போக்கான நடவடிக்கை என நீதிமன்றம் கருதுகிறது.

எனவே, அத்தகைய நடவடிக்கையை மேற்கொள்வதற்கான தேவை என்பது இங்கே இல்லை. ஒரு தேசபக்தராக இருப்பதற்கு, `வெளிநாட்டிலிருந்து, குறிப்பாக அண்டை நாட்டிலிருந்து வருபவர்களுக்கு விரோதமாக இருக்கவேண்டிய அவசியமில்லை’ என்பதை ஒருவர் புரிந்துகொள்ள வேண்டும்.

உச்ச நீதிமன்றம்

கலை, இசை, விளையாட்டு, கலாசாரம், நடனம் போன்றவை தேசியம், கலாசாரம் மற்றும் தேசங்களுக்கு மேலாக உயர்ந்து, நாடுகளுக்கு இடையே உண்மையிலேயே அமைதி, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கின்றன. எனவே, இத்தகைய நடவடிக்கைக்கு உத்தரவிட முடியாது” எனக் குறிப்பிட்டு, ஃபயீஸ் அன்வர் குரேஷியின் மனுவைத் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.