பளிச்சென இருக்கும் முகத்தில் திடீரென தோன்றும் பருக்கள் பதறவைக்கும். அதுவும் விசேஷ தினங்களில் எனில் மனம் வாடிவிடும். அதை எப்படி சரிசெய்வது என வழிகளைத் தேடவைக்கும். பரு வந்த பின் சரிசெய்யக் கஷ்டப்படுவதைவிட, பரு வருவதற்கு முன்பே அதைத் தவிர்ப்பதற்கான வழிகளைப் பார்க்கலாம்.

1. முகம் கழுவுதல்

வெளியில் சென்று வந்தவுடன் மட்டுமல்ல… வீட்டிலேயே இருந்தாலும் குறைந்தபட்சம் ஒரு நாளில் மூன்று முறை முகம் கழுவவும். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகளும் எண்ணெய்ப்பசையும் நீங்கி முகம் சுத்தமாகும், பொலிவாகும். பருக்கள் வராமல் இருப்பதற்கு முகம் சுத்தமாக இருப்பது மிக அவசியம்.

2. உணவு

நல்ல சத்தான உணவு உண்ணவும். நிறைய தண்ணீர் அருந்தவும். தேவையான அளவு தண்ணீர் அருந்தும்போது உடலில் உள்ள கழிவுகள் வெளியேறி, உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். முகம் பொலிவு பெறும். மேலும் பருவைத் தவிர்க்க மாவுச்சத்து, இனிப்பு, எண்ணெய் குறைவான உணவுகளை உண்ணவும். ஜங்க் உணவுகளைத் தவிர்க்கவும்.

Skin care

3. மாய்ஸ்சரைஸர்

முகம் எண்ணெய் பசை இல்லாமல் இருக்க வேண்டும். அதே நேரம், முகத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். ஈரப்பதம் இல்லை என்றால், செபேஷியஸ் (Sebaceous) சுரப்பிகள் எண்ணெய் மற்றும் சீபத்தை (Sebum) உற்பத்தி செய்து, பருக்கள் உண்டாகும் வாய்ப்பை அதிகப்படுத்தும். ஆயில் ஃப்ரீ மாய்ஸ்சரைஸரை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும். தெளிவான சருமத்திற்கு க்ளென்ஸிங், டோனிங், மாய்ஸ்சரைஸிங் என்ற அழகு பராமரிப்பு நடவடிக்கையைத் தினமும் மேற்கொளவும்.

4. மேக்கப்

பரு பிரச்னை உள்ளவர்கள் முடிந்தவரை அழகு சாதனப் பொருள்கள் பயன்படுத்துவதைக் குறைத்துக்கொள்ளவும். பிளஷ், ஃபவுண்டேஷன் போன்றவை சருமத் துளைகளை அடைத்துக்கொள்ளும் தன்மை வாய்ந்தவை என்பதால், இவற்றை தேவை முடிந்ததும் கழுவி விடவும். ஆயில் ஃப்ரீ காஸ்மெடிக்ஸ், மற்றும் சருமத் துளைகளை அடைக்காத, `non comedogenic’ என்று குறிப்பிடப்பட்ட அழகு சாதனப் பொருள்களைப் பார்த்து வாங்கிப் பயன்படுத்தவும்.

Skin care (Representational Image)

5. உடற்பயிற்சி

தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சி மேற்கொள்ளவும். உடற்பயிற்சி உடலில் உள்ள ஹார்மோன்களின் அளவைப் பராமரிக்கும் மற்றும் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றும். அது பருக்களைத் தவிர்க்க வைக்கும். உடற்பயிற்சியின்போது, தளர்வான ஆடைகளை அணிந்து பயிற்சி மேற்கொள்ளவும். உடற்பயிற்சி முடிந்த பின் குளிக்கவும்.

6. தலையில் எண்ணெய்ப்பசை

அடிக்கடி முகத்தைக் கழுவி எண்ணெய்ப் பசை இல்லாமல் வைத்திருந்தாலும் பருக்கள் வருகிறது என்றால், தலை (Scalp), கேசத்தைக் கவனிக்க வேண்டும். தலை, கேசத்தில் எண்ணெய்ப் பசை இருந்தாலும் அது முகத்தையும் எண்ணெய்ப் பசை ஆக்கும். எனவே, தலையை அடிக்கடி அலசவும். ஹேர் ஜெல், டியோடரன்ட்கள் சருமத் துளைகளை அடைக்கும் என்பதால் பரு பிரச்னை உள்ளவர்கள் தவிர்க்கவும்.

7. பருக்களைத் தொடுவதை தவிர்க்கவும்

பரு வந்தால் அதைத் தொட்டுக்கொண்டே இருப்பதைத் தவிர்க்கவும். ஏனெனில், பருவை தொடும்போது அந்த பேக்டீரியா மேலும் பரவும். பருக்களை அழுத்தும்போது அந்த இடத்தில் வடு, தழும்பு உருவாகவும் வாய்ப்புள்ளது என்பதால் அதைச் செய்யவே கூடாது.

8. படுக்கை சுத்தம்

தலையணை, படுக்கைவிரிப்பு, மெத்தையை அடிக்கடி சுத்தம் செய்யவும். துவைத்த, சுத்தமான டவலைப் பயன்படுத்தவும். இவையெல்லாம் பாக்டீரியா பரவுவதைத் தடுக்கும். அதேபோல, மேக்கப் பிரஷ், ஸ்பாஞ் போன்ற முகத்துக்குப் பயன்படுத்தும் அழகு சார்ந்த பொருள்களையும் சுத்தமாகப் பராமரிக்கவும்.

Woman (Representational Image)

9. சூரிய ஒளியைத் தவிர்க்கவும்

சூரியனில் இருந்து வரும் புற ஊதா கதிர்கள் முகத்தில் கருமையை ஏற்படுத்தும், சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே வெளியே செல்லும்போது முகத்தை மறைக்கும்படி தொப்பி, ஷால் என அணியவும். எஸ்.பி.எஃப் 30 (SPF 30) உள்ள சன்ஸ்கிரீன் பயன்படுத்தவும். அது `non comedogenic’ ஆக இருப்பதை லேபிளில் பார்த்து உறுதிசெய்து வாங்கவும்.

10. மன அழுத்தம்

மன அழுத்தம் இருந்தாலும் முகத்தில் பருக்கள் தோன்றும். எனவே, முடிந்தவரை மனதை ரிலாக்ஸ்டாக வைத்துக் கொள்ளவும்.

மேற்சொன்னவற்றை எல்லாம் பின்பற்றி வந்தால் பருக்களைத் தவிர்க்கலாம். ஒருவேளை கட்டுப்படுத்த முடியவில்லை எனில் சரும மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.