உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி நாளை அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதப்போகும் இந்தப் போட்டியில் பணியாற்றவிருக்கும் நடுவர்களை ஐ.சி.சி இப்போது அறிவித்திருக்கிறது. அந்த அம்பயர்களைக் கண்டு இந்திய ரசிகர்கள் கொஞ்சம் கலக்கத்தில் இருக்கின்றனர். காரணம் என்ன?

இங்கிலாந்தைச் சேர்ந்த ரிச்சர்ட் இல்லிங்வொர்த்தும் ரிச்சர்ட் கெட்டில்பாரோவும்தான் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் களநடுவர்களாகச் செயல்படுவார்கள் என ஐ.சி.சி அறிவித்திருக்கிறது. இந்த இருவரில் ரிச்சர்ட் கெட்டிபாரோவைக் கொஞ்சம் ராசியில்லாத நடுவராக இந்திய ரசிகர்கள் பார்க்கின்றனர். காரணம், சமீபத்தில் இந்திய ரசிகர்கள் இதயம் நொறுங்கிய தருணங்களிலெல்லாம் களத்தில் இந்த கெட்டில்பாரோதான் நடுவராக இருந்திருக்கிறார்.

Richard Kettleborough

கடந்த உலகக்கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் தோனியின் ரன் அவுட் ஞாபகமிருக்கிறதா? இன்றைக்கு வரைக்கும் இந்திய ரசிகர்களால் அந்த ரன் அவுட்டையும் அதன்வழி விளைந்த தோல்வியையும் ஜீரணிக்க முடியவில்லை. அந்தப் போட்டியில் களநடுவராகச் செயல்பட்டவர் கெட்டில்பாரோதான்.

அதுமட்டுமல்ல 2014 டி20 உலகக்கோப்பையில் இறுதிப்போட்டியில் இலங்கைக்கு எதிராகத் தோற்றபோது, 2015 உலகக்கோப்பையின் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராகத் தோற்றபோது, 2017-ல் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராகத் தோற்ற போது என இந்தியாவின் சோகத் தருணங்கள் அத்தனையிலும் கெட்டில்பாரோ இருந்திருக்கிறார். நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை தோற்ற போது டிவி அம்பயராக இருந்தவரும் கெட்டில்பாரோதான். இதனால்தான் இந்திய ரசிகர்கள் பதறுகின்றனர். நடக்கப் போகும் இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு எந்தவித அசம்பாவிதமும் நிகழ்ந்துவிடக்கூடாது என வேண்டிக் கொண்டிருக்கின்றனர்.

Richard Kettleborough

ஆனால், இதெல்லாம் அடிப்படையேயற்று வெறுமென வேடிக்கைக்காக மட்டும் இணையத்தில் ட்ரெண்டடிக்கும் வேலையாக மட்டும்தான் பார்க்க வேண்டும். கெட்டில்பாரோ பெரும் அனுபவமிக்க நடுவர். நடப்பு உலகக்கோப்பையில்தான் நடுவராகத் தனது 100வது ஓடிஐ போட்டியை நிறைவு செய்தார். நடப்பு உலகக்கோப்பை உட்படக் கடந்த 3 உலகக்கோப்பைகளின் அரையிறுதியிலும் பணியாற்றியிருக்கிறார். ஆக, கெட்டில்பாரோ சார்ந்து பகிரப்படும் மீம்களையெல்லாம் ‘பிளேடு மேல வச்ச நம்பிக்கையை…’ என்கிற பாணியில் வேடிக்கையாகக் கடந்துவிடலாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.