சகாரா குரூப் நிறுவனர் சுப்ரதா ராய் உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வந்தார். அவரின் உடல்நிலை மோசம் அடைந்ததைத் தொடர்ந்து மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு நேற்று இரவு 12 மணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

அவருக்கு வயது 75. நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு இருந்த சுப்ரதா ராய் சகாரா சிட்பண்ட் மோசடியில் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் தற்போது ஜாமீனில் இருந்து வந்தார்.

மறைந்த சுப்ரதா ராய்க்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். மகன்கள் இரண்டு பேரும் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். சுப்ரதாவின் உடல் நாளை லக்னோவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு நாளை மறுநாள் இறுதிச்சடங்கு நடைபெறும் என்று சத்யா பவுண்டேஷன் செயலாளர் சேதன் தெரிவித்துள்ளார்.

பீகாரை பூர்வீகமாகக் கொண்ட சுப்ரதா ராய் 1978-ம் ஆண்டு சகாரா இந்தியா பரிவார் நிறுவனத்தை வெறும் 2,000 ரூபாயில் ஆரம்பித்தார். சுப்ரதா ராய் குடும்பம் பின்னர் லக்னோவுக்கு இடம் பெயர்ந்தது. இதையடுத்து தனது கம்பெனியின் தலைநகரத்தை லக்னோவுக்கு மாற்றிக்கொண்டார் சுப்ரதா ராய். சிட்பண்ட், ஏர்லைன்ஸ், டிவி, மீடியா, ரியல் எஸ்டேட், கல்வி, சுற்றுலா என்று அவர் கைவைக்காத தொழிலே கிடையாது. ஆனால், சுப்ரதா ராய் 2010-ம் ஆண்டுகளில் நிதி நெருக்கடியில் சிக்க ஆரம்பித்தார்.

சுப்ரதா ராய்

சிட்பண்ட் மோசடி பெரிய அளவில் பேசப்பட்டது. இந்திய கிரிக்கெட் அணிக்கு பல ஆண்டுகளாக ஸ்பான்சர்ஷிப் வழங்கி வந்த சகாரா நிறுவனம் பொது மக்களிடம் சட்டவிரோதமாக டெபாசிட்களை பெற்றதாக கூறி வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் சகாரா நிறுவனத்திடமிருந்து பணத்தை பறிமுதல் செய்து முதலீட்டாளர்களுக்கு கொடுக்கும்படி அமலாக்கப்பிரிவு மற்றும் செபிக்கு சுப்ரீம் கோர்ட் 2012-ம் ஆண்டு உத்தரவிட்டது. இதையடுத்து சகாரா நிறுவனம் தொடர்ந்து கோர்ட் வழக்குகளை சந்தித்தது.

2014-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட சுப்ரதா ராய் 2016-வது ஆண்டு ஜாமீனில் வெளியில் வந்தார். சுப்ரீம் கோர்ட் ஜாமீன் கொடுத்தபோது 5,000 கோடி ரொக்கமாகவும் 5,000 கோடி வங்கி உத்தரவாதமாகவும் செலுத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்த நிதியை திரட்ட வெளிநாட்டில் உள்ள சொத்துகளை விற்பனை செய்ய சுப்ரதா ராய்க்கு சிறையில் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.

சகாரா இந்தியா பரிவார்

10,000 கோடி ஜாமீன் தொகையை கொடுக்க முடியாமல் பல மாதங்கள் சிறையில் இருந்தார். 20,000 கோடி வரை பொதுமக்களிடம் வசூலித்து இருப்பதாக சகாரா நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டது. சுப்ரதா ராய் தன் இரண்டு மகன்களுக்கும் மிகப்பிரமாண்டமாகத் திருமணம் நடத்தியது பெரிய அளவில் பேசப்பட்டது.

சமீபத்தில் சகாரா முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப கொடுக்க இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டது. இதில் முதலீட்டாளர்கள் முதலீடுகளைத் திரும்ப கேட்டு விண்ணப்பித்தால் 45 நாளில் திரும்ப பெற முடியும் என்று அறிவிக்கப்பட்டது. சுப்ரதா ராய் மரணத்துக்கு சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.