ஒரு நூற்றாண்டைக் கடந்து வாழ்ந்துவந்த சுதந்திரப் போராட்ட வீரரும், முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவருமான தோழர் சங்கரய்யா 102 வயதில் இன்று மறைந்தார். உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சங்கரய்யா, உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக உயிர் பிரிந்தது. இவரின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட உள்ளது.

தோழர் சங்கரய்யா

தோழர் சங்கரய்யா!

1922, ஜுலை 15-ல் பிறந்த சங்கரய்யா, இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில், தனது பொது வாழ்க்கையைத் தொடங்கினார். அப்போது பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக மாணவர்களை ஒன்று திரட்டி போராட்டங்களை நடத்திய சங்கரய்யா, பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு தோழர் சங்கரய்யாவாக உருவெடுத்தார்.

தோழர் சங்கரய்யா

“நீங்கள் படித்து வேலைக்கு போகவில்லையே ஏன்?’’ என்று கேட்டபோது, “We are not Job hunters. We are freedom hunters” (நாங்கள் வேலைக்காகப் போராடுபவர்கள் அல்ல; விடுதலைக்காகப் போராடுபவர்கள்) என இளம் வயதிலேயே கூறினார் சங்கரய்யா. சுதந்திரப் போராட்ட காலத்தில் நான்கு ஆண்டுகள் சிறை வாழ்க்கை, விடுதலைக்குப் பிறகு நான்கு ஆண்டுகள் சிறை வாழ்க்கை, மூன்றாண்டுக் காலம் தலைமறைவு வாழ்க்கை எனப் பல தியாகங்களைச் செய்து, தன் வாழ்நாள் முழுவதையும் உழைப்பாளி மக்களுக்கு அர்ப்பணித்தவர் சங்கரய்யா.

இவை மட்டுமல்லாது சாதி ஒழிப்பிலும் தீவிரமாக இருந்த சங்கரய்யா, “இளைஞர்களே, இளம் பெண்களே காதலியுங்கள்! காதலித்து சாதி, மறுப்பு திருமணங்கள் செய்து கொள்ளுங்கள்!” என்று வெளிப்டையாகப் பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தோற்றுவித்தவர்களில் இவரும் முக்கியமானவர்.

தோழர் சங்கரய்யா

மூன்றுமுறை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியிருக்கும் சங்கரய்யா, 1968-ல் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக்கிட தீர்மானத்தை அண்ணா முன்மொழிந்தபோது, `தமிழை ஆட்சி மொழி ஆக்கிட தீர்மானம் நிறைவேற்றினால் மட்டும் போதாது; பாட மொழியாக, நீதிமன்ற மொழியாக, நிர்வாக மொழியாக தமிழை ஆக்குவதோடு அடுத்த 5 ஆண்டுகளில் இதற்கான அடிப்படை கட்டமைப்புகளையும் அரசு உருவாக்கிட வேண்டும்’ என்ற திருத்தத்தை முன்வைத்தார். இந்தத் திருத்தம் அண்ணாவால் ஏற்றுக்கொள்ளப்பட்டு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

தோழர் சங்கரய்யா

`சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டதே பெரிய பரிசு’ என அரசு சார்பில் சுதந்திரப் போராட்ட வீரருக்கான பென்ஷனைக் கூட ஏற்றுக்கொள்ளாத சங்கரய்யா, 2021-ல் தமிழ்நாடு அரசு தகைசால் விருது கொடுத்தபோது, தனக்கு வழங்கப்பட்ட ரூ.25 லட்சத்தைக் கூட `ஏழைகளுக்கு உதவுங்கள் என திருப்பிக்கொடுத்துவிட்டார்.

1947-க்கு முன்னும் பின்னும் மக்களுக்காகவே தோழர் சங்கரய்யாவாக குரல்கொடுத்துக்கொண்டிருந்தவர், சுதந்திரம், மக்கள் உரிமை, தொழிலாளர் நலன், வறுமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு எனக் களமாடிய அனைத்தும் இன்னும் பல நூற்றாண்டுகள் வரலாற்றில் நிலைத்து இருக்கும்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.